image

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் திரைவிமர்சனம்; ஃப்யரா ? வைல்ட் ஃப்யரா ?

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா 2 தி ரூல் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ஜகபதி பாபு, ராவ் ரமேஷ், ஸ்ரீலீலா இந்த பாகத்தில் நடித்துள்ளனர். மூன்றாம் பாகம் புஷ்பா ரேம்பேஜ் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Editorial
Updated:- 2024-12-06, 09:59 IST

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், அனுஷ்யா பரத்வாஜ், ராவ் ரமேஷ், ஜகபதி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் புஷ்பா 2 தி ரூல் படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ள உள்ள புஷ்பா 2 முன்பதிவிலேயே வசூல் சாதனை படைத்துள்ளது. புக்கிங்கில் மட்டுமே 200 கோடி வசூல் செய்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத், சாம் சி.எஸ் இசையமைத்து இருக்கின்றனர். சண்டை காட்சிகளை ராம் லட்சுமண், பீட்டர் ஃஹெயின், ட்ராகன் பிரகாஷ் இயக்கியுள்ளனர்.

புஷ்பா 2 கதைச்சுருக்கம்

முதல் பாகத்தில் மரம் வெட்டும் கூலி தொழிலாளியான அல்லு அர்ஜுன் பண பலம், படை பலம், அரசியல் பின்னணி கிடைத்த பிறகு எப்படி ஆந்திராவில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதே புஷ்பா 2.

புஷ்பா 2 விமர்சனம்

புஷ்பா 1 பாகத்தின் தொடர்ச்சியாக புஷ்பா 2 ஆரம்பிக்கிறது. செம்மரக் கடத்தல் மூலம் தனக்கென பிராண்ட் உருவாக்கி இருந்தாலும் சொந்த பந்தத்தில் தனக்கு ஏற்படும் அவமானம், அடையாள மறுப்பு அல்லு அர்ஜுனின் மனதை இறுக்கமாக வைத்திருக்கிறது. அல்லு அர்ஜுனின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டும் எண்ணத்தோடு பகத் பாசில் விடாப்பிடியாக மோதுகிறார். முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் - பகத் பாசில் மோதலை வைத்து இரண்டாம் பாகத்திற்கு கொடுக்கப்பட்ட பில்ட் அப் பூர்த்தி செய்யப்பட்டு  இருக்கிறது. மிகப்பெரிய பொருட் செலவில் ஒவ்வொரு காட்சியையும் குறைந்தது 500 பேரை வைத்து காட்சிப்படுத்தியுள்ளனர். முதல் 20 நிமிடம் தொய்வாக தெரிந்தாலும் அரசியல்வாதி ராவ் ரமேஷ் என்ட்ரிக்கு பிறகு படம் சூடுபிடிக்கிறது. மனைவி ஆசைப்பட்ட விஷயம் நடத்தி காட்ட மாநில முதல்வரையே மாற்ற அல்லு அர்ஜுன் முடிவெடுக்கிறார். இதை நிறைவேற்றுவதில் சிக்கல்களையும், பகத் பாசிலிடம் இருந்து குடைச்சல்களையும் எதிர்கொள்கிறார். இதன் வரும் காட்சிகள் அனைத்துமே வழக்கமான ஆந்திரா மசாலா படங்களின் சாயல் தெரிகிறது.

படத்தின் பாஸிடிவ்ஸ் 

  • தூணிலும் அல்லு அர்ஜுன் துரும்பிலும் அல்லு அர்ஜுன் என்பது போல் இறுதிக்காட்சிவரை ஒற்றை நபராக படத்தை அல்லு அர்ஜுன் தாங்கியுள்ளார். 
  • பெண் வேடமிட்டு சாமியாடுவது, சண்டை காட்சிகள், நடனக் காட்சிகள் மற்றும் புஷ்பா என ஒரு நபர் வாழ்ந்திருந்தால் அவரிடம் இருக்கும் பிராண்ட், தான் என்ற அகங்காரத்தை அச்சு அசலாக அல்லு அர்ஜுன் பிரதிபலித்து இருக்கிறார்.
  • தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்களும், சாம் சி.எஸ்-ன் பின்னணி இசையும் திரையில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கின்றன. பீலிங்ஸ், கிஸ்க் பாடல்கள் ஆந்திர ரசிகர்களுக்கே ஏற்ற குத்தாட்ட ரகம்.
  • தொய்வாக தோன்றும் சில காட்சிகளுக்கு அடுத்த நொடியே மாஸ் காட்சிகளை வைத்து இயக்குநர் சுகுமார் சரிகட்டி இருக்கிறார்.
  • ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் படத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்க்கும் டான்ஸ், சண்டை, எமோஷன், பாட்டு, மாஸ் காட்சிகள் என முழு தெலுங்கு மசாலா படத்தை உருவாக்கியுள்ளனர்.

படத்தின் நெகடிவ்ஸ்

  • சுமார் 3.15 மணி நேரம் ஓடும் படத்தில் அரை மணி நேரம் கட் செய்திருக்கலாம். தொடக்கத்தில் வரும் ஜப்பான் துறைமுக சீன், செம்மரக் கடத்தல், கிளைமேக்ஸ் காட்சியின் நீளத்தை குறைத்திருந்தாலும் படத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது.
  • கமர்ஷியல் சினிமா என்ற பெயரில் அடல்ட் காமெடி, கணவன் மனைவி இடையிலான உறவை ஒரு படி மேலே சென்று திரையில் காண்பிப்பது தேவையற்ற ஒன்று.
  • முதல் பாகத்தில் செம்மரக் கடத்தலில் இருக்கும் சுவாரஸ்யம் இரண்டாம் பாகத்தில் துளியும் இல்லை. இதற்கு புஷ்பாவை ஆல் இந்தியா பெர்மிட் என சப்பை கட்டு கட்டுகின்றனர்.
  • பகத் பாசிலை அல்லு அர்ஜுன் வீழ்த்திய இடத்திலேயே நிறைவு செய்திருக்கலாம். குடும்ப ரசிகர்களை ஈர்ப்பதற்காக சில காட்சிகளை வலுக்கட்டாயமாக சேர்த்துள்ளனர்.
  • இரத்தம் தெறிக்க பல காட்சிகள் உள்ளன. மசாலா படம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா ?
  • ராமேஷ்வரத்தில் செம்மரக் கடத்தலை கடலோர காவல்படை வேடிக்கை பார்ப்பது போல காண்பித்து இருக்கிறார்கள். படக்குழுவிற்கு தமிழ் - இலங்கை கடற்படை இடையே நீடிக்கும் சிக்கல் தெரியாது போல.

மேலும் படிங்க தமன்னாவின் சிக்கந்தர் கா முகதார் படம் எப்படி இருக்கு ? திரை விமர்சனம்

புஷ்பா 2 ரேட்டிங் - 2.75/5

நம்பினால் தான் சோறு என்ற சந்தான காமெடி போல் புஷ்பா எதையும் செய்யும் சக்தி படைத்தவர் என நீங்கள் நம்பினால் உங்களுக்கு இந்த படம் பிடிக்கும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com