• Search
Close
எதையாவது தேடுகிறீர்களா?
Search

  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பெண்கள் யார் என்று தெரியுமா?

  எங்கும், எதிலும் பெண்கள். இந்திய அரசியல் அமைப்பு மட்டும் விதிவிலக்கா என்ன? இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் பெரும் பங்காற்றிய 15 பெண் உறுப்...
  author-profile
  Updated -03 Mar 2023, 08:32 IST
  Next
  Article
  role of women in framing the indian constituition

  நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏராளமான முக்கிய அம்சங்கள் உள்ளன. இது உலகின் மிக நீளமான, எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். இந்திய அரசியலமைப்பு சபைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 389 உறுப்பினர்களில் 15 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். 

  இதில் பெண்களின் பிரதிநிதித்துவம் 4%க்கும் குறைவாகவே இருந்தது. நாளடைவில், இந்த 4% கூட ஞாபகத்தில் இருந்து மறைந்து விட்டது. மகளிர் மாதமான இந்த மார்ச் மாதத்தில்,  மறக்கப்பட்ட இந்த 15 பெண்களையும், இந்திய அரசியலமைப்பு உருவாக இவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூர்ந்து பெண் என பெருமிதம் கொள்வோம்!

   

  இந்த பதிவும் உதவலாம்: குடும்பம் பற்றி `அயலி’ வெப் சீரியஸ் எழுப்பிய கேள்விகள் 

   

  அம்மு சுவாமிநாதன் 

  அம்முகுட்டி என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் ஒரு சமூக சேவகியும் அரசியல்வாதியும் ஆவார். சிறுவயது முதலே விடுதலைச் சிந்தனை கொண்டிருந்த இவர், WIA (Women’s Indian Association) இல் பணியாற்றிய போது பெண் தொழிலாளர்களின் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்காக அச்சமற்ற பல போராட்டங்களை முன்னெடுத்தவர். சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் வேண்டும் என்று கோரிய சங்கங்களில் WIA வும் ஒன்றாகும்.  

  அன்னி மஸ்கரீன் 

  திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் இரட்டை M.A பட்டம் பெற்று, இலங்கையில் பேராசிரியர் ஆக பணியாற்றினார். சுதந்திர இந்தியாவில் மாகாணங்களின் ஒருங்கிணைப்பை சர்தார் வல்லபாய் படேல் செய்தார். அந்த இயக்கத்தில் பெரும்பங்காற்றிய மஸ்கரீன், பின்னர் சுயேச்சை வேட்பாளராக இந்தியாவின் முதல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கேரளாவில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர் தான். 

  indian constituition women

  தாக்ஷாயணி வேலாயுதன் 

  ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்து, அப்போதைய சமூக கட்டுகளை உடைத்து முதல் தலித் பெண் பட்டதாரி என்ற பெருமை பெற்றவர்.   தீண்டாமை, கொத்தடிமை, இடஒதுக்கீடு போன்ற பிரச்சனைகளுக்காக அரசியல் சாசன சபையில் குரல் கொடுத்தவர்.  குறிப்பாக, தலித்துகளுக்கான அரசியல் இட ஒதுக்கீடு விவகாரத்தை அவையில் பேசிய ஒரே பெண் தலைவர் இவர்தான். அதுமட்டுமன்றி, 1945-16 காலகட்டத்தில், அரசியல் சாசன சபையின் இளம் பெண் தலைவரும் இவர்தான். 

  பேகம் ஐசாஸ் ரசூல் 

  தன் இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்டு, முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஆனவர். பெண்களுக்கான ஹாக்கியை பிரபலப்படுத்துவதிலும் இஸ்லாமிய பெண்களுக்கான உரிமைகள் குறித்தும் அரசியல் சாசன அவையில் பேசக்கூடிய ஒரே பெண்ணாக இவர்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரிவினைக்குப் பிறகும் இந்தியாதான் என் நாடு என்று பாகிஸ்தான் செல்ல மறுத்தவர். 

  துர்கா பாய் தேஷ்முக் 

  வழக்கறிஞரான இவர், உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் பெண் போராளிகளை ஒருங்கிணைப்பதில் பெரும்பங்கு வகித்தவர். இதற்காக மூன்றே ஆண்டுகளில் மூன்றுமுறை சிறைவைக்கப்பட்டவர். இந்தியாவில் குடும்ப நீதிமன்றங்களுக்கான அவசியத்தை முதலில் வலியுறுத்தியவர் என்ற பெருமையும் துர்கா பாய் அவர்களை தான் சேரும். இந்திய அரசியலமைப்பில் தேசிய மொழி, நீதித்துறையின் இறையாண்மை ஆகிய பகுதிகளை வடிவமைப்பதில் பங்காற்றியுள்ளார்.  

  ஹன்சா ஜிவ்ராஜ் மேத்தா 

  அரசியல் சாசன சபையில் பணியாற்றியதோடு மட்டுமின்றி, இவர் அடிப்படை உரிமைகள் துணைக்குழு, ஆலோசனைக் குழு மற்றும் மாகாண அரசியலமைப்பு குழுவிலும் உறுப்பினராக இருந்தார். 1947இல் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட அன்று,  நள்ளிரவில் இந்தியப் பெண்களின் சார்பாக தேசியக் கொடியை சட்டமன்றத்தில் வழங்கினார். சுதந்திர இந்தியாவில் பறந்த முதல் கொடி என்பது குறிப்பிடத்தக்கது. 

  indian constituition female

  கமலா சவுத்ரி 

  இவர் ஒரு ஹிந்தி மொழி கதாசிரியர். இவர் 1930 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக பங்களித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, இந்திய மாகாண அரசாங்கத்தின் உறுப்பினராக 1952 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 

  லீலா ராய் 

  வங்காளத்திலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் உறுப்பினர் லீலா ராய் தான். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நெருங்கிய நண்பராக விளங்கிய இந்திய பெண்களின் கல்விக்காக ஆற்றிய சேவைக்காக இன்றும் மேற்கு வங்க மக்களால் நினைவுகூரப்படுகிறார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிராக தன் பதவியை ராஜினாமா செய்தவர் இவர். 

  மாலதி சௌத்ரி 

  அரசியல் குடும்பத்தில் பிறந்த மாலதி சவுத்ரி, போராட்டங்களில் ஈடுபடுவதற்காக வசதி, அரசியல் பதவி ஆகியவற்றை துறந்தவர். தொழிலாளர்கள் மீதான அவரது அர்ப்பணிப்பு, ஒரிசாவை சோசலிசத்தை நோக்கித் தள்ளியது. அரசு அடக்குமுறையை எதிரத்து விவசாயிகளுக்கு உதவவும், தீண்டாமை மற்றும் சாதிவெறியை எதிர்த்துப் போராடவும், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும், பெண்களின் நிலைமையை உயர்த்தவும் தொடர்ந்து போராடி வந்தவர் இவர்.  

  பூர்ணிமா பானர்ஜி 

  இன்றைய உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பூர்ணிமா பானர்ஜி, சுதந்திர போராட்ட வீரர், கல்வியாளர் அருணா ஆசப் அலியின் தங்கை. அரசியலமைப்பின் படி, ஒரு மாநிலங்களைவை உறுப்பினருக்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதில் பங்காற்றியவர். 

   

  இந்த பதிவும் உதவலாம்:  பெண் என்பதால் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிராகரிக்கப்பட்டாரா? 

   

  ராஜ் குமாரி அம்ரித் கவுர் 

  அம்ரித் கவுர் அன்றைய உத்தர பிரதேசத்தில் (United Provinces) இருந்து அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தியாவில் சுகாதார அமைச்சராக கேபினட் பதவி வகித்த முதல் பெண். அகில இந்திய மகளிர் மாநாட்டு மையம், டெல்லியில் உள்ள லேடி இர்வின் கல்லூரி மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) ஆகியவற்றை  நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார். பர்தா, உடன்கட்டை, தேவதாசி ஆகிய பெண்னடிமை முறைகளை அரசியல் நிர்ணய சபையில் எதிர்த்தவர். 

  female members of indian constituition

  ரேணுகா ரே 

  அகில இந்திய பெண்கள் மாநாட்டின் சட்ட செயலாளராக இருந்த இவர், இந்திய பெண்களின் சட்ட குறைபாடுகள், விசாரணை கமிஷனுக்கான வேண்டுகோள், பெண் தொழிலாளர் நிலை மற்றும் பெண் கடத்தலை தடுப்பதிலும் முக்கிய பங்காற்றினார். அத்துடன், பெண்களின் சொத்து வாரிசுரிமைக்காக கடுமையாக பிரச்சாரம் செய்தார். 

  சரோஜினி நாயுடு 

  இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பிரபலமாக அறியப்படும் சரோஜினி நாயுடு, 1925 இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1947இல் இன்றைய உ.பி.யின் ஆளுநரானார். இந்தியாவில் கவர்னர் பதவியை வகித்த முதல் பெண்மணியும் இவரே. 

  சுசேதா கிரிப்லானி 

  1940 இல் காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவை நிறுவியவர். அவர் அரசியலமைப்பு சபையின் சுதந்திர அமர்வில் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். இவர் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சரும் இவரே. இந்திய தேசியக் கொடியை வடிவமைக்கும் குழுவில் பங்காற்றினார். 

  விஜயலட்சுமி பண்டிட் 

  இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் சகோதரி. ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகளுக்கான இந்தியப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். பல்வேறு நாடுகளின் தூதாண்மைப் பொறுப்பும் இந்திய அரசியல் சாசன நிர்ணய சபையின் பிரதான உறுப்பினராகவும் விளங்கினார். 

  இந்த 15 பெண்மணிகளும் மறக்கப்பட வேண்டியவர்கள் அல்ல போற்றப்பட வேண்டியவர்கள். அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். 

  இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

  image source: google 

  பொறுப்புத் துறப்பு

  உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com