விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த லியோ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் லியோ படம் வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.திரிஷா, மடோனா செபாஸ்டியன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், இயக்குநர் அனுராக் காஷ்யப், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
மேலும் படிக்க: சித்தா முதல் கண்ணூர் ஸ்குவாட் வரை ! இந்த வார ஓடிடி ரிலீஸ்
லியோ திரைப்படம் விஜய் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும், சினிமா ரசிர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் 12 நாட்களில் 540 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.சென்னை நேரு ஸ்டேடியத்தில் வெற்றி விழா கொண்டாட்டங்களும் அரங்கேறின.
வழக்கமான பாணியில் குட்டி கதை சொல்லிய நடிகர் விஜய் நடு நடுவே அரசியல் எண்ட்ரிக்கான வசனங்களையும் சூசகமாகப் பேசினார்.மூன்று வாரங்களைக் கடந்த போதிலும் தீபாவளிக்கு வெளிவந்த ஜப்பான், ரெய்டு படங்கள் சொதப்பியதால் திரையரங்குகளில் லியோ படம் தொடர்ந்து ஓடியது.ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்துத் தமிழ் சினிமாவின் நம்பர் 1 யாரென நிரூபித்துக் காட்டுவோம் என்பதில் குறியாக இருந்த விஜய் ரசிகர்களுக்கு இதுவரை ஒட்டுமொத்த வசூல் நிலவரத்தின் தகவல் கிடைக்காதது வருத்தமே.
நா ரெடி பாடலுக்குச் சென்ஸார், அதிகாலை காட்சிகளுக்குத் தடை, தயாரிப்பாளார்- திரையரங்க உரிமையாளர்களிடையே ஒப்பந்த குளறுபடி, கூடுதல் கட்டண வசூலிப்பு புகார்களைத் தீர்க்க அரசின் குழு எனப் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்த படக்குழுவுக்கு சில தினங்களுக்கு முன் மன்சூர் அலிகானின் பேச்சு பேரிடியை கொடுத்தது.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தைப் பல கோடி ரூபாய்க்கு வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், வரும் 24ஆம் தேதி படத்தைத் தனது ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.24ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படத்தைக் கண்டுகளிக்கலாம்.28ஆம் தேதி முதல் உலகமெங்கும் லியோ வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க: தமிழ் சினிமாவில் விஜயின் லியோ முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சன் சாதனைப் படைத்துள்ளது
திரையரங்க வெளியீட்டில் லியோ பெற்ற வெற்றியை ஓடிடியிலும் தொடர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.வெளியாகும் நாளிலேயே லட்சக்கணக்கான பார்வைகளை லியோ படம் பெற வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
அதே நேரம் திரையரங்கிற்காக வெட்டப்பட்ட காட்சிகள், நா ரெடி பாடலின் முழு வெர்ஸன் ஓடிடியில் வெளியீட்டில் சேர்க்கப்படுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
Image source: Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com