பெண் என்பவள் எல்லா பாலினங்களையும் போல இந்த பூமியில் ஒரு உயிர் என்பதுதான் எல்லோருக்கும் அவசியமான அடிப்படைப் புரிதல். எந்த உயிரும் தன் வாழ்வில் யாருக்காகவும் எதையும் வலிந்து சுமக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைதான் முழுமையான சுதந்திரம். ஆனால், இதைப் பெயரளவில் மட்டும் வைத்துக் கொண்டு, தொடர்ச்சியாக ஒரு அறமற்ற, மனிதமற்ற சுமையை பெண்களின் தலையில் சுமத்திக் கொண்டே இருந்தது உலகம். இன்று அறிவுவயப்பட்ட சமூகம் என்று தன்னைத்தானே மனிதன் அழைத்துக்கொண்டும் கூட இந்த தவறை திருத்திக் கொண்ட பாடில்லை.
“என்ன தவறு அது? நானும் அதைச் செய்கிறேனா?” என்று கேட்டால், இந்தக் கட்டுரையின் முடிவில் சுயமாக நீங்கள் அதைக் கண்டடையலாம். கற்பழிப்பு என்கிற வார்த்தைப் பயன்பாடு அது.
‘பாலியல் வன்கொடுமை’ என்பது மிகப்பொருத்தமான சொல்தான். கட்டாயமாக நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை என்றால் அதை ‘பாலியல் வல்லுறவு’ என்றும் கூட பயன்படுத்தலாம். ஆனால், கற்பழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துவது முற்றுமுழுதாகப் பெண்ணினத்தின் தலையில் புனிதமுள் சூட்டும் பொறுப்பற்ற எழுத்து என்றால் மிகையல்ல. எளிமையாக ஒன்றைப் புரிந்துகொள்வோம். என் வீட்டுக் குழந்தை அல்லது என் வீட்டுப் பெண்ணுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடந்துவிட்டது என்று கொள்வோம். அதனைக் கற்பழிப்பு என்று சொல்லலாமா? அப்படியானால், கற்பு என்றொன்று இருக்கிறதா? அதுவும் பெண்களின் தொடையிடுக்கில் மட்டும்தான் இருக்கிறதா?
ஒரு ஆணோ, திருநரோ பாலியல் தாக்குதலுக்கோ / வன்கொடுமைக்கோ ஆளாகும்போது கற்பழிப்பு என்று பயன்படுத்துவதில்லை. எனில், பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு என்று நம்பும் ஆணாதிக்க மடமையின் வெளிப்பாடுதானே அது என்பதை அன்பிற்கினிய புத்தாயிரக் குழந்தைகள் (2K kids) புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: தனியார் பள்ளியில் படிக்க அரசாங்கம் உதவுகிறதா?
ஆம், அது கற்பழிப்புதானே என்று தோன்றுமானால் நாம் நம்மை சரிசெய்து கொள்ள வேண்டும் என்று பொருள். உண்மையில், ஒரு மனநோயாளி அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறான். அது ஒரு விபத்து. அந்த விபத்துக்கு அவளுக்கு சிகிச்சையோ தேவையான ஆதரவோ ஓய்வோ வழங்கப்பட வேண்டும். அவ்வளவுதான் நமக்கு வேண்டிய புரிதல்.
இதில் கற்பும் இல்லை. அது அழிக்கப்படக்கூடிய பொருண்மையும் இல்லை. நிஜமாகவே அழிக்கப்பட வேண்டியது எழுதும் மனங்களின் எண்ணங்களில் ஏறியிருக்கும் அழுக்குத்தான் என்பது என் துணிபு. ஒருவேளை தெரியாமல் எழுதுகிறார்கள் என்றால், அடுத்தடுத்த கட்டங்களில் இருக்கும் பிழை திருத்துநர்கள், ஆசிரியர்கள் ஆகியவர்களுக்கும் இது தெரியாதா என்ன? எப்படியானாலும் இதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான். ஒன்று மனிதர்களின் கவனக்குறைபாடு, மற்றொன்று கருத்தியல் குறைபாடு.
மூன்றாவதாக ஒரு காரணமும் இப்போது சொல்லப்படலாம். தொலைக்காட்சிகளில் டிக்கர் என்று சொல்லப்படும் வரிச்செய்திப் பெட்டிக்குள் செய்தி வர, குறிப்பிட்ட எழுத்துகளுக்குள் எழுத வேண்டியது கட்டாயம். தினசரி நாளிதழ்களின் விளம்பர வாசகங்களுக்காக குறைந்த எழுத்துகளில் ஒரு வார்த்தை தேவைப்படுகிறது என்பார்கள். குறைந்த எழுத்துகள் என்பதற்காக உடலுறுப்பை குறிக்கும் கெட்ட வார்த்தைகளை எழுத முடியுமா என்ன? கற்பழிப்பு என்பதும் கெட்ட வார்த்தைதான்.
இன்றிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு நான் வார இதழ் ஒன்றுக்காக ஒரு பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்தியை எழுதியபோது, எனக்கு கற்றுத்தரப்பட்ட பாடங்களுள் ஒன்று, “கற்பழிப்பு, மானபங்கம், கற்பு சூறையாடல், பலாத்காரம்” என்றெல்லாம் எழுதக்கூடாது என்பது. அத்துடன்,“நேற்று வரை இப்படி எழுதியது தவறு என்றால், இன்று முதல் திருந்துவதுதான் சரி” என்ற அறிவுரை. குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பழைய பாடம் இது. இன்னுமா எல்லா ஊடகவியலாளர்களுக்கும் போய்ச்சேரவில்லை. பொதுவெளிக்கு செய்தி சொல்லும் ஊடகங்களுக்கே இந்த விழிப்புணர்வு வரவில்லை என்றால், பொதுமக்களை எப்படி இந்த ஊடகங்கள் விழிப்படையச் செய்யும்?
தமிழை இப்படி செய்யலாமா?
‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’என்றும் ‘கற்பெனும்திண்மை’ என்றும் முறையே ஒளவையும் திருவள்ளுவரும் சொன்ன தமிழை பயன்படுத்தும் ஊடகங்கள் கொஞ்சமும் அறிவற்று ‘கற்பு அழிப்பு’ என்று எழுதலாமா? கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்று சொன்ன பாரதியை கொண்டாடும் தமிழ் என்று இனிமேல் சொல்ல தகுதியிழந்துவிட மாட்டோமா? இலக்கியமாக உருட்டுவதில் பெரிதாக பலனில்லை என்றபோதும் தமிழ் ஒருபோதும் கற்பை கலவியுடன் தொடர்புபடுத்தவில்லை (உரையாசிரியர்கள் படுத்தியிருக்கலாம்) என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
‘அணிநலன் நவ்விய அறனிலாளன்’ என்று அகநானூறு ஆதங்கப்படும். அதையும் கடந்து அந்தப் பெண் ‘நெஞ்சினாள் பிழைப்பிலள்’ என்று கம்பன் பேசியதுதான் தமிழுக்கான தனித்திமிர். உலக வழக்கத்தோடு ஒட்டி நடக்க வேண்டிய கட்டாயம் இதழியலுக்கு இல்லை. இங்கு உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் அது இல்லைதான். காரணம், இங்கு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் மதிப்பொக்கும் எல்லா உயிர்க்கும்தானே! அதைத் துணிவுடன் சொன்ன மொழி தமிழ். தமிழ் இதழியலுக்கு அந்த துணிவு வேண்டாமா?
இந்த இலக்கியங்களில் எல்லாம் ஒரு பெண் நடத்தப்பட்ட/எழுதப்பட்ட விதம் குறித்த முரண் எனக்கு உண்டு. அதை எழுதுவதற்கும் கூட யாரையும் காயப்படுத்தாத மொழிவளம் தமிழில் உண்டு.
இப்படியிருக்க, அந்த மொழியில் பெண்ணை இழிவுபடுத்தி ‘கற்பழிப்பு’என்று எழுதலாமா? அன்பும் அறனும் இல்வாழ்க்கை என்றால் அறிவும் அறனும் தான் இதழியல். இன்னொருவர் வலியை தன் வலிபோல் உணர்தல்தான் முதலில் அறிவு. இந்தத் தெளிவை மீண்டும் தமிழ் ஊடகங்களுக்கு ஒருமுறை நினைவூட்ட வேண்டியிருக்கிறது போலும்.
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இதழானாலும் சரி, நூறு நிமிடங்களுக்கு முன் தொடங்கிய இணைய இதழானாலும் சரி. எழுத்து யாரையும் காரணமற்று காயப்படுத்துவதாக இருத்தல் கூடாது. இந்தத் தலைமுறை பிள்ளைகள் ஊடகங்களுக்குள் வந்திருக்கும் சூழலில் முறையான எழுத்தறத்தைக் கற்பிக்க வேண்டியது கட்டாயம். அத்துடன், ஆண்டுக்கணக்கில் அனுபவம் கொண்ட மூத்தவர்களும் மாறியிருக்கும் சூழலை உள்வாங்கிக்கொள்ள வேண்டியது அவசியம் .
இவையெல்லாம் யாரும் கற்றுத்தந்து வருவதில்லை. இதழியல் பாடப்புத்தகங்களில் இந்த கருத்தாண்மை தெளிவுக்கு இடமில்லை. பிறர் வலியை தன் வலியாக உணரும் மனிதத்தால் மட்டுமே பிறக்கும் என்பதை ஊடக இளம் தலைமுறைக்கு உரியவகையில் அறிமுகப்படுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பெண்கள் யார் என்று தெரியுமா?
தமிழ்நாட்டின் பிரதான ஊடகங்கள் பலவற்றிலும் பாரபட்சமின்றி இந்த சொல் பயன்பாட்டை பார்க்க முடிகிறது. ஏற்கனவே இந்த தெளிவெல்லாம் அச்சு, தொலைக்காட்சி, இணைய ஊடகங்களுக்கு இருக்கிறதென்றால், இனி இந்தப் பயன்பாட்டுக்கு தண்டனை விதிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹெர்சிந்தகி வாயிலாக நான் கோரிக்கை வைக்கிறேன்.
மொத்தத்தில், பாலியல் வன்கொடுமை ஒரு மலினமான குற்றம் என்றால், அதை கற்பழிப்பு என்று எழுதுவது அதனினும் மனிதமற்ற குற்றம்.
Images Credit: freepik