வேல், அயன், சிங்கம், ஆதவன், சிங்கம் 2 போன்ற படங்களில் சூர்யா நடித்த போது ரஜினி, கமல், அஜித், விஜய்யுடன் ஒப்பிட்டு பேசப்பட்டார். அதன் பிறகு ஏனோ தவறான கதைத் தேர்வால் தொடர் தோல்வி படங்களை கொடுத்தார். தற்போது மும்பைக்கு குடிபெயர்ந்துவிட்ட சூர்யா தெலுங்கு திரையுலகிற்கு தாவியுள்ளார். தமிழ் சினிமாவில் அவர் நிராகரித்த அல்லது தவறவிட்டு பிளாக்பஸ்டரான ஐந்து படங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
1995ல் வசந்த் இயக்கத்தில் அஜித், பிரகாஷ் ராஜ், சுவலட்சுமி நடிப்பில் வெளிவந்த ஆசை திரைப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக இருந்தது. ஆசை கதையை இயக்குநர் வசந்த் சூர்யாவிடமே முதலில் சொல்லி இருக்கிறார். அப்போது சூர்யாவுக்கு நடிக்க விருப்பமில்லாமல் அப்படத்தை தவறவிட்டார். அதன்பிறகு 1997ல் வசந்த் இயக்கத்தில் உருவான நேருக்கு நேர் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
இயக்குநர் லிங்குசாமி பையா படத்தின் கதையை சூர்யாவிடமே சொல்லியிருக்கிறார். சூர்யா நடிக்க தயங்கவே கார்த்தியை வைத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 2010ல் அதிக வசூல் செய்த படமாகவும் பையா அமைந்தது. அதன் பிறகு இயக்குநர் லிங்குசாமியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நடித்த படமே அஞ்சான். இது சூர்யாவுக்கு மிகப்பெரிய தோல்வி படமாகும்.
7ஆம் அறிவு படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்து ராஜமெளலி அவருடன் பணியாற்ற விரும்பியிருக்கிறார். ஆனால் அது ஏனோ நடக்கவில்லை. தமிழில் பாகுபலி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா கலந்து பாராட்டி பேசியிருந்தார். கங்குவா பட நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமெளலி சூர்யாவுடன் பணியாற்றும் வாய்ப்பை தவறவிட்டதாக வருந்தினார். அப்படம் ராம் சரண் நடித்த மகதீரா ? அல்லது பிரபாஸின் பாகுபலி ? எது எனத் தெரியவில்லை.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஏழாம் அறிவு எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும் வசூலை குவித்தது. துப்பாக்கி பட கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யாவை அணுகிய போது சூர்யா ஏனோ மறுத்துள்ளார். அதுவே நாளடைவில் விஜய்யின் திரைப்பயணத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஷ்யாம், அருண் விஜய், குட்டி ராதிகா நடித்து தேசிய விருது பெற்ற படம் இயற்கை. இப்படத்தில் சூர்யா நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதே போல துருவ நட்சத்திரம், பராசக்தி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை சூர்யா தவறவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு உண்டு.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com