பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை என்றாலே தமிழ் திரையுலகினருக்கு கொண்டாட்டம் தான். டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகி வசூலை வாரி குவிக்கும். 2023 பொங்கல் பண்டிகையையொட்டி அஜித்தின் துணிவு திரைப்படமும் , விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகின. தங்களது ஹீரோக்களின் படம் வெற்றி பெற வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்ததால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது.
இம்முறை பொங்கல் ரிலீஸிற்கு பல படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஷ்ணுவிஷால் மற்றும் விக்ராந்தின் லால் சலாம், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், சுந்தர் சி.யின் அரண்மனை 4 என 5 படங்கள் வெளியாகின்றன. தைப் பொங்கல் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 16,17 ஆகிய தேதிகளில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 15ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால் முந்தைய வாரத்தின் இறுதியில் படங்கள் ஒவ்வொன்றாக வெளியாக அதிக வாய்ப்புள்ளது. 11ஆம் தேதி வியாழன் அல்லது 12ஆம் தேதி வெள்ளியன்று படங்கள் வெளியானால் 17ஆம் தேதி வரை மொத்தம் 6 நாட்களுக்கு வசூலை அள்ளலாம்.
அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் நடப்பாண்டின் தீபாவளி வெளியீடாக அமைந்திருக்க வேண்டியது. படத்தை மெருகேற்றும் பணிகள் நடப்பதால் பொங்கல் ரிலீஸ் களத்தில் கேப்டன் மில்லர் குதித்து இருக்கிறது. பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், நாசர், சந்தீப் கிஷன் உட்பட ஹாலிவுட் நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் படிங்க திரிஷாவை மீண்டும் வம்பிழுக்கும் மன்சூர்
சிவகார்த்திகேயனை வைத்து ரவிகுமார் இயக்கியுள்ள அயலான் திரைப்படம் நிச்சயம் 2024 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 2-3 ஆண்டுகளுக்கு மேலாக படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்றுள்ளன. வெளியீடு தொடர்ந்து தாமதம் ஆனதால் , படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பின்னணி இசையை முற்றிலும் மாற்றியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
பொங்கல் ரேஸில் திடீரென சுந்தர் சி.யின் அரண்மனை 4 பாகமும் இணைந்துள்ளது. பேய்களுக்கே போர் அடித்தாலும் பரவாயில்லை என்று அரண்மனை டைட்டிலை கொண்டு நான்கு பாகங்கள் இயக்கிவிட்டார் சுந்தர்.சி . இப்படத்தில் தமன்னாவுக்கு லீட் ரோல். ராஷி கண்ணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரண்மனை முதல் பாகத்தை தவிர்த்து மற்ற பாகங்கள் தோல்வியடைந்தன என்பதே யதார்த்தம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர்களாக விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் மில்லர், அயலான் படங்களுடன் ஒப்பிடுகையில் லால் சலாம் டிரெய்லர் மிக சுமாராக இருந்தாலும் ரெட் ஜெயண்ட்ஸ் வெளியீடுவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது.
மேலும் படிங்க “அண்ணன் ரெடி” நவம்பர் 24ஆம் தேதி லியோ ஓடிடி ரிலீஸ்
விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் ஆகியோரை வைத்து ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கும் படமே மெரி கிறிஸ்துமஸ். இப்படத்தின் வெளியீடு பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராதிகா ஆப்தேவுக்கு முக்கிய ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் பொங்கல் வெளியாகும் படங்கள் சற்று சொதப்பினால் கூட 10 நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து தூக்கி எறியப்படும். பா.ரஞ்சித் கதைக்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்பதால் விக்ரமிற்கு இது கம்பேக் படமாக அமையலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com