எந்தவொரு விளையாட்டிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்-வீராங்கனைகளை பிறப்பிலேயே திறன் கொண்டவர்கள் என வர்ணிப்பார்கள். ஒரு தசாப்தத்திற்கு சில வீரர்கள் அசாத்திய திறனுடன் உருவெடுப்பார்கள். அப்படியாக மலேசியாவில் நடந்த முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி-20 உலக கோப்பையில் ஜொலித்து இந்திய கிரிக்கெட்டின் புது நட்சத்திரமாக கொங்காடி த்ரிஷா உருவெடுத்துள்ளார். ஆந்திராவின் பத்ராசலம் (தற்போதைய தெலங்கானா) டவுனில் ராமி ரெட்டி என்பவருக்கு பிறந்த கொங்காடி த்ரிஷா மகளிர் டி-20 உலக கோப்பையில் தொடர் நாயகி விருதை பெற்று அசத்தியுள்ளார்.
கொங்காடி த்ரிஷாவின் 2 வயது கிரிக்கெட்
பொதுவாக கிரிக்கெட்டை புரிதலுடன் விளையாடுவதற்கு குறைந்தது 10 வயது ஆகும். கொங்காடி த்ரிஷாவுக்கு அவருடைய தந்தை ராமி ரெட்டி 2 வயதில் கிரிக்கெட் மட்டையை கொடுத்துள்ளார். பிளாஸ்டிக், டென்னிஸ் பந்துகளை எதிர்கொள்ள வைத்து கானல் நீராகி போன தனது கனவுக்கு மகள் மூலம் உயிர் கொடுக்க தொடங்கியுள்ளார். ஒரு செயலை திரும்ப திரும்ப செய்தால் நம்முடைய தசை நினைவகத்தில் பதிந்துவிடும். அதுபோல கொங்காடி த்ரிஷாவுக்கு பந்துகளை வீசி அவருடைய ஆட்டத்திறனை ராமி ரெட்டி மேம்படுத்தியுள்ளார்.
8 மணி நேர கிரிக்கெட் களம்
வழக்கமான பெற்றோர் போல் பள்ளிக்கு அனுப்பினால் கிரிக்கெட் கனவு நிறைவேறாது என்பதை உணர்ந்த ராமி ரெட்டி மகள் கொங்காடி த்ரிஷாவுக்கு தனியார் மூலம் 3 மணி நேரம் பாட பயிற்சி வகுப்புகள் எடுக்க வைத்துள்ளார். தினமும் 8 மணி கிரிக்கெட் பயிற்சி செய்ததே அவரை இன்று இந்திய கிரிக்கெட் வீராங்கனையாக மாற்றியுள்ளது. கொங்காடி த்ரிஷா 11 வயதாக இருக்கும் போது சிறப்பு பயிற்சி அளிக்க ஐதராபாத் நகருக்கு இடம்பெற வேண்டியிருந்தது. இதனால் ராமி ரெட்டி தனது வேலையையும் ராஜினாமா செய்தார்
மிதாலி ராஜ் வரிசையில் கொங்காடி த்ரிஷா
ஐதராபாத் மாநகரின் ஜான்ஸ் கிரிக்கெட் அகாடமியில் 11வயதாக இருக்கும் போது கொங்காடி த்ரிஷா சேர்ந்துள்ளார். வி.வி.எஸ்.லட்சுமண், மிதாலி ராஜ் போன்ற ஜாம்பவான் வீரர்களை உருவாக்கிய அகாடமி அது. ஒரு நல்ல கிரிக்கெட் வீரரை கண் - கை ஒருங்கிணைப்பு ஆட்டத்தில் கண்டுபிடித்துவிடலாம். கொங்காடி த்ரிஷாவுக்கு இயல்பாகவே அந்த திறன் இருந்ததால் அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்ல பயிற்சியாளர் மனோஜிற்கு எளிதாகிவிட்டது. 8 வயதில் 16 வயதுக்கு உட்பட்ட அணி, 11 வயதில் 18 வயதுக்கு உட்பட்ட அணி, 12 வயதில் 23 வயதுக்கு உட்பட்ட அணி, 13 வயதில் சீனியர் அணி என தன்னை விட மூத்தவர்களையும், அனுபவசாலிகளையும் களத்தில் எதிர்கொண்டு விளையாடியுள்ளார் கொங்காடி த்ரிஷா.
2023ல் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டிலும் கொங்காடி த்ரிஷா அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் நடப்பு தொடரில் ஒரு சதம் உட்பட 309 ரன்கள், 7 விக்கெட் வீழ்த்தி தொடர் நாயகி விருதை வென்று அசத்தியுள்ளார். இந்திய மகளிர் சீனியர் அணியின் கதவு கொங்காடி த்ரிஷாவுக்கு திறந்தே இருக்கிறது. மென்மேலும் சாதனைகள் படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடி தர கொங்காடி த்ரிஷாவுக்கு ஹெர் ஜிந்தகி குழு சார்பாக வாழ்த்துகள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation