herzindagi
image

Gouri Kishan: உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்; உருவக் கேலிக்கு எதிராக நடிகை கௌரி கிஷன் பதிலடி

செய்தியாளர் சந்திப்பின் போது உடல் எடை குறித்து உருவக் கேலியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை கௌரி கிஷன் பதிலடி கொடுத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Editorial
Updated:- 2025-11-07, 12:03 IST

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகை கௌரி கிஷனிடம் அவரது உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினாரா நடிகை அபிராமி? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

 

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு '96' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் கௌரி கிஷன். இதை தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். குறிப்பாக, தமிழில் இவர் நடித்த 'மாஸ்டர்', 'கர்ணன்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், கௌரி கிஷன் நடிப்பில் 'அதர்ஸ்' என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 

உடல் எடை குறித்த கேள்வி:

 

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த போது, கௌரி கிஷனின் உடல் எடை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்வி உருவக் கேலி செய்யும் விதமாக இருந்தது என்று கௌரி கிஷன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இப்படம் குறித்து மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அங்கு வருகை தந்திருந்த செய்தியாளர் ஒருவர் கௌரி கிஷனிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Gouri G Kishan

 

குறிப்பாக, அவரது உடல் எடை குறித்து முன்னர் எழுப்பப்பட்ட கேள்வியை நியாயப்படுத்தும் விதமாக பேசிய அந்நபர், கௌரி கிஷனின் பதில் மரியாதையாக இல்லை என்றும், சினிமா ரசிகர்களுக்கு விருப்பமான கேள்வி தான் கேட்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், கௌரி கிஷனை பதிலளிக்க விடாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே, அங்கு இருந்த பலரும் குறிப்பிட்ட கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு ஆதரவளிக்கும் விதமாக பேசினர்.

மேலும் படிக்க: Lokah OTT Release Date: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஓடிடியில் வெளியான கல்யாணி பிரியதர்ஷனின் லோகா திரைப்படம்; ட்ரெண்டிங்கில் இருக்கும் இப்படத்தை எந்த தளத்தில் காணலாம்?

 

கௌரி கிஷன் பதிலடி:

 

இதைத் தொடர்ந்து, தனது தரப்பு விளக்கத்தை கௌரி கிஷன் தெரிவித்தார். அப்போது, ஒரு நபரின் உடல் எடை குறித்து எழுப்பப்படுவது சுவாரஸ்யமான கேள்வி இல்லை என்றும், அதனை உருவக் கேலி என்றும் கூறினார். குறிப்பாக, பெண்களிடம் தான் இது போன்ற கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது என்றும், நடிகர்களிடம் இவ்வாறு கேள்வி கேட்கப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.

Actress Gouri Kishan

 

இது மட்டுமின்றி 'அதர்ஸ்' திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் தொடர்பாக ஒரு கேள்வி கூட கேட்கப்படாத நிலையில், தனது உடல் எடையை மட்டும் அறிந்து கொள்ள விரும்பும் விதமாக இது போன்று கேள்வி எழுப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், செய்தியாளர் சந்திப்பில் தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற விடாமல், எல்லோரும் தன்னை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இந்த சூழலில், சம்பந்தப்பட்ட செய்தியாளருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், இது போன்ற சூழலில் தைரியமாக செயல்பட்டு பதிலளித்ததாக கௌரி கிஷனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Instagram

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com