image

தமன்னாவின் சிக்கந்தர் கா முகதார் படம் எப்படி இருக்கு ? திரை விமர்சனம்

நீரஜ் பாண்டே இயக்கத்தில் தமன்னா, ஜிம்மி ஷெர்கில், அவினாஷ் திவாரி நடித்துள்ள சிக்கந்தர் கா முகதார் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். காமினி சிங் எனும் கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார்.
Editorial
Updated:- 2024-12-02, 14:35 IST

எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தை இயக்கிய நீரஜ் பாண்டேவின் மற்றொரு படைப்பு இந்த சிக்கந்தர் கா முகதார். படம் ஜிம்மி ஷெர்கில், அவினாஷ் திவாரி என இரண்டு கதாபாத்திரங்களை மையப்படுத்தி எழுதப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு அடுத்தபடியாக தமன்னா முக்கியத்துவம் பெறுகிறார். இந்த படம் திரையரங்க வெளியீட்டை தவிர்த்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. ஐ.எம்.டி.பி ரேட்டிங்கில் 6 ஸ்டார் வழங்கப்பட்டுள்ளன. 

சிக்கந்தர் கா முகதார் கதை சுருக்கம்

உள்ளரங்கில் நடைபெறும் பிரமாண்ட நகை கண்காட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் திருடு போகிறது. கொள்ளை சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரி தனது உள்ளுணர்வின்படி செயல்படுகிறார். அவர் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்தாரா என்பதே கதை.

சிக்கந்தர் கா முகதார் திரைவிமர்சனம்

சிக்கந்தர் சர்மா கதாபாத்திரத்தில் அவினாஷ் திவாரியும், நேர்மையான அதிகாரி கதாபாத்திரத்தில் ஜிம்மி ஷெர்கிலும் நடித்துள்ளனர். மிகப்பெரிய நகை கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறை அதிகாரிகளிடம் அங்கு கொள்ளை சம்பவம் அரங்கேறப் போவதாக தகவல் கிடைக்கிறது. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளையர்களை காவலர்கள் பிடிக்கின்றனர். இந்த இடைவெளியை பயன்படுத்தி தமன்னா, மங்கேஷ் தேசாயின் ஸ்டாலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரத்தை யாரோ திருடி விடுகின்றனர். இதை கண்டுபிடிப்பதற்கு ஜிம்மி ஷெர்கில் வருகிறார். தமன்னா, மங்கேஷ் தேசாய், ஸ்டாலின் அருகே நின்று கொண்டிருந்த சிக்கதர் சர்மாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது. மூன்றில் ஒருவர் அல்லது இருவர் கூட்டாக அல்லது மூன்று பேரும் வைரத்தை கொள்ளையடித்திருக்கலாம் என ஜிம்மி ஷெர்கில் சந்தேகிக்கிறார். 

சிக்கந்தர் கா முகதார் : எலி - பூனை விளையாட்டு

மூன்று பேரும் காவல்நிலையத்தில் டார்ச்சர் செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். யாருமே குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மூன்று பேருக்கும் பிணை கிடைக்கிறது. தனது உள்ளுணர்வு தவறாக இருக்க வாய்ப்பே இல்லை என ஜிம்மி ஷெர்கில் வெளியுலகிலும் குற்றவாளிகளுக்கு தொல்லை கொடுக்கிறார். 15 வருடங்கள் ஆகியும் யார் கொள்ளையடித்தது என்று புரியாமல் வேலை, குடும்பம் என அனைத்தையும் இழக்கிறார். காவல் நிலையத்தில் விசாரிக்கும் போது சிக்கந்தர் சர்மாவிடம் நீ குற்றவாளி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க தயார் என்று ஒப்புக்கொண்டதை நினைவில் கொண்டு அவரை சந்திக்கிறார் ஜிம்மி ஷெர்கில். அடுத்து என்ன நடந்தது என்பதே கிளைமேக்ஸ்

சிக்கந்தர் கா முகதார் படத்தின் பாஸிடிவ்ஸ் 

  • ஜிம்மி ஷெர்கில், சிக்கந்தர் சர்மா, தமன்னா என மூன்று பேரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை பிசிறு தட்டாமல் நடித்துள்ளனர்.
  • உண்மையை கண்டுபிடிக்க ஜிம்மி ஷெர்கில் சிக்கந்தர் சர்மாவிற்கு கொடுக்கும் குடைச்சல்கள் காவல்துறையின் கேள்விபடாத பக்கங்களை காண்பிக்கிறது.
  • முதல் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. யார் கொள்ளையடித்திருப்பார்கள் என்ற சந்தேகத்தை நமக்கும் விதைக்கிறார்கள்.
  • கிளைமேக்ஸ் ட்விஸ்ட் பல படங்களில் பார்த்த ஒன்று என்றாலும் உண்மையை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என அதிகாரியும்; மாட்டிக் கொள்ளக் கூடாது என மற்றொருவரும் ஈகோவுடன் பயணிப்பது அதை நம்ப வைக்கிறது.
  • யதார்த்தமான கதாபாத்திரத்தில் தன்னால் நடிக்க முடியும் என தமன்னாவும் நிரூபித்து இருக்கிறார்.

மேலும் படிங்க துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்பட விமர்சனம் : உண்மைக் கதையா ?

படத்தின் நெகடிவ்ஸ்

  • இரண்டாம் பாதியில் தேவையற்ற சில காட்சிகள் படத்தின் நீளத்தை அதிகரிக்கிறது. 
  • உண்மையை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரி 15 வருடங்கள் தனது உழைப்பு, நேரம், பணம், குடும்பம் உட்பட அனைத்தையும் இழப்பாரா என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.

படத்தின் ரேட்டிங் - 3.2/5

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com