
Superstar Rajinikanth: தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ரஜினிகாந்த், இன்று (டிசம்பர் 12)) தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக ரஜினிகாந்தின் திரைப்படங்கள் பல சாதனைகளை புரிந்துள்ளன. இன்று வரை அசைக்க முடியாத உச்சத்திற்கு ரஜினிகாந்தை அழைத்துச் சென்றதற்கு, அவரது வெற்றிப் படங்களும், அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் அன்பும் தான் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும்.
எனினும், ஸ்டைல் மற்றும் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் என்ற வட்டத்திற்குள் மட்டுமே ரஜினிகாந்த் என்னும் ஒப்பற்ற கலைஞனை அடைத்து விட முடியாது. தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் பல்வேறு திரைப்படங்களில் ரஜினிகாந்த், தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, திரையில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தும் நடிகர்களில் ரஜினிகாந்திற்கு முதன்மையான இடம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில், ரஜினிகாந்தின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்து முக்கியமான 5 திரைப்படங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரஜினிகாந்தின் கலைப்பயணத்தில் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு திரைப்படம் என்றால் அது நிச்சயம் முள்ளும் மலரும்-ஆக இருக்கும். திரையுலகில் இயக்குநர் கே. பாலச்சந்தரால் ரஜினிகாந்த அறிமுகம் ஆகி இருந்தாலும், ஒரு மிகச் சிறந்த நடிகராக ரஜினியை மக்களிடம் கொண்டு சேர்த்த பெரும் பங்கு இயக்குநர் மகேந்திரனுக்கு இருக்கிறது. அப்படி ஒரு திரைமொழியில் உருவாக்கப்பட்ட முள்ளும் மலரும் திரைப்படத்தில், முற்றிலும் மாறுபட்ட ரஜினிகாந்தை ரசிகர்கள் திரையில் கண்டார்கள். தமிழ் சினிமாவில் அண்ணன் - தங்கை சென்டிமென்ட் திரைப்படங்கள் எத்தனையோ வெளியாகி இருக்கின்றன.

மேலும் படிக்க: Padayappa Re-Release: படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை முதலில் அணுகினோம்; சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த ரஜினிகாந்த்
ஆனால், அவை அனைத்திற்கும் ஒரு பென்ச்மார்க் தரத்தை அமைத்தது முள்ளும் மலரும் திரைப்படமாக தான் இருக்கும். தங்கை மீது கொண்ட பாசத்தில் உருகுவது, தனக்கு உயரதிகாரியான சரத்பாபு கதாபாத்திரத்துடன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாதாடுவது என திரைப்படம் முழுவதும் காளியாகவே ரஜினி வாழ்ந்திருப்பார். கதைக்களத்தில் இருந்து சற்றும் தடம் மாறாமல், அனைத்து பாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கி இருந்தனர். இதற்கு முக்கிய காரணம், மகேந்திரனின் நேர்த்தியான இயக்கம் ஆகும். இப்படி முள்ளும் மலரும் திரைப்படம் குறித்து பேசுவதற்கு எத்தனையோ கதைகள் இருக்கின்றன. ரஜினிகாந்த் - மகேந்திரன் - இளையராஜா ஆகியோரது திரைப்பயணத்தில் மட்டுமின்றி, தமிழ் சினிமாவின் வரலாற்றிலும் தவிர்க்க முடியாத திரைப்படமாக முள்ளும் மலரும் அமைகிறது.
இப்படம் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டுமின்றி, ரஜினிகாந்திற்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக திகழ்கிறது. அதுவரை ஸ்டைல் மன்னனாக திகழ்ந்த ரஜினிகாந்த், தனது 100-வது திரைப்படத்தில் ஸ்ரீ ராகவேந்திரராக திரையில் தோன்றுவார் என்று நிறைய பேர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 1985-ஆம் ஆண்டு கவிதாலயா நிறுவனம் சார்பில் வெளியான இப்படத்தை, எஸ்.பி. முத்துராமன் இயக்கி இருந்தார். ரஜினிகாந்த் - எஸ்.பி. முத்துராமன் கூட்டணியில் வெளியான பல திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Jailer 2 movie: ஜெயிலர் 2 எப்போது ரிலீஸ்? அப்டேட் கொடுத்த ரஜினி - உற்சாகத்தில் ரசிகர்கள்
வைஷ்ணவத்தில் துறவியாக போற்றப்படும் ராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை விளக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்தின் பெரும் பலமாக கருதப்படும் ஸ்டைல், வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்திலும் இருந்து மாறுபட்ட ரஜினிகாந்த், திரையில் ராகவேந்திரராகவே காட்சியளித்தார். எந்தவொரு நடிகரும் தன்னுடைய 50, 100-வது திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று கருதுவார்கள். ஆனால், ரஜினிகாந்த் சற்று மாறுபட்டு தனது மனதுக்கு நெருக்கமான ஒரு திரைப்படத்தை கொடுக்க நினைத்தார். அதற்கு ஏற்றார் போல், இப்படத்தில் ரஜினியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழ்நாட்டில் பிறந்த எந்தவொரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனும், இப்படத்தில் வரும் சந்தானம் என்ற கதாபாத்திரத்துடன் தன்னை பொருத்திப் பார்க்க முடியும். அப்படி ஒரு யதார்த்தமான கதைக்களத்தில் ரஜினிகாந்த் தனது முத்திரையை பதித்திருப்பார். இப்படத்தையும் எஸ்.பி. முத்துராமன் இயக்கி இருந்தார். தந்தையை இழந்த ஒரு குடும்பத்தில் மூத்த மகனின் வாழ்க்கை எந்த அளவிற்கு தாக்கத்தை சந்திக்கும் என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாக காட்சிப்படுத்திய திரைப்படம் ஆறிலிருந்து அறுபது வரை.

குடும்பத்திற்காக இறுதிவரை உழைக்கும் ஒரு நபர், தனது குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படும் போது அவரது மனநிலை அவ்வாறு இருக்கும் என்பதை ரஜினிகாந்த் தனது நடிப்பு மூலம் அழகாக வெளிப்படுத்தி இருப்பார். சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து கொஞ்சமும் இல்லாமல், தன்னை ஒரு நடிகராக மட்டுமே இயக்குநருக்கு ஒப்படைத்து இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். அந்த வகையில், ரஜினியின் மிகச் சிறந்த படங்களை பட்டியலிட்டால், அதில் ஆறிலிருந்து அறுபதுவரை படம் நிச்சயம் தவிர்க்க இயலாத ஒன்றாக திகழும்.
நடிப்பு என்பது உணர்ச்சிப்பூர்வமாக பார்வையாளர்களை அழ வைப்பது மட்டும் கிடையாது. அவர்களை கவலையை மறந்து சிரிக்க வைப்பதும் நடிப்பு தான் என்பதை மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கும் கலைஞன் ரஜினிகாந்த். அதற்கு சிறந்து உதாரணமாக தில்லு முல்லு திரைப்படத்தை கூறலாம். இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த கோல் மால் திரைப்படத்தை தமிழில் தில்லு முல்லு என கே. பாலச்சந்தர் ரீமேக் செய்தார். அதுவரை ஆக்ஷன் கதைகளில் முக்கியத்துவம் அளித்து நடித்து வந்த ரஜினிகாந்த், இதில் முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார்.

வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு நாள் விடுமுறைக்காக ஒரேயொரு பொய் சொல்ல வேண்டிய சூழல் உருவாகும் நிலையில், அதனால் ஏற்படும் குழப்பங்களை முற்றிலும் நகைச்சுவையாக பதிவு செய்த திரைப்படம் தில்லு முல்லு. ஒரு மீசையை வைத்து ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்த பெருமை ரஜினிகாந்தையும், தேங்காய் சீனிவாசனையும் மட்டுமே சாரும். இந்த திரைப்படத்தின் மூலமாக ரஜினியின் காமெடி டைமிங் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதன் பின்னர், ரஜினியின் திரைப்படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
எங்கேயோ கேட்ட குரல்:
ரஜினிகாந்த் - எஸ்.பி. முத்துராமன் கூட்டணியில் உருவான மற்றொரு திரைப்படம் எங்கேயோ கேட்ட குரல். திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் அதில் இருந்து வெளியேறும் மனைவியின் மீது இறுதிவரை அன்பு கொண்ட கணவனாக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்தார். 1982-ஆம் ஆண்டில் இப்படம் வெளியான போது, ரஜினிகாந்த் ஏற்கனவே நட்சத்திர அந்தஸ்தை அடைந்திருந்தார். அந்த தருணத்தில் ஒரு ஸ்டார் ஹீரோவிடம் இருந்து இப்படி ஒரு மாறுபட்ட கதையை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.
தனது முன்னாள் மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் சூழல் உருவாகும் என்று தெரிந்தும் கூட, அதனை ஏற்று நடத்தும் குமரன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி இயல்பாக பொருந்தி போனார். ஆனால், இதில் துளி கூட நாயக பிம்பம் கிடையாது. முற்றிலும் கதையின் நாயகனாக மட்டுமே ரஜினிகாந்த் ஜொலித்தார். அந்த வகையில், ரஜினியின் கலை மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாக எங்கேயோ கேட்ட குரல் திரைப்படத்தை கூறலாம்.
ரஜினிகாந்தின் திறமைக்கு எடுத்துக்காட்டாக இந்த 5 படங்களை மட்டுமே கூறி விட முடியாது. கை கொடுக்கும் கை, அன்புள்ள ரஜினிகாந்த், தளபதி, வள்ளி, காலா, கபாலி என எத்தனையோ திரைப்படங்களில் தனது முத்திரையை மிக அழுத்தமாக ரஜினிகாந்த் பதித்து இருக்கிறார். இப்படி எண்ணற்ற சாதனைகளை புரிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Youtube
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com