ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் தெலுங்கு சகோதரர்களின் புத்தாண்டு கொண்டாட்டமான உகாதி பண்டிகையன்று ஆந்திரா, தெலுங்கானாவில் அனைத்து வீடுகளிலும் ருசிக்கப்படும் பூர்ணம் பூரேலு எப்படி செய்வது என பார்க்கலாம். தமிழில் இதை சுழியம் என சொல்கிறோம். ஆந்திராவில் இதன் செய்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். இது மிகவும் பாரம்பரியமான சுவையான இனிப்பாகும். பண்டிகை காலங்களில் சாமிக்கு பிரசாதமாக படையலிடப்படுகிறது.
![poornam boorelu in tamil]()
பூர்ணம் பூரேலு செய்யத் தேவையானவை
- பச்சரிசி
- உளுந்து
- கடலைப் பருப்பு
- நெய்
- நட்ஸ்
- தேங்காய் துருவல்
- மண்டை வெல்லம்
- ஏலக்காய் பொடி
- தண்ணீர்
- உப்பு
- பேக்கிங் சோடா
- கடலெண்ணெய்
மேலும் படிங்க அறுசுவை கொண்ட ஆரோக்கியமான உகாதி பச்சடி
பூர்ணம் பூரேலு செய்முறை
- மீடியம் சைஸ் பாத்திரத்தில் ஒரு கப் பச்சரிசி அரை கப் உளுந்து எடுத்து அதை இரண்டு முறை தண்ணீரில் நன்றாக கழுவி மூன்று முதல் நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- மற்றொரு பாத்திரத்தில் 3/4 கப் அளவுக்கு கடலைப் பருப்பு போட்டு அதை இரண்டு முறை தண்ணீரில் நன்கு கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- இப்போது ஊற வைத்த கடலைப் பருப்பில் இருக்கும் தண்ணீர் அனைத்தையும் வடித்துவிட்டு ஒரு குக்கரில் போட்டு பருப்பு முழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து இரண்டு முதல் மூன்று விசிலுக்கு வேக வைக்கவும்.
- பருப்பு நன்றாக வெந்த பிறகு அதை மசித்து விடவும். அடுத்ததாக ஸ்டஃப்பிங் தயாரிக்க போகிறோம்.
- பேனில் ஆறு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் பாதாம், உங்களுக்கு பிடித்தமான நட்ஸ் ஆகியவற்றை போட்டு பொடிதாக நறுக்கி வறுக்கவும். இதனுடன் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். இப்போது மசித்து வைத்திருக்கும் கடலைப் பருப்பை சேர்த்து கலந்து விடவும்.
- அடுத்ததாக 200 கிராம் அளவிற்கு மண்டை வெல்லம் சேருங்கள். சூட்டோடு சூடாக வெல்லம் சேர்த்து கலந்தால் அதுவாகவே கரைந்துவிடும்.
- இதை குறைந்த தீயில் வைத்து கிளறி கொண்டே இருந்தால் கெட்டியாக மாறிவிடும்.
- கெட்டியாக வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள். ஸ்டஃப்பிங் தயார்.
- வாசனைக்காக கொஞ்சம் ஏலக்காய் பொடி சேர்த்து ஆற விடுங்கள்.
- இப்போது ஊறவைத்த பச்சரிசி, உளுத்தம் பருப்பில் இருக்கும் தண்ணீரை வடித்து கிரைண்டரில் அரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும். இதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா போட்டு கலக்கவும்.
- ஸ்டஃப்பிங் ஆறிய பிறகு நெல்லிக்காய் சைஸில் உருண்டை பிடிக்கவும்.
- கடாயில் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஸ்டஃப்பிங்கை மாவில் முக்கி எடுத்து இதில் போட்டு வறுத்து எடுக்கவும். தீயை மிதமாக வைத்து வறுக்கவும்.
- நிறம் மாறியவுடன் எடுத்து விடுங்கள். சூப்பரான பூர்ணம் பூரேலு தயார்.