ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்து பார்க்கப் போகும் உணவு கேரா ஸ்டைல் புட்டு மற்றும் கடலை கறி. கேரளாவுக்கு நீங்கள் சுற்றுலா சென்றால் கட்டாயம் ருசித்து பார்க்க வேண்டிய உணவு என இதை குறித்து வையுங்கள். காலை வேளையில் இதை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இதை வீட்டிலேயே ஒரு மணி நேரத்தில் எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.
![kerala special puttu kadala curry]()
புட்டு & கடலை கறி செய்யத் தேவையானவை
- கொண்டைக்கடலை
- வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை
- தேங்காய் துருவல்
- மிளகாய் தூள்
- கொத்தமல்லி தூள்
- மஞ்சள் தூள்
- ஏலக்காய்
- இலவங்கப்பட்டை
- பெருஞ்சீரகம்
- கடுகு
- மஞ்சள் தூள்
- காய்ந்த மிளகாய்
கவனம் கொள்க
கருப்பு கொண்டைக்கடலையை தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள்.
மேலும் படிங்க கேரளா ஸ்டைல் அலப்பி மீன் கறி செய்முறை
புட்டு & கடலை கறி செய்முறை
- ஒரு குக்கரில் ஊற வைத்த 250 கிராம் கொண்டைக் கடலையை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு விசில் அடிக்கும் வரை வேக வைக்கவும்.
- அதன் பிறகு கொண்டைக்கடலை நன்கு வெந்துவிட்டதா இல்லையா என்பதை சரிபார்க்கவும். இதில் 200 கிராம் கொண்டைக் கடலையை தனியாகவும், 50 கிராம் கொண்டைக் கடலையையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
- இப்போது மிக்ஸியில் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம், இரண்டு இலவங்கப்பட்டை, இரண்டு ஏலக்காய் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைக்கவும்
- அதே போல வேக வைத்த 200 கிராம் கொண்டைக் கடலையையும் பத்து விநாடிகளுக்கு அரைத்துவிடவும்.
- தற்போது கடாயில் கடலெண்ணெய் ஊற்றி அரை கப் தேங்காய் துருவல், நறுக்கிய நான்கு மீடியம் சைஸ் வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சில நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.
- இவற்றுடன் கொஞ்சம் கறிவேப்பிலையும் சேருங்கள். அடுத்ததாக கொத்தமல்லி தூள் ஒரு டீஸ்பூன், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கவும்.
- இதன் பிறகு அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் மிக்ஸியில் அரைத்த மசாலா பொருட்களை சேர்க்கவும்.
- பச்சை வாடை போகும் வரை தொடர்ந்து வதக்குங்கள். இப்போது மிக்ஸியில் அரைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
- இப்போது மீதமுள்ள வேகவைத்த 50 கிராம் கொண்டைக்கடலையை சேருங்கள்.
- மற்றொரு கடாயில் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு தாளிக்கவும்.
- நான்கு காய்ந்த மிளகாய் மற்றும் நறுக்கிய இரண்டு மீடியம் சைஸ் வெங்காயம் சேர்க்கவும்.
- நன்கு வதக்கிய பிறகு இவற்றை கொண்டைக்கடலை கறி பாத்திரத்தில் போட்டு கிளறிவிட்டால் கடலை கறி தயார்.
- புட்டு வேக வைக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு 200 கிராம் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசையவும்
- தண்ணீர் கொதித்த பிறகு புட்டு பாத்திரத்தில் முதலில் கொஞ்சம் தேங்காய் துருவலை நிரப்புங்கள், அதன் பிறகு புட்டு நிரப்பி மீண்டும் இறுதியில் கொஞ்சம் தேங்காய் துருவல் சேர்த்து மூடிவிட்டு வேக வைக்கவும்.
- சில நிமிடங்களுக்கு புட்டு நன்றாக வெந்துவிடும்.
மேலும் படிங்க உடல் எடையைக் குறைத்திட உதவும் கொம்புச்சா!
வாழை இலையில் புட்டு வைத்து கடலை கறியுடன் பரிமாறுங்கள் விவரிக்க முடியாத அளவிற்கு ருசியாக இருக்கும்.