தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என நடிகை சரோஜா தேவி ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். 17வயதில் திரையுலகிற்கு நுழைந்த சரோஜா தேவி தமிழில் எம்.ஜி.ஆர் உடனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் எண்ணற்ற படங்களில் நடித்தவர். முகபாவனையில் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர்ந்ததால் அபிநயா சரஸ்வதி என்ற பட்டம் பெற்றார். இந்த நிலையில் 87வயதான சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உயிரிழந்துள்ளார். சரோஜா தேவியின் மறைவு திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1957ல் தங்கமலை ரகசியம் படத்தில் அறிமுகமாகிய சரோஜா தேவிக்கு 1958ல் எம்.ஜி.ஆருடன் நடித்த நாடோடி மன்னன் திரைப்படம் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. 1957 முதல் 1970 வரை தமிழ், கன்னடம், தெலுங்கு திரையுலகை சரோஜா தேவி ஆட்சி செய்தார் என்றே சொல்லலாம். எம்.ஜி.ஆருடன் 25 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். திருடாதே, எங்க வீட்டு பிள்ளைம் அன்பே வா, படகோட்டி, பாசம், காவல்காரன், கலங்கரை விளக்கம், பணத்தோட்டம், தர்மம், பெரிய இடத்து பெண், அரச கட்டளை, தாய் சொல்லை தட்டாதே, ஆசை முகம் என வரிசையாக எம்.ஜி.ஆருடன் அடுத்தடுத்து நடித்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் 22 படங்களில் நடித்திருக்கிறார். கோபால் கோபால் உங்களை உண்மையிலேயே காதலிக்கிறேன் என்ற பிரபலமான வசனம் சிவாஜி கணேசனின் புதிய பறவை படத்தில் இடம்பெறும். சபாஷ் மீனா, எங்கள் குடும்பம் பெருசு, இரும்புத்திரை, விடிவெள்ளி, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுடன் மட்டுமல்ல ஜெமினி கணேசனுடனும் 17 படங்களில் நடித்திருக்கிறார். 90ஸ் கிட்ஸிற்கு சரோஜா தேவியை விஜய்யின் ஒன்ஸ் மோர், சூர்யாவின் ஆதவன் படங்களின் மூலம் நினைவிருக்கும். பழைய சினிமா பாடல்களை டிவியில் பார்த்தால் கண்டிப்பாக சரோஜா தேவியின் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் தவறாமல் இடம்பெறும்.
1938ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர் சரோஜா தேவி. ஒக்கலிக கவுடர் சமூக பின்னணியை கொண்ட சரோஜா தேவி வீட்டின் நான்காவது மகள் ஆவார். 13வயதிலேயே பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூலம் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 1955ல் 17வயதில் மகாகவி காளிதாஸா என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். 1967ல் திருமணம் செய்து கொண்ட பிறகும் சரோஜா தேவிக்கு சினிமா வாய்ப்புகள் தொடர்ந்தன. தமிழ் திரையுலகில் கே.ஆர்.விஜயா, ஜெயலலிதாவின் மலர்ச்சி வரை சரோஜா தேவி லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தார். ஆந்திர முதலமைச்சரான என்.டி. ராமா ராவுடன் சில படங்களில் நடித்திருக்கிறார்.
திரையுலகில் சரோஜா தேவியின் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக 1969ல் பத்ம ஸ்ரீ, 1992ல் பத்ம பூஷன், 2008ல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 2009ல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்தது. அதே ஆண்டு கர்நாடக அரசு டாக்டர். ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருதையும், 2009ல் ஆந்திர அரசு இரண்டாவது முறையாக 2001ஆம் ஆண்டை தொடர்ந்து என்.டி.ஆர் தேசிய விருதை வழங்கி கெளரவித்தது.
மேலும் படிங்க நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com