பிரபல தனியார் பள்ளியில் உங்கள் குழந்தை படிக்க வேண்டுமா? யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. ஆனால், அதற்கான செலவு? கவலை வேண்டாம். 8ஆம் வகுப்பு வரையிலான கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும். இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது.
புதிய திட்டம் இல்லை. 2009ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அமலில் இருக்கிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதற்கான மாணவர் சேர்க்கையும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டில் மார்ச் 20ஆம் தேதி முதல் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
என்ன திட்டம் இது?
தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் மாணவர் சேர்க்கையில் 25%ஐ இலவசமாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும்.
கல்வி பெறுவது உரிமை என்று சொன்னால் மட்டும் போதுமா? பொருளாதார சூழலால் குழந்தைகள் கல்வி பெற முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளதே! அதைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு.
ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச தொடக்கக் கல்வியை (8ஆம் வகுப்பு வரை) வழங்குவதுடன், கட்டாய சேர்க்கையையும், தொடர் வருகையையும் உறுதி செய்வதும் கூட இச்சட்டத்தின்படி அரசாங்கத்தின் கடமை.
இதற்காக ஆண்டுதோறும் எல்.கே.ஜி முதல் 1ஆம் அகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டும் நடைபெற உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: அடிக்காமல் திட்டாமல் குழந்தையை சமாளிப்பது எப்படி?
எந்தெந்த பள்ளிகளில் சேர்க்கலாம்?
- தனியார் சுயநிதி பள்ளிகள் அனைத்தும் இந்த சட்டத்தின் கீழ் அடங்கும்.
- நவோதயா பள்ளிகளுக்கு விதிவிலக்கு என்று யாராவது சொன்னால் நம்ப வேண்டாம். அவற்றுக்கும் இது பொருந்தும்.
- குழந்தையின் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பள்ளியாக இருந்தால் கூடுதல் முன்னுரிமை உண்டு.
யார் யாருக்கு சேர்க்கை வழங்கப்படும்?
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் உள்ளோர்,
- நலிவடைந்த வகுப்பினர் (ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர்),
- கைவிடப் பட்டோர் (ஆதரவற்றோர்)
- எய்ட்ஸ் நோயாளிகள்
- திருநர் சமூக குழந்தைகள்,
- தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்
எப்படி சேர்ப்பது?
2023- 24 ஆம் ஆண்டுக்கான - 25% சதவீத இடங்களுக்கான - மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விண்ணப்பங்களை rte.tnschools.gov.in என்ற தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பெறலாம்.
விண்ணப்பத்தில் குழந்தையின் உரிய விவரங்கள் மற்றும் குடும்பத்தின் முறையான வருமான விவரங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காக பெற்றோர் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. எந்தப் பள்ளியோ அல்லது தனிநபரோ, குழந்தையின் பள்ளிச் சேர்க்கையின் போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரிடமிருந்து தலைக் கட்டணம் (Fnitial Fees) வசூலிலிப்பதோ அல்லது குழந்தையை முன்தேர்வு முறைக்கு (Selection Tests) உட்படுத்துதலோ கூடாது.
மீறுவோருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கல்வி உரிமைச் சட்டம் சொல்கிறது.
குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, இந்திய அரசின் கடமைகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் 100 சதவீத கல்வியறிவை இந்தியா எட்டவில்லை. ( நேஷனல் சர்வே ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையின்படி, 2022இல் இந்தியாவில் 77.7 சதவீதமே கல்வியறிவு பெற்றோர்).
எல்லோருக்கும் கல்விக்கான சாத்தியம் இருக்கிறது. பயன்படுத்திக் கொள்வோம்.