அல்வா என்றதும் முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது திருநெல்வேலி. இதற்கு அடுத்தப்படியாக தஞ்சாவூர் மற்றும் திருவையாறு பகுதியில் கிடைக்கும் அசோகா அல்வா பலருக்கும் பிடித்தமான அல்வாவாக உள்ளது. இதன் சுவை, மணம் மற்றும் நிறத்தை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறும். ஒருமுறை சுவைத்தால் அதன் ருசி நாக்கை விட்டு எளிதில் அகலாது. வாழை இலையில் ஆவி பறக்க கையில் கொடுக்கப்படும் அசோகா அல்வாவின் சுவைக்கு மற்றொரு காரணம் காவிரி ஆற்றின் தண்ணீர்.
திருநெல்வேலி அல்வா கோதுமை சம்பாவில் செய்யப்படுவது போல, அசோகா அல்வா பாசிப்பருப்பில் செய்யப்படுகிறது. அதே போல் இதில் அதிக சர்க்கரை மற்றும் நெய் சேர்க்கப்படாமலே அபரிவிதமான சுவை கிடைக்கிறது. தென்னிந்தியாவில் அல்வா உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. வட இந்தியாவில் செய்யப்படும் சுஜி அல்வா தொடங்கி, காசி அல்வா, மன்னார்குடி அல்வா, மஸ்கோத் அல்வா, பீமபுஷ்டி அல்வா, கேரட் அல்வா, ஆப்பிள் அல்வா, பீட்ரூட் அல்வா என இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
இந்த பதிவும் உதவலாம்:மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா
மற்ற எல்லா அல்வா செய்முறையைக் காட்டிலும் அசோகா அல்வா செய்வது மிக மிக சுலபம். குறைவான பொருட்கள் மட்டுமே இதற்கு தேவைப்படுகிறது. வீட்டிலேயே அசோகா அல்வா செய்ய நினைப்பவர்களுக்கு அதன் செய்முறையை இங்கு பகிர்கிறோம்.
தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு – 1/2 கப்
- நெய் - 1/2 கப்
- சர்க்கரை – 1 கப்
- முந்திரி – சிறிதளவு
- கோதுமை மாவு – 2 டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி - சிறிதளவு
செய்முறை
- முதலில் பாசிப்பருப்பை அலசி குக்கரில் 4 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
- பின்பு பாசிப்பருப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்து திக்கான கலவையாக எடுத்து கொள்ளவும்.
- இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி பருப்புகளை வறுத்து எடுக்கவும்.
- பின்பு அதே கடாயில் கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுத்து அதில் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பைச் சேர்த்து நன்கு கிளறவும்.
- 2 நிமிடம் கழித்து இப்போது அதில் சர்க்கரையை சேர்த்து கரண்டியால் நன்கு கிளறவும்.
- கலவை கெட்டி பதத்தை அடைந்ததும் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி விடவும்.
- குழந்தைகளைக் கவர, ஃபுட் கலர் சேர்க்கலாம். ஆரஞ்சு நிற ஃபுட் கலரை சேர்த்து அல்வாவை பக்குவமாய் கிளறவும்.
- இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கிளறி சுடச்சுட இறக்கினால் சுவையான அசோகா அல்வா தயார்.
நீங்களும் இந்த செய்முறையைப் பின்பற்றி வீட்டிலேயே அசோகா அல்வா செய்து பாருங்கள். அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation