
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் அதிகமான மலையாள திரைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்க மலையாள சினிமா சாதனை செய்து வருகிறது. மக்களின் விமர்சன ரீதியாகவும் சரி, பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் ரீதியாகவும் சரி மலையாள திரைப்படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மார்ச் 28 ஆம் தேதி கடந்த வியாழன் அன்று வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் வசூல் சாதனை செய்து வருகிறது.
இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ், நடிகை அமலா பால் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம் (த கோட் லைப்). உண்மை சம்பவங்களை தழுவி 2008 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆடு ஜீவிதம் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ள திரைப்படம் இது. இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆகியுள்ள இந்த திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது.

மார்ச் 28 ஆம் தேதி வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் ரிலீசான முதல் நாளில் 7.6 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனை அடுத்து இரண்டாம் நாள் 6.25 கோடி ரூபாயும், மூன்றாவது நாள் 7.75 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை அடுத்து ரிலீஸான நான்காவது நாளில் ஆடு ஜீவிதம் திரைப்படம் 8.5 கோடி வசூல் செய்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன நான்கு நாட்களில் உலகளவில் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் இந்த வசூல் சாதனையை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரபு நாட்டில் அப்பாவியாக இறங்கி ஆடு மேய்க்கும் அரபு கும்பலிடம் சிக்கி தவிக்கும் நடிகர் பிரித்விராஜ், அந்த நாட்டில் அவர் அனுபவித்த அவஸ்தைகளும் போராட்டங்களும் ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது. தனிமை, பசி, வெயில், தாகம், விடாமுயற்சி, நட்பு, காதல் என அனைத்து விஷயங்களிலும் ரண வேதனை அடைந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் நடிகர் பிரித்திவிராஜ். பாலைவனத்தில் ஹீரோ அவதிப்படும் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ். மேலும் ஆடுஜீவிதம் திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சிக்காக நடிகர் பிரித்விராஜ் சுமார் மூன்று நாட்கள் உணவு தண்ணீர் எதுவும் இல்லாமல் ஃபாஸ்டிங் செய்து உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் என்று பட குழுவினர் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்த ஓபன்ஹெய்மர்.. சிறந்த இயக்குனராக கிறிஸ்டோபர் நோலன்!
நஜீப் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜன் நடிப்பு ஒரு முக்கிய தூண் என்று கூறினால் படத்தின் இன்னொரு தூணாக நிற்பது இந்த படத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் பிரம்மிக்க வைக்கும் இசை. ஆஸ்கர் நாயகன் ஹீரோவின் காதலை, தனிமையை, ஏக்கத்தை, பிரிவை என அனைத்து உணர்ச்சிகளையும் தன்னுடைய இசையால் ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு சேர்த்து இருக்கிறார். குடும்பத்திற்காக பல வலிகளை சுமந்து வெளிநாடுகளுக்கு வேலை பார்க்க செல்லும் சாமானிய மக்களின் வலியை உண்மையாக எந்தவித இரக்கமும் காட்டாமல் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இந்த படத்தின் இயக்குனர் பிளஸ்ஸி. இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜின் உழைப்பிற்காகவும், பிரமிக்க வைக்கும் நடிப்பிற்காகவும், ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசைக்காகவும் ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு தேசிய விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com