தோசை, இது உணவு மட்டுமல்ல, தென்னிந்தியர்களின் உணர்வு. பிளைன் தோசை, மசாலா தோசை, தக்காளி தோசை, வெங்காய தோசை என பாரம்பரியமாக தொடங்கி இப்போது பீட்சா தோசை வரை வந்து விட்டது. தோசையை மட்டுமே பிராத்தயேகமாக விற்பனை செய்யும் பல உணவகங்களும் வர தொடங்கிவிட்டன.
சரியான அளவில் எடுத்த அரிசி உளுந்தை ஊறவைத்து, பக்குவமாக அரைத்து, 6 மணி நேரம் புளிக்க வைத்து தோசை செய்கிறோம். இந்த தோசையை தவிர பல ஆயிரம் கணக்கான தோசை வகைகளை செய்ய முடியும். அதிலிருந்து மிகச்சிறந்த 7 தோசைகளை இன்றைய பதிவில் பார்க்கலாம். இந்த தோசை வகைகளை நீங்களும் உங்களுடைய வீட்டில் நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: ரொம்ப சிம்பிள், ஆனா இது தான் பெஸ்ட் இறால் ரெசிபி!
நீர் தோசை
பேருக்கு ஏற்றார் போல் இந்த தோசை மாவின் பதம் சற்று நீர்க்க இருக்க வேண்டும். ஊற வைத்த அரிசியுடன், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து மாவை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அரிசியை ஊற வைத்தால் போதும், டக்குனு பத்து நிமிஷத்தில் டிபன் செய்திடலாம். இதை காரசாரமான பூண்டு சட்னி, மிளகாய் சட்னி அல்லது நான் வெஜ் குழம்புடன் பரிமாறலாம்.
சீஸ் தோசை
உங்களுக்கு பீட்சா அல்லது சீஸ் மிகவும் பிடிக்கும் என்றால் இந்த தோசையை தாராளமாக முயற்சி செய்யலாம். உங்களிடம் இருக்கும் எந்த சீஸ் வகையையும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். தோசையின் மீது துருவிய சீஸ் மற்றும் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து சீஸ் உருகும் வரை வேக விட்டு பரிமாறலாம். நீங்கள் விரும்பினால் தோசையின் மீது சாஸ் அல்லது காரச் சட்னியை தடவிய பின் சீஸ் துருவலை சேர்க்கலாம்.
மசாலா தோசை
எப்போதும் செய்யும் பிளைன் தோசைக்கு பதிலாக இந்த மசாலா தோசையை முயற்சி செய்து பாருங்கள். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ளவும். இதை தோசையின் நடுவே வைத்து, நெய் ஊற்றவும். நல்ல ரோஸ்ட்டான மசாலா தோசை ரெடி!
முட்டை தோசை
இதை இரண்டு விதமாக செய்யலாம். முட்டையை புர்ஜியாக செய்து தோசையின் நடுவே வைத்து முக்கோணமாக மடக்கி பரிமாறலாம். அல்லது தோசை ஊற்றிய பின் அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றி, மிளகு சீரக பொடி தூவி முட்டை தோசையாகவும் செய்து கொடுக்கலாம். இதில் நான் வெஜ் குழம்பு அல்லது மட்டன், சிக்கன் துண்டுகளை சேர்த்து கறி தோசையாகவும் செய்யலாம்.
கோதுமை தோசை
முழு கோதுமையை உளுந்துடன் சேர்த்து ஊற வைத்து கிரைண்டரில் தோசை மாவு அரைத்தும் தோசை செய்யலாம். அல்லது ரெடிமேடாக கிடைக்கக்கூடிய கோதுமை மாவுடன் சிறிதளவு அரிசி மாவு, சீரகம், மிளகுப்பொடி பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கரைத்து தோசைகளாக ஊற்றலாம்.
ஓட்ஸ் தோசை
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஓட்ஸ் தோசை செய்து சாப்பிடலாம். இந்த தோசையையும் புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓட்ஸ் உடன் உங்களுக்கு விருப்பமான பருப்புகளை சேர்த்து அரைத்து ஓட்ஸ் தோசைகளாக செய்து சாப்பிடலாம்.
பச்சை பயிறு தோசை
இதை செய்வது மிக மிக சுலபம், ஊறவைத்த பச்சை பயிறு அல்லது முளைகட்டிய பச்சை பயறுடன் கொத்தமல்லி இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து உடனடியாக தோசை செய்து சாப்பிடலாம். நீங்கள் காலையில் தோசை செய்வதாக இருந்தால், முந்தைய நாள் இரவே பச்சைப்பயறை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைக்கனுமா? இப்படி ஹெல்தியா சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation