
Padayappa Movie Re-Release: தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் வெற்றி பெற்ற படையப்பா திரைப்படத்தில், நீலாம்பரி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் ரஜினிகாந்தின் 50-வது ஆண்டை கொண்டாடும் விதமாக, அவரது நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படையப்பா திரைப்படத்தை மறுவெளியீடு (ரீ-ரிலீஸ்) செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில், படையப்பா திரைப்படம் தொடர்பாக பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை நடிகர் ரஜினிகாந்த சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். அப்போது, படையப்பா திரைப்படம் எப்படி உருவானது, அப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான நீலாம்பரி பாத்திரத்தில் முதலில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் ஆகியவை குறித்து அவர் தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், "படையப்பா திரைப்படம் 1999-ஆம் ஆண்டு வெளியானது. தமிழ் திரையுலகில் 1975-ஆம் ஆண்டு நான் அறிமுகம் ஆனேன். சினிமாவில் என்னுடைய 25-வது ஆண்டில் படையப்பா திரைப்படம் வெளியானது. படையப்பா திரைப்படத்தை நான் தான் தயாரித்தேன். இப்படத்தின் மூலக்கதை என்னுடையது தான். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் எனக்கு விருப்பமானது. அதில் இடம்பெற்ற நந்தினி என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் படிக்க: Jailer 2 movie: ஜெயிலர் 2 எப்போது ரிலீஸ்? அப்டேட் கொடுத்த ரஜினி - உற்சாகத்தில் ரசிகர்கள்
நந்தினி கதாபாத்திரத்தை போன்று ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதனை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்று எனக்குள் எண்ணம் இருந்தது. இப்படத்தின் கதையை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் கூறினேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அதன்பேரில், படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனங்களை கே.எஸ். ரவிக்குமார் உருவாக்கினார். இப்படத்திற்கு படையப்பா என்று நான் தான் டைட்டில் வைத்தேன்.
இந்தக் கதையில் நீலாம்பரி கதாபாத்திரத்தை நினைக்கும் போது, ஐஸ்வர்யா ராய் தான் என் மனதில் தோன்றினார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று நான் நினைத்தேன். அந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராய் மிகவும் பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை அணுகுவது சற்று சிரமமாக இருக்கும் என்று கூறினார்கள். ஏறத்தாழ மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை அவரது ஒப்புதலுக்காக காத்திருந்தோம். இப்படத்தில் நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராய் சம்மதம் தெரிவித்திருந்தால், அவருக்காக சுமார் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்கலாம் என்று நினைத்தேன்.

அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக நீலாம்பரி பாத்திரம் இருந்தது. அதன் பின்னர், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராய்க்கு விருப்பம் இல்லை என்று அறிந்து கொண்டோம். அதற்கடுத்து வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். ஸ்ரீதேவி, மீனா, மாதுரி தீக்ஷித் என பலரை பரிசீலனை செய்தோம். அந்த சூழலில், திடீரென ஒரு நாள் ஹைதராபாத்தில் இருந்து கே.எஸ்.ரவிக்குமார் எனக்கு போன் கால் செய்தார். அப்போது, நீலாம்பரி பாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் பொருத்தமாக இருப்பார் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: Arasan: வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் அரசன் திரைப்படத்தில் இணைந்த விஜய் சேதுபதி; சர்ப்ரைஸ் கொடுத்த கலைப்புலி தாணு
குறிப்பாக, நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு ஏற்ற பவர்ஃபுல்லான கண்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு இருக்கிறது என்று கே.எஸ். ரவிக்குமார் கூறினார். எனினும், எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. ஆனால், கே.எஸ்.ரவிக்குமார் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அதன் பின்னர், நீலாம்பரி கதாபாத்திரத்திற்கான காஸ்ட்யூம் போட்டு பார்த்த பிறகு, ரம்யா கிருஷ்ணன் மீது எனக்கும் நம்பிக்கை வந்தது" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினத்தில் படையப்பா திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்தின் கலைப்பயணம் மட்டுமின்றி, தமிழ் சினிமா வரலாற்றிலும் முக்கிய திரைப்படமாக படையப்பா திகழ்கிறது. அந்த அளவிற்கு வசூல் ரீதியாக படையப்பா திரைப்படம் சாதனை படைத்தது. இதனால், ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று படையப்பா திரைப்படத்தை திரையரங்கில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Youtube
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com