
எந்தவொரு நடிகராக இருந்தாலும் அறிமுக படத்திலேயே வெற்றி காண்பதெல்லாம் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதில் நடிகர் சிவக்குமாரின் மகன் கார்த்திக்கு மட்டும் விலக்கு அளித்துவிடலாம். கார்த்தி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக இருந்த போது அவருக்கு இருந்த ஒரே அடையாளம் சிவக்குமாரின் மகன் என்பது மட்டுமே. அதற்கு முன்னதாக பிரபல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். எனவே பருத்திவீரன் வெளியான போது கார்த்தியின் அடையாளத்தையே சிவக்குமாரின் மகன் எனக் குறிப்பிட காரணம்.
காப்பான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பருத்திவீரன் படத்தை பார்த்த போது இது கார்த்திக்கு முதல் படமா என ஆச்சரியத்தில் இருந்தேன் என்றும் சூர்யாவை கூட அப்படி பார்த்ததில்லை என்றும் கூறினார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடிய பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காகப் பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் மற்றொரு தேசிய விருது எடிட்டிங்கிற்கும் கிடைத்தது.
இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரர் என்று ஒருவரை கூற வேண்டுமென்றால் அது இயக்குநர் அமீர் மட்டுமே. படம் வெளியாகி 300 நாட்கள் வெற்றி விழா கண்ட போதிலும் அமீரை சிவக்குமாரின் குடும்பம் ஏனோ ஒதுக்கிவிட்டது. பருத்திவீரன் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களைப் பார்த்தால் பருத்திவீரனின் வெற்றி அமீருக்கே சொந்தம் என அனைவருக்கும் புரியும். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியதோடு அறிமுக படத்திலேயே கார்த்தியை தேர்ந்த நடிகராக மாற்றினார். அதுவும் நகரத்தில் பிறந்து வெளிநாட்டில் கல்வி பயின்ற கார்த்தியை கிராமத்து சண்டியராக காண்பித்து இருப்பார்.

பருத்திவீரன் படம் ஆரம்பிக்கப்பட்ட போது ஞானவேல் ராஜா தயாரிப்பாளராக இருந்தார். ஆனால் சொற்ப நாட்களிலேயே படப்பிடிப்பில் தாமதம், பட்ஜெட் பிரச்சினைகளை கூறி கழன்று விட்டார். நடிகர் சிவக்குமார் கார்த்தியை தன்னிடம் ஒப்படைத்துவிட்டார் என்ற எண்ணம் கொண்டிருந்த அமீர் படத்தை டிராப் செய்யாமல் சசிக்குமார் உட்பட பலரிடம் காசு வாங்கி படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்துவிட்டார்.

இறுதிக்கட்ட பணிகள் நடந்த போது படம் நிச்சயம் வெற்றி பெறப்போகிறது எனத் தெரிந்து கொண்ட ஞானவேல் ராஜா ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து படத்தை தனது நிறுவனம் மூலம் விநியோகித்து திரையரங்குகளில் வெளியிட்டார். ரசிகர்களும் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் அதன் பிறகு அமீருக்கும் நடிகர் சிவக்குமாரின் குடும்பத்திற்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டது. ஞானவேல் ராஜா விட்டுச் சென்ற பிறகு அமீர் செலவு செய்த தொகை அவரை சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கிராமத்து கதையம்ஸம் படம் பார்த்திருக்கிறோம் என்ற திருப்தி அனைவருக்கும் ஏற்பட்டது. கார்த்தி, சரவணன், கஞ்சா கருப்பு, பிரியாமணி, குட்டிச் சாக்கு, பொன்வண்ணன், ஒரு காட்சிக்கு வந்த சமுத்திரக்கனி என அனைவரும் நடிப்பில் முத்திரை பதித்தனர். இளையராஜா பாடிய அறியாத வயசு, அய்யய்யோ, ஊர் ஓரம் புளியமரம் ஆகிய பாடல்கள் இன்று வரை ரிபீட் ரகம். கஞ்சா கருப்பு பருத்திவீரனுக்கு பிறகு பல படங்களில் நடித்து விட்டாலும் டக்ளஸ் அண்ணன் காமெடியையே மட்டுமே இன்னும் பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன.

இன்னும் 25 ஆண்டுகள் கடந்தாலும் பருத்திவீரன் படம் பேசப்படும். ஆனால் படத்தினால் அமீருக்கு ஏற்பட்ட பண கஷ்டம், மன கஷ்டம் ஆகியவற்றை தீர்க்க நடிகர் சிவக்குமாரின் குடும்பம் மனம் திறந்து பேசுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அதே போல வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் நடிக்க சூர்யா ஒப்புக்கொள்வாரா போன்ற கிசுகிசுக்கள் பரவிய நிலையில் தற்போது வாடிவாசல் படமே எடுக்கப்படுமா அல்லது எடுக்கப்படாதா என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதெல்லாம் நமக்கு தேவையா கண்டு காணாததும் போல் இருப்போம் என பருத்திவீரன் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவு செய்ததை எக்ஸ் தளத்தில் கார்த்தியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com