தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள் அடைமொழியுடன் படங்களை வெளியிட்டாலும் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரின் பட்டங்கள் மட்டுமே நமக்கு நினைவு இருக்கும். சூப்பர்ஸ்டார், உலகநாயகன், அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி போன்ற பட்டங்களை அவர்கள் எந்த படத்தில் பயன்படுத்த தொடங்கினர் எனத் தெரியுமா ? வாருங்கள் பார்ப்போம்.
ரஜினிகாந்த் திரையில் தோன்றும் முன்பாகவே ரசிகர்களின் விசில் சத்தம், கரகோஷம் கேட்க தொடங்கும் காட்சி சூப்பர்ஸ்டார் ரஜினி என்ற டைட்டில் கார்டு. 1992ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை படத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் பட்டம் பயன்படுத்தப்பட்டது. தேவா இசையுடன் திரையில் தோன்றும் சூப்பர்ஸ்டார் பட்டத்தை பார்த்தாலே ரசிகர்கள் குஷியடைந்துவிடுவார்கள். அன்று முதல் இன்று வரை ரஜினிகாந்த் படங்களுக்கு அதே டைட்டில் கார்டு பயன்படுத்தப்படுகிறது. பைரவி படத்திலேயே விநியோகஸ்தர் சூப்பர் ஸ்டார் தலைப்புடன் ரஜினிக்கு போஸ்டர் ஒட்டியிருக்கிறார்.
உலகநாயகன் என்றழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசனுக்கு அந்த டைட்டில் கார்டு முதல் முறையாக 2000ஆம் ஆண்டு தெனாலி பயன்படுத்தப்பட்டது. படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கமல்ஹாசனின் கண்களோடு உலகநாயகன் என்ற வார்த்தையை திரையில் தோன்றச் செய்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்திலும் இதை நாம் பார்த்திருப்போம்.
திரையுலக தளபதியாக 30 ஆண்டுகளாக கோலோச்சி நிற்கும் நடிகர் விஜய்க்கு இளைய தளபதி பட்டம் 1994ல் வெளிவந்த ரசிகன் படத்தில் பயன்படுத்தப்பட்டது. விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அப்படத்தை இயக்கியிருந்தார். 2017ல் அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி பட்டம் தளபதியாக மாற்றப்பட்டது.
தன்னை பட்டங்கள் கொண்டு அழைக்க வேண்டாம் என அஜித் கூறியிருந்தாலும் திரையுலகில் முன்னொரு காலத்தில் அதிக பட்டங்களை அஜித் கொண்டிருந்தார். ஆசை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அஜித்தின் பெயருக்கு முன்பு ஆசை நாயகன் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 2000ல் வெளியான உன்னை கொடு என்னைத் தருவேன் படத்தில் முதல் முறையாக அல்டிமேட் ஸ்டார் பட்டம் பயன்படுத்தப்பட்டது. லக்கி ஸ்டார் என்ற பட்டம் கூட அஜித்திற்கு உண்டு. மங்காத்தா படத்தில் தல 50 என டைட்டில் கார்டு இடம்பெற்றிருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக அஜித் நடித்த படங்களில் டைட்டில் கார்டு இடம்பெறுவதில்லை.
சேது படத்திற்கு பிறகு சீயான் என்ற பட்டம் விக்ரமிற்கு கிடைத்தது. அப்போது நடிகர் பிரசாந்தை டாப் ஸ்டார் என்று அழைத்துள்ளனர். சிம்புவிற்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் உண்டு. விஜய் சேதுபதி மக்கள் செல்வன் என்ற பட்டத்துடன் படங்களை ரிலீஸ் செய்கிறார். தமிழ் சினிமாவில் தற்போது ஒரு சிலரே பட்டங்களை பயன்படுத்துகின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com