பத்மபூஷன் விருது பெறுகிறார் நடிகர் அஜித்குமார். இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருது பத்மபூஷன் விருதை நடிகர் அஜித்குமார் ஜனாதிபதி கையால் வாங்க உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானவருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நடிகர் அஜித்குமாருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த மூன்றாவது குடிமகன் விருதான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:Republic Day Wishes 2025: தாய் மண் செழிக்க பாடுபடும் சக இந்தியனுக்கு குடியரசு தின நல்வாழ்த்துகள்
நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விருதுகள் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், பொறியியல், வணிகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, குடிமைப் பணிகள் என பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் நபர்களை கண்டறிந்து இந்த உயரிய விருதுகள் வழங்கப்படுகிறது.
பட்டத்தை துறந்தவர் அஜித்குமார்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர்கள் மன்றத்தை கலைத்த அஜித்குமார், அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தையும் வேண்டாம் என துறந்தார், தொடர்ந்து எனது ரசிகர்கள் திரைத்துறை வட்டாரங்கள் என அனைவரும் என்னை "தல" என்று அழைக்க வேண்டாம் "அஜித்குமார்" ஏ.கே என்று அழைத்தால் போதும் என்ற அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டார். ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தை பாருங்கள், பெற்றோர்களை பாருங்கள், நல்ல உயரிய இடத்திற்கு எனது ரசிகர்கள் வரவேண்டும். அஜித் வாழ்க விஜய் வாழ்க என்று சொல்லும் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? கடுமையாக உழைக்க வேண்டும் பெற்றோர்களை குடும்பத்தினரை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும். திரைப்படம் என்பது பொழுதுபோக்கு மட்டுமே, படத்தை பார்த்த பிறகு உங்களது வாழ்க்கையை பாருங்கள் என எப்போதும் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வருவார்.
நடிகர் அஜித்குமாரின் வரவிருக்கும் படங்கள்
- நடிகர் அஜித் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள "விடாமுயற்சி" திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2 வருடங்களுக்கு மேல் படமாக்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ளது. இதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
- அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து தயாராகி வரும் "குட் பேட் அக்லி" திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அஜித் குமார் ரேசிங்

விடாமுயற்சி குட் பேட் அக்னி ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகர் அஜித்குமார் தனது நடிப்பிற்கு ஆறு மாத காலம் விடுமுறை எடுத்து தற்போது ரேசிங்கில் மும்மரமாக பயிற்சி எடுத்து வருகிறார். அண்மையில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் என்ற குழுவினரோடு பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பிரித்து உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றார். சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார்.
பத்மபூஷன் அஜித்குமார்
இவரது "தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனி வழி" என்ற கொள்கையை இவரைப் ரசிகர்கள் கோடிக்கணக்கான ரசிகர்கள் இவரையும் இவரது கொள்கையையும் பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை பெற்றிருக்கும் நடிகர் அஜித்குமாரை அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரை துறையின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக நடிகர் அஜித்குமாருக்கு தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் அஜித் குமார் ரேசிங்கில் வெற்றி பெற்ற போது இந்திய கொடியை கையில் ஏந்திக்கொண்டு உற்சாகமாக வலம் வந்த காட்சிகள் ரசிகர்களின் மனம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை பெற்ற நடிகர் அஜித்குமாரை அவரது ரசிகர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்தலாம்.
பதமபூசன் அஜித்குமாரின் நன்றி பதிவு
பத்மபூஷன் விருது அறிவித்த பின்பு நடிகர் அஜித்குமார் தனது நன்றி அறிவிப்பு கடிதத்தை வெளியிட்டுள்ளார் அதில் தெரிவித்த அஜித்குமார்,
"குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்".
இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன்.
இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது.
பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த எனது மோட்டார் ரேசிங் நண்பர்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ரைஃபிள் ஷூட்டிங் நண்பர்களுக்கும் நன்றி. மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC), இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (FMSCI), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் ஆகியவை ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும்தான் எனது பலம். நன்றி!
இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றிகளிலும் துணையாக இருந்த என் மனைவியும் தோழியுமான ஷாலினி எனது பக்கபலம். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி! சிறப்பாக செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறீர்கள்.
எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பும் ஆதரவுமே என்னை அர்ப்பணிப்புடன் இருக்க உந்துகிறது. இந்த விருது என்னுடையது போலவே உங்களுக்கும் உரியது.
இந்த கெளரவத்திற்கும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அனைவருக்கும் நன்றி. நேர்மையுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து செயல்பட நான் உறுதிபூண்டுள்ளேன். என்னுடைய பயணத்தில் நான் உற்சாகமாக இருப்பதைப் போலவே உங்கள் அனைவரது பயணமும் உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள் - என்று பத்மபூஷன் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: ajithkumar racing page
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation