திருப்பதி என்றாலே பெருமாள், அதற்கு அடுத்து லட்டு. இவை தான் முதலில் நினைவுக்கு வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்தமான கோயில் பிரசாதமாக இருக்கிறது திருப்பதி லட்டு. இது திருப்பதி திருமலையில் மட்டுமே கிடைக்கும். வேறு எங்கும் இந்த லட்டு கிடைக்காது. கடைகளில் விற்கவும் அனுமதி கிடையாது. அந்த பெயரைக் கூட யாரும் பயன்படுத்த முடியாது. அந்த அளவுக்குத் திருப்பதி லட்டு பல பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றது.
திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் அசாத்திய சுவைக்குக் கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கற்கண்டு, நெய், பக்குவம் ஆகியவற்றைத் தாண்டிப் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். திருப்பதியில், லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது 3 நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்கிறது. இங்கு 3 வகையான லட்டுகள் செய்யப்படுகின்றன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோகிதம் லட்டு.
இதில் பக்தர்களுக்கு வழங்கப்படுவது புரோகிதம் லட்டு. திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணத்தையும் வேறு எங்கும் பார்க்க முடியாது. உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படுவதும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை என குறிப்பிட்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு மற்றும் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே கடைகளில் திருப்பதி லட்டு சாப்பிடுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் நீங்கள் நினைத்தால் வீட்டிலேயே செய்யலாம்.
அதற்கு இந்தப் பதிவை முழுமையாகப் படியுங்கள். இதில் திருப்பதி லட்டு செய்முறையை விளக்குகிறோம். படித்து விட்டு நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
- கடலைமாவு - 250 கிராம்
- சர்க்கரை - 500 கிராம்
- பால் - 100 மிலி
- முந்திரி - 25 கிராம்
- உலர் திராட்சை - 25 கிராம்
- கிராம்பு - 10
- ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
- ஜாதிக்காய் பொடி - சிறிதளவு
- பச்சை கற்பூரம் - சிறிதளவு
- கற்கண்டு - 25 கிராம்
- எண்ணெய் – தேவையான அளவு
- நெய் – 2-3 டீஸ்பூன்
செய்முறை
- முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் சர்க்கரை சேர்த்து 250 கிராம் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும்.
- வழக்கமான சர்க்கரை பாகு போல் கெட்டியாக இல்லாமல் தண்ணீரில் சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- அடுத்து, கடலை மாவுடன் பால் மற்றும் 250 மிலி தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவை தயார் செய்து கொள்ளவும்.
- கெட்டி தட்டாமல் மாவு சரியான பதத்தில் இருக்க வேண்டும்.
- இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தவும். பின்பு, கடாயின் மேல் சல்லடை வைத்துக் கரைத்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பூந்தி போட்டுக் கொள்ளவும்.
- நன்கு பொன்னிறமாக பூந்தியைப் பொரித்து, உடையாமல் எடுத்துக் கொள்ளவும்.
- பின்பு இந்த பூந்தியைக் சர்க்கரை பாகில் உடனே சேர்க்கவும்.
- இப்போது கடாயில் இருக்கும் எண்ணெயில் முந்திரி, கிராம்பு, திராட்சை ஆகியவற்றை போட்டு, பொரித்து எடுத்து பூந்தியுடன் சேர்க்கவும்.
- அடுத்து, ஏலக்காய் பொடி, கற்கண்டு, ஜாதிக்காய் பொடி, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் ஆகியவற்றை சர்க்கரை பாகில் இருக்கும் பூந்தியுடன் சேர்த்து 45 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.
திருப்பதி லட்டு செய்முறை
- இப்போது பூந்தி, சர்க்கரை பாகில் நன்கு ஊறி, மேலே பொங்கி வந்து இருக்கும்.
- இதனுடன் உருக்கிய நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- அடுத்து, உருண்டை பிடிக்கவும்.
- உங்களுக்கு விருப்பமான அளவில் பூந்தியைப் பக்குவமாய் எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
- அவ்வளவு தான் திருப்பதி லட்டு தயார்.
நீங்களும் விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் இந்தச் செய்முறையைப் பின்பற்றி வீட்டிலேயே கட்டாயம் திருப்பதி லட்டு செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation