தக் லைஃப் விமர்சனம் : நாயகனை மிஞ்சியதா ? கமல்ஹாசனின் விவேகம் 2 எப்படி இருக்கு ?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாஸன் நடிப்பில் வெளிவந்துள்ள தக் லைஃப் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். கமல் சொன்னது போல் 38 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நாயகன் படத்தை மிஞ்சும் அளவிற்கு தக் லைஃப் உள்ளதா ? தெரிந்து கொள்வோம்.
image

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 5 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தக் லைஃப். சிம்பு, அபிராமி, நாசர், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், தனிகெல்லா பரணி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சின்னி ஜெயந்த், வையாபுரி, வடிவுக்கரசி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் 9 பாடல்கள் உள்ளன. திரை அனுபவத்தில் சுகர் பேபி, முத்து மழை பாடல்களை கட் செய்துவிட்டனர். அன்பு அறிவு தக் லைஃப் படத்தின் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளனர். வாருங்கள் படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

தக் லைஃப் கதைச் சுருக்கம்

காவல்துறை, அரசியல்வாதிகள் கண்டு பயப்படும் மிகப்பெரிய டான் ரங்கராய சக்திவேல் நாயகர் எனும் கமல்ஹாசனை சிம்புவும் இதர கூட்டாளிகளும் சேர்ந்து கொலை செய்துவிடுகின்றனர். அதில் எப்படியோ தப்பிக்கும் கமல் தனது முதுகில் குத்திய கும்பலை பழிவாங்கினாரா ? இல்லையா ? என்பதே தக் லைஃப்

தக் லைஃப் விமர்சனம்

படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷாவுக்கு மட்டுமே முக்கியத்துவம். இந்த மூன்று பேரை சுற்றியே கதை நகர்கிறது. வளர்ப்பு மகனான சிம்புவுக்கு எல்லா அதிகாரம் கிடைத்த பிறகும் கூட்டாளிகளின் பேச்சை கேட்டு கமல்ஹாசனை தீர்த்து கட்டுகிறார். இமயமலையில் தானாக மீண்டு கராத்தே, குங்பூ பயிற்சிகளை கற்று சிம்புவையும், இதர கூட்டாளிகளையும் தீர்த்து கட்ட கமல்ஹாசன் டெல்லி வருகிறார். இதனிடையே டெல்லியில் அட்டூழியம் செய்யும் ரவுடி கும்பல்களை விரட்ட காவல் அதிகாரி அசோக் செல்வன் ராஜதந்திரம் செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது ? அதுவே தக் லைஃப்.

தக் லைஃப் படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • இரண்டாவது ஹீரோவான சிம்பு படத்தை தூக்கி சுமக்கிறார். கமல்ஹாசனின் காட்சிகளை விட சிம்புவின் காட்சிகள் சிறப்பாக இருந்தன.
  • த்ரிஷா இப்படியான கதாபாத்திரத்தை ஏன் தேர்வு செய்தார் என்ற கேள்வி எழுந்தாலும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
  • முதல் பாதியில் கதை எதை நோக்கி நகர்கிறது என்ற தெளிவு இல்லையென்றாலும் விறுவிறுப்பாக தொய்வின்றி காட்சிகள் செல்கின்றன.
  • இறுதியில் கமல்ஹாசன் - சிம்பு சண்டை காட்சிகள் வெகு சிறப்பு.

தக் லைஃப் படத்தின் நெகட்டிவ்ஸ்

  • படத்தின் மிகப்பெரிய பிரச்னை முதல் பாதி முடிக்கப்பட்ட விதமும், இரண்டாம் பாதி நகரும் விதமும் திருப்திகரமானதாக இல்லை. கமல் தனது கூட்டாளிகளை மதித்து செயல்பட்டாலும் அவர்கள் ஏன் அதிகாரத்தை தட்டி பறிக்க நினைக்கின்றனர் என்பதை அழுத்தமாக சொல்ல தவறிவிட்டனர்.
  • தந்தையும், வளர்ப்பு மகனும் ஒரே பெண் மீது மோகம் கொள்வது என்ன மாதிரியான கதை அமைப்பு என இயக்குநரை கேட்க வேண்டும். சிம்புவை திரிஷா மிருகம் எனக் குறிப்பிடுகிறார். காட்சிகளில் இதை விவரித்து இருக்கலாம்.
  • அசோக் செல்வன் மீசை வைத்த கடுமையான காவல் அதிகாரியாக இல்லாமல் சிரிப்பு போலீஸ் போல் ஏனோ தானோ என வந்து செல்கிறார்.

தக் லைஃப் ரேட்டிங் : 2.25 / 5

நாம் எப்படிபட்ட படம் எடுத்தாலும் ஜாம்பவான் பெயர்கள் கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மானுக்காக திரைக்கு ரசிகர்கள் வருவார்கள் என சரியாக வேகாத படத்தில் சுற்றி சுற்றி ப்ரோமோஷன் செய்து ஏமாற்றிவிட்டனர். ஏற்கெனவே பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை மணிரத்னம் சுக்கு நூறாக்கினார். படத்திற்கு ஏன் தக் லைஃப் தலைப்பு ? யாராவது இயக்குநரிடம் கேளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP