
Nayanthara Birthday Special: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி, அவரது ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். இவர் கடந்த 1984-ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தார். இவரது கலைப்பயணம் மலையாள திரையுலகில் இருந்து தொடங்கியது. கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான 'மனசினக்கரே' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் நயன்தாரா கால் பதித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான' ஐயா' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நயன்தாரா அறிமுகம் ஆனார்.
இதன் பின்னர், பல்வேறு வெற்றித் திரைப்படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். குறிப்பாக, இவரது நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படம் வர்த்தக ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நயன்தாராவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சினிமா மட்டுமின்றி தொழில்முனைவராகவும் நயன்தாரா வலம் வருகிறார். சரும பராமரிப்புக்காக 9ஸ்கின் (9Skin) என்ற நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார். இது மட்டுமின்றி தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் (Rowdy Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நயன்தாரா நிர்வகித்து வருகிறார்.

இவ்வளவு சிறப்புகளை பெற்ற நயன்தாரா இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற டாப் 5 திரைப்படங்கள் என்னவென்று பார்க்கலாம். இதில் ரூ. 1000 கோடி வசூலித்த திரைப்படமும் அடங்கும்.
கடந்த 2023-ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடித்தார். இந்த திரைப்படம் சுமார் ரூ. 300 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் ஏறத்தாழ ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு இணையாக ஆக்ஷன் காட்சிகளில் நயன்தாரா நடித்திருப்பார். அதன்படி, ரூ. 1000 கோடி வசூல் சாதனை படைத்த படங்களில் நடித்த மிகச் சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டில் வெளியான பிகில் திரைப்படத்தையும் அட்லீ இயக்கி இருந்தார். ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமாவாக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில், நயன்தாராவின் பாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. சுமார் ரூ. 180 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம், ஏறத்தாழ ரூ. 250 முதல் ரூ. 300 கோடி வரை வசூலித்தது. இது நயன்தாரா நடிப்பில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

மேலும் படிக்க: Girija Oak: யார் இந்த கிரிஜா ஓக்? திடீரென இணையத்தில் ட்ரெண்டாகும் நடிகை
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவான சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா நடித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், இந்தியாவில் ஆங்கேலயர்களின் ஆட்சி காலத்தில் நடைபெறுவதை போன்று உருவாக்கப்பட்டிருந்தது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் ரூ. 240 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா நடித்தார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், வர்த்தக ரீதியாக இப்படம் சுமார் ரூ. 250 கோடி வரை வசூலித்ததாக தெரிகிறது. முன்னதாக சந்திரமுகி திரைப்படத்திலும் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அது மட்டுமின்றி, ரஜினியின் சிவாஜி திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடி இருந்தார்.
2019-ஆம் ஆண்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில், அஜித்குமார் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். சுமார் ரூ. 100 கோடி பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம், ஏறத்தாழ ரூ. 200 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் மருத்துவர் மற்றும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.
நயன்தாராவின் திரைப்பயணத்தில் இந்த 5 திரைப்படங்களும் அதிக அளவில் வசூலித்தவை. மேலும், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நயன்தாரா, நாயகியை மையமாகக் கொண்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com