சமீபத்தில் நான் புது தில்லிக்கு தில்லி பல்கலைக் கழகத்தின் ஆரியப்பட்டா கல்லூரி மாணவர்கள் நடத்திய தலித் இலக்கிய கருத்தரங்கத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.தில்லியை கடுங்குளிர் சூழ்ந்திருந்தது.ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட நான்,சமூக வலைதளங்களில் உலாவிய போது ஜி 5,ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்`அயலி’ என்ற தொடரைப் பற்றி பரவலாக எழுதி வந்த பாராட்டு துணுக்குகளாலும்,பகிரப்பட்ட அந்த தொடரின் துணுக்கு வீடியோக்களாலும் உந்தப்பட்டு அத்தொடரை பார்க்கலானேன்.கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கொண்ட அந்த தொடரை எட்டு பாகங்களாக பிரித்து காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.எல்லா பாகங்களையும் முழுதாய் பார்த்து முடித்த பின்னர் `அயலி’ அன்றைய இரவு முழுவதும் விழுங்கிவிட்டாள்.
தான் உருவாக்கிய கதை மாந்தர்கள்,சூழல்கள்,காட்சிகள் வழியே எந்த நினைவுகளை அல்லது நிகழ்வுகளை,உணர்வுகளை பிறரின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று இயக்குநர் விரும்பினாரோ அதை விட அதிகமாகவே இயக்குநர் வெற்றியடைந்திருக்கிறார் என்றே கூறலாம்.
பெண் கல்வி,மூடநம்பிக்கை,குழந்தைத் திருமணத்திற்காக நடக்கும் கல்வி இடை நிற்றல்கள்,மாதவிடாயைப் பற்றிய மூட நம்பிக்கைகள்,என ஒவ்வொரு கருத்திற்கு தகுந்தாற் போல காட்சி அமைப்புக்களை செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக, 4,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதில் தொடர்புடைய 1,800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒரு சில தினங்களுக்கு முன் தான் செய்தி வந்தது.பெண்களின் ஐயப்ப வழிபாடு பிரச்சனை குறித்து நாம் அறிந்ததே.பெண்களின் முன்னேற்றத்திற்காக நாம் பல கோட்பாடுகளை வகுத்த போதும் இன்னும் கல்வி இடை நிற்றல்கள் தொடர் கதையாகவே இருக்கிறது.
கலை என்பது கலையின் திசைவழியே மட்டும் பயணிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மக்கள் சிக்குண்டு கிடக்கும் பிரச்சனைகளை அணுகும் போது அது மேலும் புறவயமாக விரிந்து செல்கிறது.ஒவ்வொரு மனங்களிலும் பல்வேறு மணங்களை பரப்புகிறது.கலை என்பது ஒரு வகையில் ஒரு நீரோடையை போல தான்.அது செல்லும் திசையெங்கிலும் அந்தந்த சூழலுக்கு உகந்தது போல வறட்சியை போக்கி பசுமையை உருவாக்கிச் செல்கிறது.அந்த வகையில் `அயலி’என்னுள் உறங்கிக் கிடந்த பல பழைய நினைவுகளை எழுப்பி எதிர் வரும் காலங்களிலும் விழிபோடு இருக்கவும் பசுமையை பரப்பவும் தூண்டியிருக்கிறாள்.
`அயிலி’யின் கதைநாயகியான தமிழ்ச்செல்வியோடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பல பெண்கள் தங்களை ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.ஏன் இன்றைக்கும் ஐயப்ப கோயில் வழிபாட்டோடு இணைத்துப் பார்க்க முடியும் என்ற போதிலும் அக்கதையோடும் கதையின் நாயகியோடும் வேறொரு வகையில் என்னை நான் பொருத்திக் கொண்டேன்.அப்பொழுது அந்த கலைப்படைப்பு ஆணாதிக்கமாக மட்டுமல்லாமல் பாலாதிக்கமாகவும் என் நினைவுகளில் விரிந்துச் சென்றது.
இந்த பதிவும் உதவலாம்: “பிச்சை எடுப்பாங்க” இந்த கருத்தை உடைக்கணும் - ஒரு திருநங்கை எழுத்தாளரின் நேரடி பதிப்பு அனுபவம்
பாலின மாறுதல்கள் என்னுடைய செயலின் வழியே வெளிப்படையாக அரும்பிய என்னுடைய பதினொன்றாம் வகுப்பு காலகட்டத்தில் சக மாணவர்களால் நான் சந்தித்த கேலி கிண்டல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.இதை கண்டிக்க வேண்டிய பள்ளி நிர்வாகம் என் அம்மாவை அழைத்து வரச் சொல்லி அவர்களிடம் என் பாலின நடவடிக்கைகளை கூறி, அதனால் நான் காலையில் சகமானவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு பள்ளிக்கு வரவேண்டும்.பள்ளி விடுவதற்கு முன்னதாகவே நான் பள்ளியை விட்டு கிளம்பி விட வேண்டும்.சக மாணவர்களோடு அமர்ந்து வகுப்பறையில் அல்லாமல் தலைமை ஆசிரியர் அறையில் தான் படிக்க வைக்க வேண்டும் என்ற கட்டளையின் பேரிலேயே நான் என்னுடையை மேல் நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டை தொடர்ந்தேன்.சகத்துவம்(fraternity)மறுக்கப்பட்டு,தீண்டாமைக் கொடுமையை அனுபவிப்பதை விட இடை நிற்றலே மேல் என கருதி மேல்நிலை பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.பின்பு கோயில்பட்டி பாலிடெக்னிக்கில் படித்து 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து.பின் பாலினம் மாறி இந்தியாவிலேயே முதல் திருநங்கை பொறியியல் கல்லூரி மாணவியாக 2014 ல் சேர்ந்து,அப்பொழுது முரசொலியில் கலைஞர் அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்று,பின் திருநர்களின் (திருநங்கையர்-திருநம்பியர்)உரிமைகளுக்காக தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் செய்து,சிறை அனுபவங்கள் பெற்று, பல்வேறு களப்பணிகளை ஆற்றி,2021 ஆம் வருடம் தற்போதைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் கையால் சிறந்த திருநர் செயற்பாட்டாளர் விருது பெற்று,சில உலக நாடுகளுக்கு பயணித்து, தற்போது டெல்லி வரை கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருப்பதையும் அதே வேலையில் இன்னும் ஏதோ ஒரு குக்குராமத்தில் என்னைப் போல பாலினத் தீண்டாமையை அனுபவித்துக் கொண்டிருக்கும் திருநர்களின் நிலையையும் எண்ணிப் பார்த்தேன்.அந்த துன்ப எண்ணங்கள் உருகி கண்களில் கண்ணீர் கோர்த்து நின்றது.
`அயலி’தொடரில் இப்படி ஒரு வார்த்தை வரும் ``குடும்பன்னா அதுல எனக்கு இடமே இல்லையா?’’ ``பாசத்த காட்ட வேண்டாம்னு சொல்லல,அதே பாசத்த என் மேலையும் காட்டலாம்ல’’என ஒரு கதாப்பாத்திரத்தின் வழியே உதிரும் வார்த்தைகளைக் கேட்டு உருகாத எந்த திருநர்களும் இருக்க முடியாது.ஏனெனில் திருநர்கள் பாலினத்தின் பேரால் குடும்பத் தீண்டாமையை அனுபவிப்பவர்கள்.இந்த தீண்டாமை மிகக் கொடியது.அது எங்கள் சமூகத்தை நிற்கதியாக்கிவிடும்.பெற்றவர்களை விட்டு ஒதுக்கி,உடன் பிரந்தவர்களை விட்டு ஒதுக்கி,கடைவீதியில் கை தட்டி பிச்சையெடுக்க வைக்கும்.பாலியல் தொழிலுக்குத் தள்ளும்.அங்கேயும் சமூகத் தீண்டாமை எங்கள் மீது திணிக்கப்படும்.இந்த தீண்டாமைகளிடமிருந்து தப்பிக்க அரசிடம் கோரிக்கை வைத்தால் அங்கே அரசத் தீண்டாமை இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: இணையத்தை புரட்டி போட்ட மாற்று பாலின தம்பதி.. தாயான திருநம்பி!
அயிலின் கதாநாயகி தமிழ்ச்செல்வியின் தாய் அவள் பாலினத்தைச் சார்ந்தவள்.அதனால் தன்னுடைய மகள் பருவமெய்தும் உணர்வையும் அதை மறைக்கும் நியாயத்தையும் அவளால் புரிந்து கொள்ள முடிகிறது.தமிழ்ச்செல்வியின் தலைமை ஆசிரியர் இவள் பாலினத்தைச் சேர்ந்தவள் அதனால் தன் பாலினத்தின் முன்னேற்றத்திற்கு ஊக்கமாக இருக்க முடிகிறது.தமிழ்செல்விக்காக சண்டையிடும் கிராமத்து பெண்கள் இவள் பாலினத்தை சார்ந்தவர்கள் அதனால் அவர்கள் இவளின் நியாயம் புரிந்து நியாயத்திற்கு ஆதரவாக அணிதிரள்கிறார்கள்.
தமிழ்செல்வியின் இடத்தில் ஒரு திருநரை நீங்கள் பொருத்திப் பார்த்தால் தாயும் தலைமை ஆசிரியரும் கிராமத்து பெண்களும் அந்நியமானவர்களாகவும் அல்லது எதிரானவர்களாகவுமே காட்சியளிக்கிறார்கள்.
தமிழ்செல்வி பத்தாம் வகுப்பு பலகையில் ஆண்,பெண் என்ற வருகைப் பதிவில் பெண்-1 என்று எழுதுவது போல பல கல்லூரி பலகைகளில் எழுதப்படாமல் இருக்கிறது திருநர் வருகைப் பதிவுகள்.தமிழ்ச்செல்வி கரும்பலகையில் அதை எழுதும் போது கல்லூரியில் திருநர்-1 என்று நான் எழுதுவதாகவே உணர்ந்தேன்.அயிலி இருபதாம் நூற்றாண்டில் அதை எழுதினாள்,நாங்களோ இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எழுத நினைக்கிறோம்.தமிழ்ச்செல்வியின் கனவு இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் நினைவானது.எங்களின் கனவு எப்பொழுது நினைவாகும் ?எனும் கேள்வியை என்னுள் எழுப்பினாள் அயலி !
திருநங்கை கிரேஸ்பானு
எழுத்தாளர்,திருநர் அரசியல் செயல்பாட்டாளர்.