உங்கள் தலைமுடி வளர்ச்சி குறைந்து அதிகமாக உதிர்கிறதா? இதற்கு ஷாம்பு, எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க்குகள் மட்டும் போதாது. கூந்தல் ஆரோக்கியம் என்பது நீங்கள் உண்ணும் உணவில் இருந்து தான் தொடங்குகிறது. நம் தலைமுடி கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது. உங்கள் உணவில் போதுமான புரதம் இல்லையென்றால், தலைமுடி வளர்ச்சிக்கான அடிப்படை ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போகும்.
மேலும் படிக்க: இளமையான தோற்றத்தை அளிக்கும் கொலஜன் நிறைந்த உணவுகள்; சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த இவற்றை சாப்பிடவும்
வெளிப்புற சிகிச்சைகள் தற்காலிகமான தீர்வுகளை தரலாம். ஆனால், நீண்ட கால ஆரோக்கியம் என்பது உள்ளிருந்து தான் உருவாகிறது. நம் இந்திய உணவு முறையில், தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த பல உணவுகள் குறைவான விலையில் கிடைக்கின்றன. அந்த வகையில் தலை முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியலை காணலாம்.
பனீர் சுவையானது மட்டுமல்ல, அது கூந்தல் வளர்ச்சிக்கு ஒரு ஆற்றல் மையம் என்று கூறலாம். 100 கிராம் பனீரில் சுமார் 18 கிராம் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளன. புரதம் தலைமுடியின் வலுவிழந்த இழைகளை சரிசெய்கிறது. கால்சியம் கூந்தல் தண்டுகளை வலுப்படுத்துகிறது. வைட்டமின் டி, முடியின் வேர்க்கால்களை செயல்படத் தூண்டுகிறது. காலை உணவுக்கு பனீர் புர்ஜி, மாலையில் பனீர் டிக்கா அல்லது மசாலா சேர்த்த பனீர் துண்டுகள் என உங்கள் உணவை எடுத்துக் கொள்ளலாம்.
பாதாமில் புரதம், வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் முடி உதிர்வதை தடுத்து, பளபளப்பாக வைத்திருக்க உதவுகின்றன. 28 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது. 5-6 பாதாம் பருப்புகளை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம். பாதாம் பாலை குடிக்கலாம் அல்லது இனிப்பு வகைகளுடன் பாதாம் பொடியை சேர்த்து சாப்பிடலாம்.
கொண்டைக்கடலையில் புரதத்துடன் சேர்த்து, சின்க் மற்றும் வைட்டமின் B6 நிறைந்துள்ளன. இவை கெரட்டின் உற்பத்தியை தூண்டி, வேர்களை வலுப்படுத்துகின்றன. 100 கிராம் வேகவைத்த கொண்டைக்கடலையில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளது. வறுத்த கொண்டைக்கடலையை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம். கொண்டைக்கடலை குழம்பு செய்யலாம் அல்லது வேகவைத்த முளைக்கட்டிய கொண்டைக்கடலையுடன் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து சாலட் போல் உண்ணலாம்.
மேலும் படிக்க: Pumpkin seeds for hair growth: முடி உதிர்வை தடுக்க உதவும் பூசணி விதைகள்; உங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவும்
முருங்கைக் கீரையில் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான கூந்தலுக்கு அவசியமானவை. 100 கிராம் முருங்கைக் கீரையில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளது. வைட்டமின் ஏ, இயற்கையான எண்ணெய்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இரும்புச்சத்து, வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
பூசணி விதைகள் சிறியதாக இருந்தாலும், அவற்றில் புரதம், சின்க், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், வறட்சி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியமின்மை ஆகியவற்றால் ஏற்படும் முடி உதிர்வை எதிர்த்துப் போராடுகின்றன. 28 கிராம் பூசணி விதைகளில் 9 கிராம் புரதம் உள்ளது. பூசணி விதைகளை வறுத்து ஒரு மொறுமொறுப்பான சிற்றுண்டியாக சாப்பிடலாம். உப்புமா, அவல், தயிர் மற்றும் சாலட் போன்றவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
மிக விலை உயர்ந்த ஷாம்பூ, சீரம் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது இந்த உணவு பொருட்கள் அனைத்தும் சற்று விலை குறைவாக கிடைக்கும். இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com