சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் மகனான முருகன் தென்னிந்தியாவில் அதிகம் போற்றப்படும் கடவுள்களில் ஒருவர் ஆவார். முருக பெருமானின் பக்தர்களுக்கு தை பூசம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். தை பூசம் என்ற வார்த்தையில் "தை" என்பது தமிழ் மாதத்தின் பெயரையும், "பூசம்" என்பது நட்சத்திரத்தின் பெயரையும் குறிக்கிறது.
தை பூசம் இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களாலும் கொண்டாடப்படுகிறது. தை பூசம் என்ற வார்த்தையை கேட்டவுடன் நமக்கு பாதயாத்திரை, காவடிகள், பால் குடம், பிரசாதம் போன்ற பல விஷயங்கள் நினைவுக்கு வரலாம். இந்த பட்டியலில் பிரசாதம் என்ற வார்த்தையை பார்த்தவுடன் உங்கள் மனதிற்குள் ஒரு நெகிழ்ச்சி வந்திருக்கலாம். மந்தார இலையின் வாசத்துடன் சாப்பிடும் ஒவ்வொரு வாய் பிரசாதமும் தேவாமிர்தமாக இருக்கும். அதிலும் விஷேச நாட்களில் செய்யப்படும் பிரசாதங்கள் கூடுதல் சுவையுடன் இருக்கும். இதற்காக வருடம் முழுவதும் காத்திருப்போம். அந்த வகையில் தை பூச திருநாள் அன்று செய்யப்படும் சில விஷேஷமான பிரசாதங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
தேனும் தினைமாவும்
தை பூச நாளன்று தினையை கொண்டு ஏதாவது இனிப்பு வகைகள் செய்வது வழக்கம். உதாரணமாக தினை பாயசம், தினை லட்டு போன்ற இனிப்புகளை செய்யலாம். அதிலும் இந்த தேனும் தினைமாவும் செய்வது கூடுதல் சிறப்பு. இதற்கு தினையை ஊற வைத்து, வறுத்து பக்குவமாக செய்ய வேண்டும்.
வறுத்த தினையுடன், ஏலக்காய் மற்றும் சுக்கு தூள் சேர்த்து நன்கு பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த மாவில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து, தேன் கலந்து புட்டு பதத்திற்கு கிளற வேண்டும். இதில் தேன் கூடுதலாக சேர்த்து லட்டுகளாகவும் பிடித்து பரிமாறலாம். சிறுதானியத்தை கொண்டு பிரசாதம் செய்ய விரும்பினால் இதை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.
பஞ்சாமிர்தம்
இது பாரம்பரியமாக தைப்பூசத்தன்று செய்யப்படும் சுவை மிகுந்த பிரசாதமாகும். அதிலும் பழனி பஞ்சாமிர்தம் உலகளவில் புகழ் பெற்றது. இதை சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். இதை செய்வதற்கு, ஒரு பாத்திரத்தில் பழுத்த வாழைப்பழம், பேரிச்சம்பழம், தேன், உலர் திராட்சை, வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி மற்றும் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்கு மசிக்க வேண்டும். இதில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்தால் கோவிலில் கிடைக்கும் அதே சுவையில் பஞ்சாமிர்தம் இருக்கும். மசித்த கலவையில் இறுதியாக கல்கண்டை சேர்த்து கிளறினால் சுவையான பஞ்சாமிர்தம் தயாராகிவிடும். நீங்கள் விரும்பினால் இதில் மற்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். சுவை நிறைந்த பஞ்சாமிர்தத்தை முருக பெருமானுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம்.
கந்தரப்பம்
தை பூச திருவிழாவின் போது முருக பெருமானுக்கு கந்தரப்பம் பிரசாதமாக நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. முருகனுக்கு கந்தன் என்ற மறு பெயரும் உண்டு. இந்த அப்பம் கந்தருக்கு நெய்வேத்தியமாக செய்யப்படுவதால் கந்தரப்பம் என்று பெயர் பெற்றுள்ளது.
இதை செய்வதற்கு 1 கப் அரிசி, 1/4 கப் உளுத்தம் பருப்பு மற்றும் 1 டீஸ்பூன் கடலை பருப்பை நன்கு அலசி, 1-2 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். பின் தண்ணீரை வடித்து விட்டு அரிசி கலவையை, ஏலக்காய் மற்றும் வெல்ல கரைசல் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். இதனை ஒரு சிறிய குழி கரண்டியில் எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுக்கலாம். எண்ணெய் அதிகம் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் பணியார சட்டியிலும் கந்தரப்பம் செய்யலாம்.
கடலை பருப்பு பாயசம்
தை பூச நாள் அன்று கடலை பருப்பு பாயசம் செய்வது விஷேஷம். இதற்கு கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பு கலவையை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து வேகவைத்து கொள்ளவும். வேகவைத்த கரைசலில் வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். நீங்கள் விரும்பினால் இதில் ஜவ்வரிசியும் சேர்த்து கொள்ளலாம். இறுதியாக பொடி பொடியாக நறுக்கிய தேங்காயை நெய்யில் வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும். இதன் சுவை அற்புதமாக இருக்கும், நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள். கடலைப்பருப்பு பாயசத்திற்கு பதிலாக பதிலாக அவல் பாயசம், தினை பாயசம் போன்ற பாயசங்களையும் செய்து முருகனை வழிபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்:திகட்டாத சுவை..திருவையாறு ஸ்பெஷல் அசோகா அல்வா
திருபாகம்
ஒரு சில இடங்களில், தைப்பூச நாளன்று இந்த இனிப்பு வகையை செய்து முருகப் பெருமானை வழிபடுகின்றனர். இது மைசூர் பாக் மற்றும் பால்கோவாவின் கலவையாக இருக்கும்.
இதை செய்வதற்கு 1 கப் பாலில் 1 கப் கடலை மாவு, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ மற்றும் 2 1/2 கப் சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். இந்த கலவையை ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி, குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும. இந்த கலவை கொதிக்கும் பொழுது ஒரு கப் உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியான உடன் அரை கப் முந்திரி பொடி சேர்த்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போழுது அடுப்பை அணைக்கவும். தைப்பூச நாளன்று ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நிச்சயமாக இந்த திருபாகம் ரெசிப்பியை முயற்சி செய்து பாருங்கள்.
இதனுடன் முருகப்பெருமானுக்கு தயிர் சாதம், பானகம், சர்க்கரை பொங்கல் போன்ற மற்ற உணவு வகைகளையும் செய்து வழிபடலாம். இறைவனை மனதார வழிபட்டு உங்களால் முடிந்த உணவை சமைத்து அவருக்கு நெய்வேத்தியம் செய்யலாம். நெய்வேத்தியம் செய்த பிரசாதத்தை அனைவருடனும் பகிர்ந்து உண்ணுங்கள் உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
இந்த பதிவும் உதவலாம்:சுவையான பிரட் அல்வா செய்வது எப்படி?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation