herzindagi
image

Dhurandhar: ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் தெய்வத்திருமகள் சாரா; வயது வித்தியாசம் தொடர்பாக கேள்வி எழுப்பும் விமர்சகர்கள்

Dhurandhar: ரன்வீர் சிங் நடிப்பில் வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் துரந்தர் என்ற பாலிவுட் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன சாரா அர்ஜுன், கதாநாயகியாக நடிக்கிறார். 
Editorial
Updated:- 2025-11-19, 13:50 IST

Dhurandhar: பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துரந்தர். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஸ்பை-ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

இந்த ட்ரெயிலர் வெளியானது முதல் வரவேற்பையும், விமர்சனத்தையும் பார்வையாளர்கள் இடையே பெற்று வருகிறது. நான்கு நிமிட ட்ரெயிலரில் இருந்து கதையின் கருவை கண்டறிய முடியாத வகையில் அமைத்திருப்பதாக சிலர் பாராட்டுகின்றனர். இது தவிர இப்படத்தில் அதீத வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

 

சாரா அர்ஜுன்:

 

இது மட்டுமின்றி மற்றொரு அம்சமும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. அதன்படி, ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடிகர் விக்ரமிற்கு மகளாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதன் 18-ஆம் தேதி பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனுக்கு மகளாக பிறந்தவர் சாரா. இவர் சுமார் 6 வயதுக்கு முன்பாகவே விளம்பரங்களில் நடித்துள்ளார்.

 

இதைத் தொடர்ந்து, ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் மகளாக சாரா நடித்தார். தந்தை மற்றும் மகளின் பாசப்பிணைப்பை போற்றும் வகையில் உருக்கமான காட்சியமைப்புடன் வெளியான இப்படம், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக, விக்ரமின் நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பு சாராவிற்கும் கிடைத்தது. இதேபோல், சைவம் என்ற திரைப்படத்திலும் சாராவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

Sara Arjun in Deivathirumagal

மேலும் படிக்க: Diesel OTT Release Date: ஓடிடியில் வெளியாகும் ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த சாரா:

 

இதன் தொடர்ச்சியாக, தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சாரா தொடர்ந்து நடித்தார். இவ்வாறு பல்வேறு திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்த சாராவிற்கு, மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. வரலாற்று பின்னணியில் புனைவாக உருவான கல்கியின் புகழ்பெற்ற நாவலை, திரைப்படமாக மணிரத்னம் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தனர்.

 

இதில், நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான நந்தினியின், இளம் வயது பாத்திரத்தில் சாரா நடித்தார். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக, இந்த இளம் வயது கதாபாத்திரத்திற்கு சாரா பொருத்தமாக இருந்ததாக பலரும் கூறினர். இதைத் தொடர்ந்து, சாராவின் அடுத்தகட்ட சினிமா பயணம் எவ்வாறு இருக்கும் என்ற ஆர்வமும் பார்வையாளர்கள் இடையே எழுந்தது.

 

ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் சாரா:

 

இந்த சூழலில் தான் துரந்தர் திரைப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சாரா நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தின் டீசர், ட்ரெயிலர் ஆகியவற்றில் சாராவின் காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். ரன்வீர் சிங் மற்றும் சாரா ஆகிய இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Sara Arjun in Dhurandhar

மேலும் படிக்க: Bison OTT Release Date: மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படத்தை எந்த ஓடிடி தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

ஏறத்தாழ ரன்வீர் சிங் மற்றும் சாரா இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் இருப்பதை பலர் சுட்டிக்காட்டுகின்றனர். பல்வேறு முன்னணி நடிகர்களும், இளம் கதாநாயகிகளுடன் ஜோடியாக நடிப்பது சினிமா உலகில் இயல்பான விஷயமாக இருக்கிறது. எனினும், சாராவை குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழகியதால், இந்த விவகாரம் பேசுபொருளாக மாறி இருக்கிறது. அதேபோல், சினிமாவில் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை எனவும், நடிப்பு திறமை மட்டுமே இதனை தீர்மானிக்கிறது என்றும் சிலர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கின்றனர்.

 

இந்நிலையில், குழந்தை நட்சத்திரமாக நன்கு அறியப்பட்ட சாரா, கதாநாயகியாக எவ்வாறு மக்கள் மனதில் இடம்பிடிப்பார் என்பதை துரந்தர் திரைப்படம் வெளியான பின்னர் தான் அறிந்து கொள்ள முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: YouTube

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com