herzindagi
image

Friday OTT Releases: ஸ்டீஃபன் முதல் தி கேர்ள் ஃப்ரண்ட் வரை; இந்த வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்

OTT Releases This Week: ஸ்டீஃபன் முதல் தி கேர்ள் ஃப்ரண்ட் வரை இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியலை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-12-04, 12:12 IST

OTT Releases in Tamil: ஒவ்வொரு வார இறுதியிலும், திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை பார்ப்பதற்கு காத்திருக்கும் ரசிகர்களை போலவே, ஓடிடி வெளியீட்டிற்காகவும் காத்திருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனடிப்படையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் என்னவென்று காண்போம்.

வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்; ஸ்டீஃபன் முதல் தி கேர்ள் ஃப்ரண்ட் வரை:

 

இந்த வாரம் ஓடிடி பிரியர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது என்றே கூறலாம். நேரடி ஓடிடி வெளியீடு, டப் செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் சீர்ஸ் என உங்களை மகிழ்விக்க காத்திருக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக காணலாம்.

 

ஸ்டீஃபன் ஓடிடி வெளியீடு:

 

இந்த வரிசையில் முதல் இடத்தை பெறுவது ஸ்டீஃபன் திரைப்படம். ஏனெனில், இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஏற்கனவே, திரையரங்குகளில் வெளியாகி பின்னர் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் கதை உள்ளிட்ட விவரங்கள் பார்வையாளர்களுக்கு தெரியும். ஆனால், இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகரித்து இருக்கிறது.

ஸ்டீஃபன் திரைப்படம் சீரியல் கில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அதன் ட்ரெய்லரில் இருந்து உணர முடிகிறது. 9 பெண்கள் காணாமல் போன சம்பவத்திற்கும், இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பதையும் கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மிதுன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில், மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட், கோமதி சங்கர், விஜயஸ்ரீ மற்றும் ஷ்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

மேலும் படிக்க: Arasan: வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் அரசன் திரைப்படத்தில் இணைந்த விஜய் சேதுபதி; சர்ப்ரைஸ் கொடுத்த கலைப்புலி தாணு

 

தி கேர்ள் ஃப்ரண்ட் ஓடிடி வெளியீடு:

 

பான் இந்தியன் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவின் மாறுபட்ட நடிப்பில் உருவான திரைப்படம் தி கேர்ள் ஃப்ரண்ட். இந்த திரைப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கி இருந்தார். ஆண் மற்றும் பெண் இடையே நிகழும் உறவுமுறை சிக்கல்களையும், இதில் ஆணாதிக்கத்தின் மனநிலையையும் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து இப்படம் காட்சிப்படுத்தி இருந்ததாக விமர்சகர்கள் கூறி இருந்தனர்.

இந்த திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், தி கேர்ள் ஃப்ரண்ட் திரைப்படம் நாளைய தினம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாவதால், ஓடிடியில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க: Dhurandhar: ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் தெய்வத்திருமகள் சாரா; வயது வித்தியாசம் தொடர்பாக கேள்வி எழுப்பும் விமர்சகர்கள்

 

டைஸ் ஐரே ஓடிடி வெளியீடு:

 

இந்த வரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக டைஸ் ஐரே அமைந்துள்ளது. ராகுல் சதாசிவன் இயக்கிய இப்படத்தில், மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடித்திருந்தார். முன்னதாக, ராகுல் சதாசிவன் இயக்கத்தில் வெளியான பூதகாளம், பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றன.

குறிப்பாக, பிரம்மயுகம் திரைப்படம் முற்றிலுமாக கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்ட நிலையில், அவருக்கு கேரள மாநில அரசு சார்பாக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதனால், டைஸ் ஐரே திரைப்படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு ஏற்ற வகையில், இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது மட்டுமல்லாமல், வர்த்தக ரீதியாக வரவேற்பையும் பெற்றது. அமானுஷ்யங்கள் நிறைந்த பேய்ப்படமாக உருவாக்கப்பட்ட இதனை, நாளை முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கண்டு மகிழலாம்.

குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்:

 

இந்த வரிசையில், குற்றம் புரிந்தவன் என்ற வெப் சீரிஸ் (இணையத் தொடர்) நாளை, சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. செல்வமணி முனியப்பன் இயக்கி இருக்கும் இந்த வெப் சீரிஸில் பசுபதி, விதார்த், லிஸ்ஸி ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 8 எபிசோடுகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ், த்ரில்லர் பாணியில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

தமிழில் பல வெப் சீரிஸ்கள் அண்மையில் வெளியாகி இருந்தாலும், இதன் மீது ரசிகர்களின் கவனம் திரும்பி இருக்கிறது. ஏனெனில், பசுபதி, விதார்த் ஆகியோர் மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால், இந்த வெப் சீரிஸில் இவர்களது நடிப்பு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.

 

இந்த திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் அனைத்தையும் நாளை முதல் அந்தந்த ஓடிடி தளங்களில் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com