healthy moringa leaf sambar easy

Moringa Leaf Sambar : வாரம் ஒரு முறை இப்படி முருங்கைக் கீரை சாம்பார் வெச்சு சாப்பிடுங்க, பல நோய்களை விரட்டிடலாம்!

முருங்கைக் கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதை வாரத்திற்கு ஒருமுறை உங்கள் உணவில் சேர்த்து வர பல நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்...
Editorial
Updated:- 2023-06-15, 09:34 IST

பெரும்பாலும் கிராமப்புறங்களில் வீதி எங்கும் முருங்கை மரங்களை காணலாம். இதன் ஒவ்வொரு பாகமும் ஏராளமான மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக முருங்கை இலை சர்க்கரை நோயாளிகள் முதல் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வரை, பலருக்கும் அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியது. இதில் கால்சியம் பீட்டா கரோட்டின், இரும்புச்சத்து, புரதம், வைட்டமின் C போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. பல நோய்களுக்கு தீர்வு தரும் இந்த முருங்கை இலையை வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம். 

முருங்கைக் கீரையை கொண்டு சூப், பொரியல், கூட்டு, சாம்பார் அல்லது ஆம்லெட் செய்து சாப்பிடலாம். முருங்கைக் கீரையை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல சாம்பார் செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது முருங்கைக் கீரையை உங்கள் உணவில் சேர்ப்பதற்கான ஒரு எளிய வழியாகும். இப்போது முருங்கைக் கீரை சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி சளி பிடிக்குதா? வாரம் ஒரு முறை இப்படி கற்பூரவள்ளி சட்னி செய்து சாப்பிடுங்க!

 

தேவையான பொருட்கள்

moringa sambar recipe

  • துவரம் பருப்பு - 1 கப் 
  • சுத்தம் செய்யப்பட்ட முருங்கை இலைகள் -  2 கைப்பிடி
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
  • தனியா பொடி - ½ டீஸ்பூன் 
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 1
  • கடுகு - ½ டீஸ்பூன்
  • சீரகம் - ½ டீஸ்பூன் 
  • வெந்தயம் -¼ டீஸ்பூன்
  • பெருங்காயம் - ¼ டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

murunga keerai sambar

  • முதலில் துவரம் பருப்பை கழுவி சுத்தம் செய்யவும். இதனுடன் மஞ்சள் பொடி சேர்த்து 3-4 விசில் விட்டு குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாய் அல்லது மண்பானையில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • இதில் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  • உங்களுக்கு பூண்டின் மணம் பிடிக்கும் என்றால் இந்த சமயத்தில் இடித்த பூண்டுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அடுத்ததாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
  • இதனுடன் நன்கு பழுத்த இரண்டு தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  • இதில் இரண்டு தக்காளி சேர்ப்பதால் புளி சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தக்காளி மசியும் பதத்திற்கு வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி வதங்கிய பிறகு அதனுடன் சாம்பார் பொடி மற்றும் தனியா பொடி சேர்க்கவும்.
  • பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக வேக வைத்த பருப்பு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
  • நீங்கள் விரும்பும் பதத்திற்கு ஏற்ப தண்ணீரின் அளவை அனுசரித்து சேர்த்துக் கொள்ளவும்.
  • சாம்பாரை ஐந்து நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்கவும். சத்தான முருங்கைக் கீரை சாம்பாரை சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

இந்த ஆரோக்கியமான சாம்பார் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். ஆரோக்கியமான உணவுகளை உண்டு நோய்களை விரட்டிடுவோம்.

 

இந்த பதிவும் உதவலாம்: பாவக்காய் பிடிக்காதவங்க கூட இந்த குழம்பை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com