பொங்கல் பண்டிகை ஸ்பெஷல் உணவுகளில் இதுவரை சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், சாம்பார், மெதுவடை, வாழைப்பூ வடை, சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம் எப்படி செய்வது என பகிர்ந்துள்ளோம். ஆனால் மதிய உணவிற்கு முக்கியமான கூட்டு அல்லது பொரியல் குறித்து பகிரவில்லை. சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சாப்பிட கண்டிப்பாகக் கூட்டு தேவை.
எனவே இந்தக் கட்டுரை பொங்கல் கூட்டு பற்றி தான். பொங்கல் பண்டிகைக்கு உருளைக்கிழங்கு மசியல், முருங்கைக்காய் கூட்டு, வாழைப்பூ கூட்டு செய்யப்படும். அந்த வரிசையில் நாம் இன்று சமைக்கப் போவது காரசாரமான கிராமத்து பச்சை மொச்சை பொரியல்.
மொச்சை பொரியல் செய்யத் தேவையானவை
- பச்சை மொச்சை
- தண்ணீர்
- எண்ணெய்
- சின்ன வெங்காயம்
- கறிவேப்பிலை
- சோம்பு
- இஞ்சி-பூண்டு விழுது
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- கரம் மசாலா
- மல்லிப் பொடி
- மிளகாய் தூள்
மொச்சை பொறியல் செய்முறை
- முதலில் 150 கிராம் கிராமத்து பச்சை மொச்சையை தண்ணீரில் ஒரு முறை நன்கு கழுவவும்
- அடுத்ததாகக் குக்கரில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் மொச்சையை வேக வைக்கவும்
- அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஐந்து விசில் அடிக்கும் வரை காத்திருங்கள்
- மொச்சை நன்கு வெந்த பிறகு அதிலிருக்கும் தண்ணீரை வடிகட்டி விடவும்
- இதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஒரு ஸ்பூன் சோம்பு சேர்க்கவும்
- அடுத்ததாக 75 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயத்தை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி பாத்திரத்தில் போடவும்
- இதனிடையே கொஞ்சம் கறிவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
- சின்ன வெங்காயம் பொன்னிறத்திற்கும் மாறும் வரை காத்திருக்கவும்
- இதன் பிறகு ஒன்றரை ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும்
- இஞ்சி-பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்குவதை தொடருங்கள்
- வதக்கும் போதே மூன்று பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போடவும், அதனுடன் கால் டீஸ்பூனில் பாதி அளவு மஞ்சள் தூள் சேர்க்கவும்
- பச்சை மொச்சை பொரியலுக்கு தேவையான ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் மல்லில் பொடி போடுங்கள்
- தீயை குறைத்து வைத்து மசாலா பொருட்கள் நன்கு வதங்கும் போது வேக வைத்த பச்சை மொச்சையை சேர்க்கவும்
- அதனுடன் ஒரு தக்காளியின் பாதி அளவை சிறிதாக வெட்டி பாத்திரத்தில் சேர்க்கவும்
- இங்கே நான் உப்பு அளவைக் குறிப்பிடவில்லை, நீங்களே தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்
- 80 விழுக்காடு வேலை முடிந்துவிட்டது, தற்போது ஒரு கப் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்து மிதமான சூட்டில் எட்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்
- இறுதியாக ஒரு டீஸ்பூன் அளவிற்கு கரம் மசாலா தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு சமையலை தொடரவும்
அவ்வளவு தான். பொங்கல் பண்டிகையன்று சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் தொட்டு சாப்பிட காரசாரமான கிராமத்து பச்சை மொச்சை ரெடி
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation