அறிமுக படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்களில் எஸ்.பி.ஜனநாதனும் ஒருவர். 2003ல் இவர் இயக்கிய இயற்கை திரைப்படம் காதலர்கள் மற்றும் ஒரு தலை காதலர்கள் மத்தியில் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தை யாராலும் மறக்கமுடியாது. இப்போது இயற்கை படத்தை பார்த்தால் கூட கடல் சார்ந்த வாழ்வியலையொட்டி எடுக்கப்பட்ட ஒரு மாலுமியின் காதலை உணர முடியும். வெள்ளை இரவுகள் என்ற சிறுகதையை வைத்து எஸ்.பி.ஜனநாதன் இயற்கை படத்தை இயக்கினார். ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் தேசிய விருது உட்பட முக்கிய விருதுகளை வென்றது. இந்த படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
படத்தின் கதை : வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை கடலிலேயே செலவிடும் ஒரு மாலுமி கரைக்கு திரும்பும் போது நீண்ட நாட்களாக காதலனை தேடி காத்திருக்கும் பெண் மீது காதல் கொள்கிறான். இருவரும் பழகிய பிறகு அப்பெண்ணுக்கு மனமாற்றம் ஏற்படுகிறது. இறுதியில் தேடப்பட்டு வந்த காதலன் காதலியை சந்திக்க வருகிறான். அப்பெண் யாரை திருமணம் செய்தார் என்பதே கிளைமேக்ஸ்
இயற்கை விமர்சனம்
நடிகர் ஷ்யாம் வாழ்க்கையில் இயற்கை மிக முக்கியமான திரைப்படமாகும். வாரிசு படத்தின் நேர்காணல்களில் கூட இயற்கை படத்தில் பணியாற்றிய அனுபவத்தை விவரித்தார். விரல் விட்டு எண்ணும் அளவில் ஷ்யாம், அருண் விஜய், குட்டி ராதிகா, பசுபதி, செந்தில், கருணாஸ், சிமா பிஸ்வாஸ், சின்னி ஜெயந்த் இந்த படத்தில் நடித்திருந்தனர். படத்தின் முதல் 15 நிமிடங்களில் கரை திரும்பும் மாலுமிகளின் செயல்கள் எப்படி இருக்கும், கடலோர மக்களின் வாழ்வியல் என்ன என்பதை ஏகாம்பரம் காட்சிபடுத்தி இருப்பார். கப்பலின் பழுதுநீக்கும் பணிகள் நடைபெறும் நேரத்தில் ஷ்யாம் தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ நினைக்கிறார்.
அருண் விஜய் - குட்டி ராதிகா காதல்
படத்தில் 15 நிமிடங்களுக்கும் குறைவாக நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்களிடம் கேப்டன் முகுந்தாக அருண் விஜய் திட்டு வாங்கும் அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அருண் விஜயை தேடிக் கொண்டிருக்கும் குட்டி ராதிகா மீது ஷ்யாம் காதல் கொள்கிறார். குட்டி ராதிகாவை காதலித்தாலும் அவருடைய ஆசைக்காக அருண் விஜயை தேட உதவுகிறார். ஒரு கட்டத்தில் ஷ்யாம் குட்டி ராதிகாவிடம் காதலை வெளிப்படுத்திய பிறகு கோபத்தில் அவர் விலகி செல்கிறார்.
ஷ்யாம் பற்றி புரிந்துகொண்ட அனைவரும் குட்டி ராதிகாவை திருமணத்திற்கு சம்மத்திக்க வைக்கின்றனர். இறுதிவரை முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் குட்டி ராதிகாவுக்கு அருண் விஜயின் வருகை மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப பக்காவாக செட் ஆகியிருக்கும். காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் இன்றளவும் நம் மனதை வருடும்.
மேலும் படிங்கதுல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்பட விமர்சனம் : உண்மைக் கதையா ?
இயற்கை படத்தின் சூட்டிங்
இயற்கை படத்தின் பெரும்பாலான காட்சிகள் ராமேஸ்வரம், திருச்செந்தூர், தூத்துக்குடியிலும், அந்தமான் தீவுகளிலும் எடுக்கப்பட்டது. படத்தில் வரும் கலங்கரை விளக்கம் செட் போட்டு எடுக்கப்பட்டது. இதற்காக கலை இயக்குநர் செல்வகுமாருக்கு கூடுதல் பாராட்டுகள்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உலகை விட்டு சென்றிருந்தாலும் அவருடைய இயற்கை படைப்பு காலங்கள் கடந்தும் பேசப்படும். இந்த படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவு செய்ததை பலரும் இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.
காதலை உண்மையாக வெளிப்படுத்திய இருவரில் பெண் ஏன் ஒருவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தார் என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால் அதுவே இயற்கையின் முடிவு என விட்டுவிடுங்கள் என்று எஸ்.பி. ஜனநாதன் சொல்லாமல் சொல்லி இருப்பார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation