கூலி திரைப்படத்தில் கல்யாணியாக கலக்கிய நாயகி; யார் இந்த ரச்சிதா ராம்?

கூலி திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார் நடிகை ரச்சிதா ராம். அவரது தொடக்க கால திரை அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
image

பெரும்பாலும் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களில் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அந்தக் கூற்றை உடைக்கும் அளவிற்கு கூலி திரைப்படத்தில் நடிகை ரச்சிதா ராமின் கதாபாத்திரம் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

கவனம் ஈர்த்த நடிகை ரச்சிதா ராம்:

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் பான் இந்தியன் திரைப்படமாக கூலி வெளியானது. ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு பார்வையாளர்கள் இடையே கலவையான விமர்சனம் பெறப்பட்டது. ஆனால், வசூல் ரீதியாக இப்படம் சாதனை படைத்து வருகிறது என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rachita Ram

ரஜினிகாந்த் படங்களில் பலர் நடித்தாலும் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனமும் ரஜினியின் மீது தான் அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு தனது வசீகர நடிப்பால் அனைவரையும் கவரும் ஆற்றல் இயல்பாகவே ரஜினிகாந்திற்கு இருக்கிறது. அதிலும், இப்படத்தில் நாஜார்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா மற்றும் ஷௌபின் என பல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரையும் விட ரசிகர்களுக்கு மிகுந்த சர்ப்ரைஸாக அமைந்தது ரச்சிதா ராமின் கதாபாத்திரம் தான்.

பொதுவாக, லோகேஷ் கனகராஜின் படங்களில் முதன்மை கதாபாத்திரங்களை விட, துணை நடிகர்களின் பாத்திர படைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கைதி திரைப்படத்தில் ஜார்ஜ் மரியான் மற்றும் விக்ரம் திரைப்படத்தில் ஏஜெண்ட் டீனா ஆகியோரின் கதாபாத்திரங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் கூலி திரைப்படத்தில் ரச்சிதா ராமின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல், அவரது நடிப்பும் மிக சிறப்பாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ரச்சிதா ராமின் திரைப்பயணம்:

கூலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ரச்சிதா ராம், கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பரதநாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ரச்சிதா ராம், சுமார் 50-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். சினிமா உலகில் கால் பதிப்பதற்கு முன்பாக சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்துள்ளார். இவரது சகோதரியான நித்யா ராமும் தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rachita Ram

இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 'புல்புல்' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் ரச்சிதா ராம் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தின் மூலம் ரச்சிதா ராமின் நடிப்பும் பரவலான பாராட்டுகளை பெற்றது. இதற்காக, சிறந்த கன்னட நடிகைக்கான பிரிவில் ஃபிலிம்ஃபேர் விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், 2015-ஆம் ஆண்டு வெளியான 'ரன்னா' என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இவர் ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.

இவரது திரைப்பயணத்தில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றன. அந்த வகையில், 'சக்ரவியூஹா', 'புஷ்பக் விமானா', 'அயோக்யா', 'சீதாராம கல்யாணா', 'ஆயுஷ்மான் பவா', 'மான்சூன் ராகா' மற்றும் 'கிராந்தி' போன்ற பல படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. இப்படி பல்வேறு வெற்றிப் படங்கள் கொடுத்த இவர், கூலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

தமிழில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவரது திரைப்பயணத்தில், இவர் ஏற்று நடித்த முதல் எதிர்மறையான கதாபாத்திரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கூலி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ரச்சிதா ராமின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP