herzindagi
image

இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன்; கதாநாயகன் யார் தெரியுமா ?

நடிகர் ரவி மோகன் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார். இயக்குநராக தனது முதல் படத்தில் யோகி பாபுவை கதாநாயகனாக நடிக்க வைக்கவுள்ளார். முழு நீள காமெடி படமாக இப்படம் அமையவுள்ளது.
Editorial
Updated:- 2025-03-12, 15:51 IST

நடிகர் தனுஷை தொடர்ந்து நடிகர் ரவி மோகன் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் நடிகராகவும், நடிகர்கள் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளனர். கமல்ஹாசன், பாக்யராஜ், பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, தனுஷ் வரிசையில் ரவி மோகன் தற்போது படம் இயக்குவதில் ஆர்வமுடன் இருக்கிறார். ரவி மோகனுக்கு படம் இயக்குவதில் ஏற்கெனவே அனுபவம் உண்டு. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 

இயக்குநராகவும் ரவி மோகன்

சைரன், பிரதர், காதலிக்க நேரமில்லை என ஹாட்ரிக் தோல்வியால் துவண்டு கிடந்த ரவி மோகனுக்கு சுதா கொங்கராவின் பராசக்தி திரைப்படம் மிகப்பெரிய கம்பேக் கொடுக்க போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பராசக்தி படத்தில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். அதை தொடர்ந்து கராத்தே பாபு படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார். இரு படங்களின் அறிவிப்பு வீடியோக்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இயக்குநர் அவதாரம் எடுக்க முடிவெடுத்துள்ளார் ரவி மோகன். பராசக்தி, கராத்தே பாபு பணிகளை முடித்தவுடன் படம் இயக்கப் போகிறார். 

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு

கோமாளி, சைரன் படங்களில் தன்னுடன் காமெடி கலாட்டா செய்த யோகி பாபுவை இயக்க திட்டமிட்டுள்ளார் ரவி மோகன். கோமாளி படத்தின் வெற்றிக்கு யோகி பாபு - ரவி மோகன் கூட்டணி முக்கிய காரணமாகும். படத்தின் கதை விவாதம் முடிந்து நடிப்பதற்கு யோகி பாபு சம்மதமும் தெரிவித்துவிட்டார். யோகி பாபு பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் மண்டேலா திரைப்படம் மட்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இப்படம் முழு நீள காமெடி கதைக்களத்தில் அமையவுள்ளதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களில் அறிவிப்பு இன்னும் ஒரிரு மாதங்களில் வெளியாகவுள்ளது.

மேலும் படிங்க  ஜெயிலர் 2 சூட்டிங் முதல் நடிகை அபிநயா நிச்சயதார்த்தம் வரை; இந்த வார சினிமா அப்டேட்ஸ்

வெற்றிமாறன் கதையில் ரவி மோகன்

யோகி பாபு படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் எழுதிய கதையில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கவுள்ளார். அப்படம் முடிந்தவுடன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலைத் துறையில் எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற முடிவோடு ரவி மோகன் இயக்குநராகவும் முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com