உலகம் முழுவதும் அல்வா என்று சொன்னாலே தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி தான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவிற்கு திருநெல்வேலி அல்வா வாயில் எச்சில் ஊற வைக்கும் சுவையைக் கொண்டிருக்கும். மற்றொருபுறம் திருநெல்வேலி சொதி குழம்பு என்றால் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு மிகவும் பிரபலமான திருநெல்வேலி சொதி குழம்பு அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும்.
இதுவரை இந்த குழம்பை நீங்கள் ருசித்தது இல்லை என்றால் அதற்கான செய்முறையை நாங்கள் தருகிறோம். தேங்காய், பாசிப்பருப்பு, பச்சை பட்டாணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் தயாரிக்கப்படும் திருநெல்வேலி ஸ்டைல் சொதி குழம்பு செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்த திருநெல்வேலி ஸ்டைல் சொதி குழம்பு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இந்த குழம்பை ஆப்பம் இடியாப்பம் வெள்ளை சாதம் சப்பாத்தி உள்ளிட்ட பல்வேறு உணவுகளுக்கு காம்பினேஷனாக வைத்து ருசித்து சாப்பிடலாம். திருநெல்வேலி ஸ்டைல் சொதி குழம்பு செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம்.
திருநெல்வேலி சொதி குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- பெரிய தேங்காய் - 1
- பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு
- கேரட் - 1
- பீன்ஸ் - 5
- பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி
- உருளைக்கிழங்கு - 1
- முருங்கைக்காய் - 1
- இஞ்சி - 3 துண்டு
- பச்சமிளகாய் - 3
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - `10 பல்
- காய்ந்த மிளகாய் - 2
- லெமன் - 1/2
- உளுந்தம் பருப்பு- ஒரு ஸ்பூன்
- கடுகு - ஒரு ஸ்பூன்
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
செய்முறை
- பாசிப்பருப்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- தேங்காயை துருவி ஒன்றரை டம்ளர் சேர்த்து தண்ணீர் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பிழிந்து முதலாம் தேங்காய் பாலை எடுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்பு அதே தேங்காயில் ஒன்றரை டம்ளர் சேர்த்து தண்ணீர் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பிழிந்து இரண்டாம் தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,முருங்கைக்காய் நீளவாக்கில் சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- இஞ்சி, பச்சை மிளகாயை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பட்டாணி, நறுக்கிய காய்கறிகளை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கவும்.
- பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து அதனுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதுநேரம் வதக்கி விட்டு இஞ்சி ,பச்சைமிளகாய் விழுது சேர்த்து மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பின்பு அதனுடன் காய்கறி, தேவையான அளவுக்கு உப்பு, வேகவைத்த பாசிப்பருப்பு மசித்து அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதனுடன் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும்.
- நன்கு கொதி வந்தவுடன் முதலாம் தேங்காய் பாலை அதில் சேர்த்து கொதிக்க விடக்கூடாது. சிறிது சூடானவுடன் இறக்கவும்.
- இறக்கி வைத்துவிட்டு அதில் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு நன்கு கலந்து பரிமாறவும்.
- இந்த சொதி குழம்பு சாதம்,ஆப்பம் இடியாப்பதோடு சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.
- சாதத்தோடு சாப்பிட்டால் இஞ்சி துவையல் வைத்து சாப்பிட்டால் அருமையான காம்பினேஷன்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation