எசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல் நடித்து வெளிவந்த படம் பரமசிவன் பாத்திமா. சாயா தேவி, எம்.எஸ்.பாஸ்கர், சேஷ்விதா, கூல் சுரேஷ் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது மத ரீதியான சர்ச்சைகள் எழலாம் என பேசப்பட்டது. எனினும் படம் வெளிவந்ததும் கடந்ததும் பலருக்கும் தெரியவில்லை. கடந்த வாரம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. வாருங்கள் இப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.
மத ரீதியாக பிரிந்திருக்கும் மூன்று கிராமங்களில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. கொலைகளின் பின்னணி என்ன ? காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடித்ததா ? இல்லையா ? என்பதே பரமசிவன் பாத்திமா. தமிழகத்தில் மதமாற்றம் எப்படி தொடங்கியது என்பதையும் பேசியுள்ளனர்.
சிவன் மலை பகுதியில் இருக்கும் கிராமத்தில் வாழ்வாதாரத்திற்காக மக்கள் மதமாற்றம் செய்து கிராமத்தை மூன்றாக பிரித்து வாழ்கின்றனர். இங்கு அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. ஆரம்பத்தில் தடயம் கிடைக்காமல் தடுமாறும் காவல்துறை ஒரு வழியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கின்றனர். குற்றவாளிகளின் பின்னணி பகீர் கிளப்புகிறது. மூன்று கிராமத்திலும் அமைதி திரும்பியதா ? கொலைகளுக்கான நோக்கம் என்ன ? என்பதை 2 மணி நேர படமாக எடுத்துள்ளனர்.
எந்தவொரு விஷயத்தையும் முழுமையாக சொல்வதற்கு தைரியம் தேவை இல்லையென்றால் அதைப் பற்றி பேசக்கூடாது. இப்படத்தில் மதமாற்றம் பற்றி சொல்வதாக நினைத்து குறிப்பிட்ட மதத்தின் மீது அரைகுறையாக குற்றம் சுமத்த முயன்றுள்ளனர். மதமாற்றத்திற்கு பணம், வாழ்வாதாரம் காரணம் என்றாலும் அது ஒரு தனி நபரின் உரிமை என சட்டம் சொல்கிறதே. மதம் மாறிய பிறகும் பலர் சான்றிதழ்களை மாற்றாமல் ஜாதி ரீதியான ஒதுக்கீடு பெறுவது உண்மையே. ஒரு சில காட்சிகளில் வசனங்களை பீப் செய்துள்ளனர். மதமாற்றமே பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணம் எனில் இயக்குநர் அதற்கான தீர்வை சொல்ல முற்பட்டு இருக்க வேண்டும். எந்தவித தயக்கமும் இன்றி தடாலடியாக உண்மைகளை உடைத்து பேசியிருந்தால் படத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் மக்களிடம் இருந்து ஆதரவு கிடைத்திருக்கும்.
இதை ஹெர் ஜிந்தகி படிக்கும் வாசகர்களிடமே விட்டு விடுகிறேன்.
எல்லா மதங்களிலும் ஏற்ற தாழ்வு, பெண் அடிமைத்தனம் உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. தன் மதத்தை நேசிக்கும் ஒருவன், வணங்கும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவன் மற்ற மதங்கள் மீது குற்றம் சுமத்தமாட்டான். நிறம், சாதி, மதம், மொழி, இனம், பிறப்பு ரீதியாக பிறரை தாக்க கூடாது என புரிந்து கொண்டாலே உலகில் நிலவும் கோடிக்கணக்கான பிரச்னைகள் தீர்ந்துவிடும்.
தமிழ் குடிமகன் போன்ற படைப்பை எடுத்த எசக்கி கார்வண்ணனிடம் இப்படியான படத்தை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
மேலும் படிங்க பீனிக்ஸ் விமர்சனம் : அடித்து துவைத்த கதையில் வில்லன்களை அடித்து துவைக்கும் சூர்யா சேதுபதி
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com