herzindagi
image

Kaantha twitter review: பார்வையாளர்களை கவர்ந்ததா துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம்? ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சனம்

Kaantha twitter review: துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் ராணா டக்குபட்டி ஆகியோர் நடிப்பில் உருவான காந்தா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை காணலாம்.
Editorial
Updated:- 2025-11-14, 12:28 IST

Kaantha twitter review: செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் ராணா டக்குபட்டி உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் காந்தா. இந்த திரைப்படம் சுமார் 1950-களில் மெட்ராஸில் நடைபெறுவதை போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒரு இயக்குநர் மற்றும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் இப்படம் எடுத்துரைப்பதை போன்று இதன் ட்ரெய்லர் அமைந்திருந்தது. அதனடிப்படையில், இன்றைய தினம் வெளியான காந்தா திரைப்படம் குறித்து பார்வையாளர்கள் ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

 

காந்தா ட்விட்டர் விமர்சனம்:

 

கார்த்திக் என்பவரது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "இயக்குநருக்கும் நடிகனுக்குமான ஈகோவும், அதைத் தொடர்ந்து ஏற்படும் ஒரு கொலையை செய்த நபர் யார் என்று கண்டறிவது தான் காந்தா.

 

முதல் ஃபிரேமில் இருந்து கதை ஆரம்பித்து விடுகிறது. ஈகோவால் நின்றுபோன ஒரு படத்தை மீண்டும் துவங்க முயற்சிக்கின்றனர். சினிமாவுக்குள் சினிமா பாணியிலான படம் என்பதால் மெதுவாக நகர்ந்தாலும் சுவாரஸ்யமாக அந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. சமுத்திரக்கனியின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்துக்கென அவர் முகத்தில் செய்திருக்கும் மாற்றம் அட்டகாசமாக பொருந்தியிருக்கிறது. நக்கல் பண்றது, கோபமா பேசறது, எமோசனலா பேசறதுன்னு தொடக்கத்தில் இருந்து இறுதிவரை சமுத்திரக்கனி சிறப்பாக நடித்திருக்கிறார். “ நீ சொல்ற ஆடியன்ஸ் 50 வருசத்துல காணாம போயிடுவான். ஆனா படைப்பு காலம் கடந்து நிக்கும்”ல ஆரம்பிச்சு சமுத்திரக்கனி பேசற நிறைய வசனங்கள் அவர் குரல்ல இன்னுமே சிறப்பா வந்திருக்கு.

மேலும் படிக்க: Dude ott release date: ஓடிடியில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

நடிப்புச் சக்கரவர்த்தி அடைமொழியோட டி.கே மகாதேவனா துல்கர் சல்மான். கொஞ்சம் மிஸ் ஆனாலும், ஓவர் ஆக்டிங் ஆகிடும். ஆனா, அந்த லைன டச் பண்ணாம சிறப்பானதொரு பெர்பாமன்ஸ். துல்கர் சல்மானின் குரல் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. மகாநடி, லக்கி பாஸ்கர்னு ஏற்கெனவே துல்கர் நிறைய பீரியட் படங்கள்ல நடிச்சுட்டார். இது இன்னுமே ஸ்பெஷல். படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் மூலமாக தனது நடிப்பை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் சென்றிருக்கிறார் துல்கர் சல்மான்.

 

நடிப்புக்கு அடுத்ததா படத்துல பாராட்டப்பட வேண்டியது, ஒளிப்பதிவும், புரொடக்‌ஷன் டிசைனும் தான். பெரும்பாலான காட்சிகள் ஒரே இடத்துல தான் நடக்குது. ஆனா, அதைய எவ்ளோ ஸ்பெஷலாக்க முடியுமோ, அதை பண்ணியிருக்கார் ஒளிப்பதிவாளர் Dani Sanchez-Lopez (மகாநடி படத்தின் ஒளிப்பதிவாளர்).

 

இருவருக்குமான ஈகோவா ஆரம்பிக்கற சினிமா, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா விலகி வேறொரு பாணியை எடுக்குது. ஈகோவை சுத்தி நடந்த கதைலயே, கதைக்கு தேவை இல்லாத சில காட்சிகள் இருந்தாலும், இடைவேளைக்கு முந்தை இடத்தில் மொத்தமா வேறொரு தளத்திற்கு படம் மாறுகிறது. அதன் பின்னர், பெரிய தாக்கம் இல்லாமல் கொலையாளியை கண்டறியும் ஒரு படமாக மாறிவிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Priyanka Chopra as Mandakini: ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் கதாநாயகியான பிரியங்கா சோப்ராவின் போஸ்டர் வெளியீடு

 

அமுதா பாரதி என்பவரது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "படத்தின் முதல் பாதி சிறப்பாகவும், இரண்டாம் பாதி சுமார் என்ற ரகத்திலும் அமைந்தது. துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பு சிறப்பு. படத்தின் பல காட்சிகள் சிறப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் அமைக்கப்பட்டிருந்தன. எளிதாக யூகிக்கக் கூடிய மற்றும் மெதுவான திரைக்கதையுடன் அமைந்த இரண்டாம் பாகம் குறையாக உள்ளது. பின்னணி இசை மற்றும் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நன்றாகவே இருந்தது. படத்தின் இடைவேளையில் வரும் திருப்பம் மற்றும் இரண்டாம் பாதியில் துல்கர் சல்மானின் நடிப்பு ஆகியவை சிறப்பாக உள்ளன. படத்தில் இடம்பெற்ற நடிகர்களின் நடிப்புக்காக இப்படத்தை நிச்சயம் காணலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கி ரிவ்யூ என்ற ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "காந்தா - ஒரு பீரியட் டிராமா திரில்லர் படமாக சுவாரஸ்யமான கட்டமைப்பையும், வலுவான நடிப்பையும் கொண்டுள்ளது. ஆனால், அதன் சலிப்பூட்டும் மற்றும் நீண்ட திரைக்கதை நமது பொறுமையை சோதிக்கிறது. முதல் பாதி மிகவும் மெதுவாக செல்கிறது. எனினும், ஆர்வத்தை தூண்டி, இடைவேளையில் ஒரு எதிர்பாராத திருப்பத்தை அளித்து சுவாரஸ்யமாக முடிகிறது. இரண்டாம் பாதி 'குற்றவாளி யார் ?' என்ற பாணியிலான திரில்லராக மாறுகிறது. ஆனால், இந்த மாற்றம் மிகவும் சாதாரணமாகவும், மந்தமாகவும் கையாளப்பட்டுள்ளது. இதன் வேகம் தொடர்ந்து இழுவையாகவே உள்ளது. 

இருப்பினும் இறுதிக் காட்சிகள் ஒப்பிடும் போது சற்று சிறப்பாக உள்ளன. படத்தின் முதுகெலும்பாக இருப்பது நடிகர்களின் பங்களிப்பு தான். முன்னணி நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கலை அமைப்பு மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை தனித்து நிற்கின்றன, மேலும் கதைக்களத்திற்கு நம்பகத்தன்மையை கூட்டுகின்றன. எனினும், ஒட்டுமொத்த கதை சொல்லல் ஒரு திரைப்படத்தை விட ஒரு மேடை நாடகத்தை பார்ப்பது போன்ற உணர்வை அளிக்கிறது. இது பல இடங்களில் பொறுமையை சோதித்து, இதன் விளைவாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போய்விடுகிறது. மொத்தத்தில், ஒரு நல்ல முயற்சி மற்றும் சில ரசிக்கத்தக்க தருணங்கள் இருப்பினும், கதை சொல்வதில் உள்ள தொய்வு காரணமாக 'காந்தா' சராசரிக்கும் குறைவாகவே உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com