தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் கொண்டாடும் உகாதி பண்டிகை அம்மக்களுக்கு புதிய வருடப்பிறப்பை குறிக்கிறது. உகாதி பண்டிகை நாளில் அனைவரது வீட்டிலும் கட்டாயம் அறுசுவை கொண்ட பச்சடி தயாரித்து சுவாமிக்கு படைப்பது வழக்கம். இந்த பதிவில் உகாதி பண்டிகைக்கு செய்து ருசிக்க வேண்டிய பச்சடி, பூர்ணம் பூரேலு, கோதுமை பாயாசம், பூர்ணம் போளி எப்படி செய்வது என பார்க்கலாம்.
உகாதி பண்டிகை பலகாரம்
பூரணம் பூரேலு செய்ய தேவையானவை
- பச்சரிசி
- உளுத்தம் பருப்பு
- கடலைப் பருப்பு
- வெல்லம்
- நெய்
- தேங்காய் துருவல்
- ஏலக்காய் பவுடர்
- எண்ணெய்
பூர்ணம் பூரேலு செய்முறை
- பூர்ணம் பூரேலு செய்வதற்கான மாவு தயாரிக்க அரை கப் பச்சரிசி, கால் கப் உளுத்தம் பருப்பு, ஒரு கப் கடலைப் பருப்பு எடுத்து தண்ணீரில் நன்கு தனித்தனியாக 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
- கடலைப் பருப்பு ஊறிய பிறகு குக்கரில் போட்டு 3 விசிலுக்கு வேகவிட்டு எடுக்கவும்.
- கடாயில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கப் வெல்லம் போட்டு கொதிக்கவிட்டு வெல்லப் பாகினை வடிக்கட்டி விடுங்கள்.
- பேனில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முக்கால் கப் தேங்காய் துருவல் போட்டு ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும். இதோடு வேகவைத்த கடலைப் பருப்பையும் வடிகட்டி சேர்க்கவும்.
- அடுத்ததாக வெல்ல பாகினை ஊற்றி இரண்டு ஏலக்காய் இடித்து போட்டு இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றவும்.
- இந்த கலவை கெட்டியாகும் வரை அடுப்பில் சூடுபடுத்தி 5 நிமிடங்களுக்கு ஆறவிடுங்கள். கோலி குண்டு சைஸிற்கு இவற்றை உருட்டிக் கொள்ளவும்.
- இப்போது பச்சரிசி, உளுத்தம் பருப்புடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- அரைத்த மாவில் பூரணத்தை பஜ்ஜி போல் மூழ்கி எடுத்து எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்தால் பூரணம் பூரேலு ரெடி.
பூரணம் போளி செய்ய தேவையானவை
- கடலைப் பருப்பு
- கோதுமை மாவு
- மைதா மாவு
- மஞ்சள் தூள்
- நெய்
- ஏலக்காய்
பூரணம் போளி செய்முறை
- அரை கப் கடலை பருப்பினை நன்கு கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அதன் பிறகு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசிலுக்கு வேகவிட்டு எடுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தலா ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் மைதா மாவு கொஞ்சமாக உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு ஐந்து ஸ்பூன் நெய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
- பேனில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி இரண்டு ஏலக்காயை இடித்து போட்டு வேகவைத்த பருப்பினை சேர்த்து இரண்டு கப் பவுடர் வெல்லம் கலக்கவும்.
- இந்த கலவை கெட்டியாகும் வரை வேகவிடுங்கள். சூடு முற்றிலும் குறைந்தவுடன் இதை ஸ்ஃடப்பிங் செய்ய பயன்படுத்தவும்.
- பூரி மாவு சைஸில் மாவு உருட்டி உள்ளே பூர்ணத்தை வைத்து பரோட்டா போல் தேய்த்து அடுப்பில் போட்டு வேகவிட்டு எடுத்தால் பூர்ணம் போளி தயார்.
உகாடி பச்சடி செய்ய தேவையானவை
- புளி தண்ணீர்
- வெல்லம்
- பச்சை மிளகாய்
- மாங்காய்
- உப்பு
- வேப்பம் பூ
உகாடி பச்சடி செய்முறை
அறுசுவைகளும் கலந்தது உகாடி பச்சடி. இதற்கு அரை கப் புளி தண்ணீருடன், இரண்டு ஸ்பூன் வெல்லம், பொடிதாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், பொடிதாக நறுக்கிய இரண்டு ஸ்பூன் மாங்காய், ஒரு சிட்டிகை உப்பு, வேப்பம் பூ போட்டு கலந்துவிட்டு சுவாமிக்கு படைத்து இதை குடித்து பார்க்கவும்.
கோதுமை பாயாசம் செய்ய தேவையானவை
- உடைத்த கோதுமை
- துருவிய தேங்காய்
- ஏலக்காய் பொடி
- நெய்
- முந்திரி பருப்பு
- உலர் திராட்சை
கோதுமை பாயாசம் செய்முறை
- உடைத்த கோதுமை கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி அரை கப் அளவிற்கு எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி எடுக்கவும்.
- துருவிய தேங்காய் ஒரு கப் எடுத்து அதை மிக்ஸியில் போட்டு இரண்டு முறை தேங்காய் பால் எடுக்கவும்.
- குக்கரில் உடைத்த கோதுமை போட்டு இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலினை ஊற்றி 5 விசிலுக்கு வேக விடவும்.
- குக்கரை திறந்து முதல் தேங்காய் பால் ஊற்றி ஒரு கப் பவுடர் வெல்லம் சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கலந்துவிட்டு கொதி வரும் வரை காத்திருங்கள்.
- சிறிய பேனில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை போட்டு வறுத்து அதை குக்கரில் போட்டு கலந்துவிட்டு இரண்டு நிமிடங்களுக்கு குறைவான தீயில் சூடுபடுத்தவும்.
- சுவையான கோதுமை பாயாசமும் ரெடி.
மேலும் படிங்கMinapa sunnundalu: ஆந்திரா உளுந்து லட்டு சாப்பிட்டு இருக்கீங்களா! செம டேஸ்ட்...
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation