அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் 'காதி' திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அந்த வகையில், பெண்களை மையமாக கொண்டு வெளியான சில திரைப்படங்கள் மற்றும் அவை பேசிய சமூக சீர்திருத்த கருத்துகள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
சினிமா என்பது கலை வடிவமாக இருந்தாலும் வணிக நோக்கத்துடன் இயங்கும் ஒரு நுகர்வு பொருளாகவே பார்க்கப்படுகிறது. ”அனைத்து கலை வடிவங்களிலும், சினிமா மிக முக்கியமானது” என லெனின் கூறி இருக்கிறார். ஆனால், இன்றைய சூழலில் சினிமாவை சமூக மாற்றத்திற்கான கருவியாக பார்ப்பவர்கள் சிலர் தான். கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்படுவதால், அதில் இருந்து லாபம் மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற சூழலில் சினிமா சுழல்கிறது. இதன் விளைவாக, ஆண்களை மையமாக கொண்ட ஹீரோயிச கமர்ஷியல் திரைப்படங்கள் தான் அனைத்து மொழி சினிமாக்களிலும் வெளியாகின்றன.
மேலும் படிக்க: கூலி படத்தில் ரஜினிகாந்திற்கு பேசப்பட்ட சம்பளத்தின் மதிப்பு இவ்வளவா?
ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களை மையமாக கொண்ட சினிமாக்கள் வெளியாகி இருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. இதில் பெரும்பாலான திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. எந்த ஒரு கதைக்கருவையும் சுவாரஸ்யமாக பார்வையாளர்களுக்கு கொடுத்தால் அதற்கு நல்ல மதிப்பு கிடைக்கும் என்பதற்கு, இத்தகைய திரைப்படங்களே உதாரணம். அந்த வகையில், பெண்களை மையமாக கொண்டு வெளியான சில முக்கியமான திரைப்படங்கள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். குறிப்பாக, சமூக சீர்திருத்தம், கமர்ஷியல், காமெடி என அனைத்து வகையான படங்களும் பெண்களை மையமாக கொண்டு வெளியாகி இருக்கின்றன.
பல திரைப்படங்களில் பெண்கள் முதன்மையான கதாபாத்திரங்களாக நடித்திருந்தாலும், 'அவள் அப்படித்தான்' திரைப்படத்திற்கு சிறப்பிடம் இருக்கிறது. ஏனெனில், சமகாலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, 1978-ஆம் ஆண்டே இந்த திரைப்படம் பேசி இருந்தது. இப்படத்தில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நடித்திருந்தாலும், ஸ்ரீபிரியாவின் கதாபாத்திரத்தை நோக்கி கதை நகரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மஞ்சு என்ற பெண், தன்னுடைய வாழ்வில் சந்தித்த ஆண்கள் குறித்தும், அவர்கள் எப்படி ஆணாதிக்க மனோபாவத்துடன் மஞ்சுவை அணுகினார்கள் என்பதும் படத்தின் கருவாக அமைந்தது. குறிப்பாக, ஒவ்வொரு சூழலிலும் காதல் என்ற பெயரில் மஞ்சு எப்படி ஏமாற்றப்பட்டால் என்பது குறித்து பேசிய படம், பெண்கள் சந்திக்கும் அன்றாட சிக்கல்களை எந்த விதமான சமரசமும் இன்றி எடுத்துரைத்தது. வணிக ரீதியாக இந்த திரைப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும், இப்போது வரை கல்ட் கிளாஸிக் அந்தஸ்தை இப்படம் தக்கவைத்துக் கொண்டுள்ளது என சினிமா ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இந்த திரைப்படத்தை ருத்ரையா இயக்கி இருந்தார்.
மேலும் படிக்க: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் "ஹவுஸ் மேட்ஸ்" திரைப்படத்தின் வசூல் வேட்டை விவரம்
பெண்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என தற்போதைய காலகட்டத்தில் நாம் பேசுகிறோம். எனினும், 1973-ஆம் ஆண்டில் வெளியான 'சூர்யகாந்தி' திரைப்படமும், இதே கருப்பொருளை அடிப்படையாக கொண்டது தான். கணவனை விட மனைவி அதிகமாக ஊதியம் பெறுபவராக இருந்தால், அது ஆணாதிக்க மனோபாவமும், தாழ்வு மனப்பான்மையும் கொண்ட ஒரு கணவனுக்கு எந்த மாதிரியான உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இத்திரைப்படத்தின் கதை அமைப்பு இருந்தது. படித்த இளைஞர்கள் கூட, புகழ் மற்றும் சமூக அந்தஸ்தில் பெண்கள் தங்களுக்கு கீழே இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு மனநிலையை, இப்படம் பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தது. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய இந்த திரைப்படத்தில், ஜெயலலிதா மற்றும் முத்துராமன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக 'புதுமைப் பெண்' திரைப்படத்தை கூறலாம். வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படும் சூழலை இன்றைய சூழலிலும் நாம் பார்க்கிறோம். அப்படி இருக்கும் போது, சுமார் 1980-களில் இதன் தாக்கம் எந்த அளவிற்கு அதிகமாக இருந்தது என இப்படம் நமக்கு தெளிவாக விளக்கியது. மேலும், செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் கணவனை மீட்பதற்காக ஒரு பெண் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தும் இப்படத்தில் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒரு ஆண் கடுமையாக உழைத்து பணம் சம்பாதிக்கும் போது அவனுடைய ஒழுக்கம் குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால், ஒரு பெண் உழைத்து வருமானம் ஈட்டும் போது, அவளுடைய ஒழுக்கத்தில் இந்த சமூகம் எப்படி சந்தேகம் கொள்கிறது என பாரதிராஜா நுட்பமாக காட்சிப்படுத்தி இருப்பார். இப்படத்தில் பாரதிராஜாவின் இயக்கம் சிறப்பு என்றால், ரேவதியின் நடிப்பு கூடுதல் சிறப்பு என்று கூறலாம்.
பெண்களை மையமாக கொண்டு திரைப்படங்கள் இயக்குவதில் கே. பாலச்சந்தருக்கு முதன்மையான இடம் இருக்கிறது. அவருடைய பெரும்பாலான திரைப்படங்களில் பெண்கள் தான் முதன்மை பாத்திரங்களாக இருந்தனர். இதில், சுஹாசினி நடிப்பில் வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படம், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. வறுமையின் பிடியில் இருக்கும் குடும்பத்திற்காக போராடுவது போன்ற கதாபாத்திரங்களை ஆண்களே ஏற்று நடித்தனர். ஆனால், அதற்கு மாறாக ஒரு பெண் அக்குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் எப்படி இருக்கும் என்று வித்தியாசமாக திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி குடும்ப வன்முறை, தந்தைவழி சமூகத்தின் சிக்கல்கள் என பல்வேறு விஷயங்களை இப்படம் பேசி இருந்தது.
பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் சீண்டல்களை எடுத்துரைத்த திரைப்படங்களில் 'மகளிர் மட்டும்' படம் மிக முக்கியமானது. மிகவும் சீரியஸான பாணியில் ஒரு விஷயத்தை எடுத்துக் கூறுவதை விட, நகைச்சுவை வடிவில் அதனை சொல்லும் போது அதிகப்படியான மக்களை சென்றடையும் என்பது நிதர்சனம். அந்த வகையில், முழுக்க முழுக்க காமெடி பாணியில் உருவான இந்த திரைப்படம், சொல்ல வேண்டிய கருத்துகளையும் அழுத்தமாக பதிவு செய்தது. ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் மூன்று பெண்கள், தங்கள் உயர் அதிகாரியால் ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு எவ்வாறு பதிலடி கொடுத்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக இப்படம் கூறி இருந்தது. சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய இப்படத்தில் ஊர்வசி, ரேவதி, ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
ஜோதிகாவின் கலைப்பயணத்தில் சிறந்த திரைப்படம் என்றால் பலரும் 'மொழி' படத்தை கூறுவார்கள். அதுவரை வெளியான திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகள் குறித்து மாறுபட்ட பிம்பம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், அவர்களின் தன்னம்பிக்கை குறித்து அழுத்தமான பதிவு செய்த திரைப்படமாக 'மொழி' அமைந்தது. அதிலும், ஒரு பெண் மாற்றுத்திறனாளியாக இருந்தால், அவளுடைய தந்தையிடம் இருந்தே புறக்கணிப்பு ஏற்படும் என்று கூறப்பட்ட விதம், பெண்களின் நிலையை அப்பட்டமாக உணர்த்தியது. ராதாமோகனின் இயக்கத்தில் காமெடியாக எடுக்கப்பட்டிருந்தாலும், பார்வையாளர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் பல காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றன.
கதாநாயகிகளுக்கான வணிக சந்தையை விரிவுபடுத்தியவர்கள் வரிசையில் அனுஷ்காவிற்கு முதன்மையான இடம் இருக்கிறது. இவரது நடிப்பில் வெளியான 'அருந்ததி' திரைப்படம், தெலுங்கில் உருவாகி இருந்தாலும் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. சாதாரண பேய் படங்களின் பாணியில் இப்படம் அமைந்தாலும், அனுஷ்காவின் தனித்துவமான நடிப்பு இதனை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றது. இதன் பின்னர், பல நாயகிகள் பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்தனர். இதுவும் 'அருந்ததி' திரைப்படத்தின் வெற்றியாக அமைந்தது. பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் லேடி சூப்பர்ஸ்டார் என்று பலராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. கோலமாவு கோகிலா, டோரா என்று பெண்களை மையமாக கொண்ட சில படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இவற்றில் இருந்து மாறுபட்ட திரைப்படமாக 'அறம்' அமைந்தது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற ஒரு அரசு அதிகாரியாக நயன்தாரா மேற்கொள்ளும் முயற்சிகளும், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அதிகாரவர்க்கமும் குறித்து தெளிவான அரசியல் கண்ணோட்டத்தில் இப்படம் இருந்தது. மேலும், விமர்சகர்கள் மட்டுமின்றி ரசிகர்களின் வரவேற்பையும் 'அறம்' திரைப்படம் பெற்றது.
இப்படி, ஒவ்வொரு காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பெண் மைய கதாபாத்திரம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மட்டுமின்றி சமூக அவலங்களையும் பேசியுள்ளன.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: YouTube
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com