Madurai Jigarthanda Recipe in Tamil: மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா

மதுரை மண்ணின் ஸ்பெஷல் ஜிகர்தண்டா செய்முறையை இந்த பதிவில் பார்ப்போம். 

madurai food

மதுரை உணவுகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், மல்லிகை வரிசையில் மதுரை ஜிகர்தண்டா தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. மண்டையை பிளக்கும் வெயிலில் குளிர்ச்சியான ஜிகர்தண்டாவை 1 டம்ளர் குடித்தால் போதும். சொர்க்கமே இதுதான் என தோணும். மே மாதத்தில் மதுரையோட முக்கிய வீதிகளில் ஜிகர்தண்டா வியாபாரம் களைக்கட்டும்.

சுண்டக் காய்ச்சிய பாலில் பாதாம் பிசின், நன்னாரி சர்பத் இவற்றுடன் பாலாடை, பாசந்தி ஐஸ் க்ரீம் ஆகியவற்றை சரியான கலவையில் அடுக்கி கையில் கொடுக்கப்படும் ஜிகர்தண்டா மதுரை மண்ணின் மகத்தான பானம் என்று சொன்னால் அது மிகையல்ல. இது நாக்குக்கு தரும் குளிர்ச்சி, சுவையை தாண்டி உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஹெல்த் டிரிங்காகவும் உள்ளது. ஜிகர்தண்டாவில் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் ஆகியவையும் உள்ளன.

மதுரை பக்கம் செல்பவர்கள் மிஸ் செய்யக்கூடாத விஷயத்தில் பரோட்டா, கறி தோசைக்கு அடுத்தப்படியாக ஜிகர்தண்டாவும் ஒன்று. அதே போல் இதை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறையை இந்த பதிவில் பகிர்கிறோம். படித்து பயனடையுங்கள்.

தேவையான பொருட்கள்

  • பாதாம் பிசின் – 4
  • சர்க்கரை – தேவையான அளவு
  • பால் – 1 கப்
  • வெண்ணிலா ஐஸ்கிரீம் – 2 கப்
  • நன்னாரி சர்பத் – 2 டேபிள் ஸ்பூன்

madurai jigarthanda

செய்முறை

  • முதலில் ஒரு கிண்ணத்தில் பாதாம் பிசின் சேர்த்து முதல் நாள் இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலை பிசின் பொங்கி கிண்ணம் முழுவதும் நிரம்பி இருக்கும்.
  • பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் 1 கப் சர்க்கரை சேர்த்து உருக வைக்கவும். அது பொன்னிறமாக வர தொடங்கியதும் அதில் ½ கப் வெந்நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். நீரில் சர்க்கரை முழுவதுமாக கரைய வேண்டும்.
  • இப்போது, ஜிகர்தண்டா செய்வதற்கான சுகர் சிரப் தயார்.
  • பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் தண்ணீர் கலக்காத ½ கப் கெட்டியான பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • இப்போது, அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கோவா பதத்திற்கு நன்கு காய்ச்சவும்.
  • பால் கெட்டியான பேஸ்ட் போல் வந்ததும் அதை தனியாக எடுத்து கொள்ளவும்.
  • அதே போல் மற்றொரு கடாயில் மீண்டும் ½ கப் கெட்டியான பாலை சேர்த்து கொதிக்க விடவும்.
  • பால் கொதித்து வரும் போது அதில் தயார் செய்து வைத்திருக்கும் பாதியளவு சுகர் சிரப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • ரெடிமேட் வெண்ணிலா ஐஸ்கிரீமில் மீதியிருக்கும் சுகர் சிரப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • தயார் செய்த அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

ஜிகர்தண்டா செய்முறை

  • ஒரு டம்ளரில் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசின் சேர்த்து அதனுடன் நன்னாரி சர்பத் சேர்க்கவும்.
  • பின்பு அதன் மேல் தயார் செய்த பால் பேஸ்ட் மற்றும் கெட்டியாக காய்ச்சிய பாலை சேர்க்கவும்.
  • இறுதியாக அதன் மேல் ஐஸ்கிரீம் வைக்கவும். சூப்பரான மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.

நீங்களும் இந்த செய்முறையை பின்பற்றி வீட்டிலேயே ஜிகர்தண்டா செய்து பாருங்கள். குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP