herzindagi
image

Dies Irae OTT Release Date: விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற 'டைஸ் ஐரே' திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Dies Irae OTT Release: விமர்சகர்கள் பாராட்டுகளை பெற்ற 'டைஸ் ஐரே' மலையாள திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரணவ் மோகன்லால் நடித்திருந்தார்.
Editorial
Updated:- 2025-12-01, 13:09 IST

Dies Irae Movie: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த 'டைஸ் ஐரே' திரைப்படம், ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை ஓடிடியில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

'டைஸ் ஐரே' திரைப்படம்:

 

இந்த திரைப்படத்தை ராகுல் சதாசிவன் இயக்கி இருந்தார். மலையாளத்தில் அமானுஷ்யங்கள் நிறைந்த பேய்ப்படங்கள் இயக்குவதில் முதன்மையான இயக்குநராக கருதப்படுபவர் ராகுல் சதாசிவன். இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு ரெட் ரெயின் (Red Rain) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். விமர்சன ரீதியாக இப்படம் பாராட்டுகளை பெற்றாலும், வர்த்தக ரீதியாக வரவேற்பை பெறவில்லை. இந்த சூழலில், இவர் இயக்கிய பூதகாளம் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு முன்னணி நடிகரான மம்மூட்டியை கொண்டு இவர் இயக்கிய திரைப்படம் பிரம்மயுகம்.

 

இப்படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, முற்றிலும் கருப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், மம்மூட்டியின் நடிப்பு பெரும் பாராட்டுகளை பெற்றது. இதற்காக கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது மம்மூட்டிக்கு கிடைத்தது. இதனால், ராகுல் சதாசிவனின் அடுத்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. அதன்படி, முன்னணி நடிகரான மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் 'டைஸ் ஐரே' என்ற திரைப்படத்தை ராகுல் சதாசிவன் இயக்கினார்.

மேலும் படிக்க: The Girlfriend OTT Release Date: ஓடிடியில் வெளியாகும் ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் ஃப்ரண்ட் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

'டைஸ் ஐரே' படத்தின் கதைச்சுருக்கம்:

 

கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'டைஸ் ஐரே'. இப்படத்தில் கட்டடக் கலைஞராக ரோஹன் என்ற கதாபாத்திரத்தில் பிரணவ் மோகன்லால் நடித்திருந்தார். இதில் தனது காதலி தற்கொலை செய்ததை அறிந்த ரோஹன், அவரது வீட்டிற்கு சென்ற போது, அவரது நினைவாக சிவப்பு நிற ஹேர் க்ளிப்பை-ஐ (Hair Clip) தனது வீட்டிற்கு எடுத்து வருகிறார். இதில் இருந்து தனது வீட்டில் பல்வேறு விதமான அமானுஷ்யங்களை ரோஹன் உணரத் தொடங்குகிறார்.

 

இதற்கான காரணங்கள் என்னவென்றும், இதில் இருந்து ரோஹனால் தப்பித்துக் கொள்ள முடிந்ததா என்பதையும் இப்படத்தில் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி இருந்தனர். இப்படம் வெளியானது முதல் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, சமீபத்தில் வெளியான பேய்ப்படங்களில் இருந்து தனித்து தெரிந்ததாக பலரும் கூறினார். இப்படம் வசூல் ரீதியாகவும் லாபத்தை ஈட்டியது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், 'டைஸ் ஐரே' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது இருக்கும் என்று மலையாளம் மட்டுமின்றி பல்வேறு மொழி ரசிகர்களும் காத்திருந்தனர்.

மேலும் படிக்க: Arasan: வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் அரசன் திரைப்படத்தில் இணைந்த விஜய் சேதுபதி; சர்ப்ரைஸ் கொடுத்த கலைப்புலி தாணு

 

'டைஸ் ஐரே' ஓடிடி வெளியீடு:

 

இந்த சூழலில் 'டைஸ் ஐரே' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 5-ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'டைஸ் ஐரே' திரைப்படம் வெளியாக இருக்கிறது. குறிப்பாக, மலையாளம் மட்டுமின்றி தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. இதனால், இப்படத்தை திரையரங்கில் காண தவற விட்டவர்களும், மீண்டும் இப்படத்தை காண ஆவலாக இருந்தவர்களும் தற்போது ஓடிடி வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர். திரையரங்குகளில் வெளியான போது இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ஓடிடி வெளியீட்டின் போதும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com