கோலா உருண்டை என்பது மட்டன் கீமாவை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பரம்பரியமான செட்டிநாடு உணவாகும். மொறுகளான இந்த உருண்டையை வாயில் போட்டவுடனே பூண்டு, சோம்பு என உருண்டையில் சேர்க்கபட்டுள்ள மசாலா பொருட்களின் சுவையை தனித்தனியாக உணரலாம். இந்த பாரம்பரிய செய்முறை மாறாமல் ஒரு சைவ கோலா உருண்டை செய்ய கற்றுக்கொள்வோமா?
மட்டன் கீமாவிற்கு பதிலாக வாழைக்காயை வைத்தும் கோலா உருண்டை செய்யலாம். இந்த சைவ கோலா உருண்டையை செய்வது மிகவும் சுலபம். தேவையான மசாலாவை பக்குவமாய் அரைப்பதிலேயே இதன் மொத்த சுவையும் அடங்கி உள்ளது. எனவே குறைந்த தீயில் வைத்து மசாலாவை பொறுமையாக வறுத்துக்கொள்ளுங்கள். சட சுட வடித்த சாதத்தில் இடித்து வைத்த பூண்டு ரசம் ஊற்றி, இந்த வாழைக்காய் கோலா உருண்டையை வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா? உடனே இந்த காம்பினேஷனை முயற்சி செய்து பாருங்கள். இப்போது செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் கோலா உருண்டையின் செய்முறையை விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சி தரும் அற்புத பானங்கள்
தேவையான பொருட்கள்
- வாழைக்காய் - 2
- நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 1/2 கப்
- காய்ந்த மிளகாய் - 3-5
- சோம்பு - 3/4 டேபிள் ஸ்பூன்
- பூண்டு - 15
- கருவேப்பிலை -15-20
- பொட்டுக்கடலை - ¼ கப்
- பச்சை மிளகாய் - 1-2
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
- தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
முன் ஏற்பாடுகள்
- முதலில் வாழைக்காயை குக்கர் அல்லது கடாயில் வேகவைத்து கொள்ளவும். பிறகு வெந்த வாழைக்காயை தோல் உரித்து, துருவி தயாராக வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
கோலா உருண்டைக்கு தேவையான மசாலா
- முதலில் கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, தோலுரித்து தயாராக வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் நல்ல பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
- வெங்காயத்தை எண்ணெயிலிருந்து வடித்து வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- பின்னர் கடாயில் மீதமுள்ள எண்ணெயில் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும். இதில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். இதனுடன் தோலுரித்த 15 பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும்.
- பூண்டு நிறம் மாறத் தொடங்கும் வேளையில், இதனுடன் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
- மசாலா எல்லாம் நன்கு வறுப்பட்ட பிறகு 1/4 கப் பொட்டுக்கடலையை சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். இதில் 1-2 பச்சை மிளகாயை சேர்த்தால் கோலா உருண்டை நல்ல மணமாக இருக்கும்.
- கோலா உருண்டையில் பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் என இரண்டு வகை மிளகாயும் சேர்ப்பதால், உங்கள் சுவைக்கு ஏற்ப மிளகாயின் அளவை கூடவோ அல்லது குறைத்தோ எடுத்துக்கொள்ளலாம்.
- இறுதியாக இதில் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் மற்றும் கோலா உருண்டைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- இதில் பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும் சேர்த்து ஆற விடவும்.
இந்த பதிவும் உதவலாம்: கொத்தமல்லியை நீண்ட நாட்களுக்கு ஃபிரஷாக வைத்திருப்பது எப்படி?
வாழைக்காய் கோலா உருண்டை செய்முறை
- வதக்கி ஆற வைத்துள்ள மசாலா கலவையை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைக்கும் பொழுது தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. அரைத்த மசாலாவை வேகவைத்து தயாராக வைத்துள்ள வாழைக்காயுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான வாழைக்காய் கோலா உருண்டை தயார்.
இந்த ரெசிபியை நீங்கள் செய்யும் பொழுது உங்கள் தெருவே கோலா உருண்டையின் வாசத்தில் நிறைந்து இருக்கும். மட்டன் கோலா உருண்டைக்கு மாற்றாக ஒரு முறை வாழைக்காயை வைத்து கோலா உருண்டையை செய்து பாருங்கள்.
இந்த ரெசிபி பிடித்திருந்தால் மறக்காமல் முயற்சி செய்து பார்க்கவும். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation