herzindagi
image

குபேரா விமர்சனம் : சேகர் கம்முலா - தனுஷ் கொடுத்திருக்கும் தரமான படைப்பு

சேகர் கம்முலா இயக்கத்தில் நாகர்ஜூனா, தனுஷ் நடித்து வெளிவந்துள்ள குபேரா படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. வாய்ப்பு இருந்தால் தெலுங்கில் டப்பிங்கில் படத்தை பார்க்கவும்.
Editorial
Updated:- 2025-06-21, 16:16 IST

சேகர் கம்முலா இயக்கத்தில் நாகர்ஜூனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடித்து வெளிவந்துள்ள படம் குபேரா. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தனுஷ், நாகர்ஜூனாவை தாண்டி கவனம் ஈர்த்திட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கிய லவ் ஸ்டோரி, ஃபிதா மற்றும் சில படங்களே காரணமாகும். இவருடைய திரைக்கதை மிக வலுவாக இருக்குமென திரையுலகில் பேசப்படுகிறது. படத்தின் விமர்சனத்தை கடந்து முதல் 20 நிமிடங்களுக்காக இப்படத்தை தவறாமல் பார்க்கவும். நாம் எங்கோ கவனிக்க தவறும் விஷயத்தை விரிவாக விளக்கியுள்ளனர். வாருங்கள் குபேரா படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

குபேரா கதைச் சுருக்கம்

இந்திய பெருங்கடலில் எண்ணெய் வளத்தை சுரண்ட அரசியல்வாதிகளுக்கு தனியார் நிறுவன முதலாளி ஒருவர் கோடிகளில் மறைமுக லஞ்சம் கொடுக்கிறார். இதில் தனுஷ் தன்னை அறியாமலேயே சிக்கி கொள்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து கொண்டு தனுஷ் வில்லனுடன் ஆடும் எலியும் பூனை ஆட்டமே குபேரா.

குபேரா விமர்சனம்

அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சைக்காரன் தனுஷை நாகர்ஜூனா ஷெல் கம்பெனி முதலாளியாக மாற்றி 10 ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்ய முயல்கிறார். அதில் சின்ன குளறுபடி ஏற்படுகிறது. தன்னுடன் இருந்த பிற நபர்கள் கொலை செய்யப்படுவதை கண்டுபிடிக்கும் தனுஷ் அங்கிருந்து தப்பிச் செல்கிறார். ஒரு கட்டத்தில் தன்னை ஏன் தேடுகின்றனர் ? தனது பெயரில் உள்ள பணம் உள்ளிட்ட இதர விவரங்களை நாகர்ஜூனா மூலம் தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே குபேரா.

குபேரா படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • வட சென்னை, அசுரன் படங்களை விட தன்னால் மிகச்சிறப்பான நடிப்பை கொடுக்க முடியும் என தனுஷ் திரையில் காண்பித்து இருக்கிறார். தொடக்க பிச்சைக்காரன் காட்சி, சிறுவர்களுக்காக பிச்சையெடுக்கும் காட்சி, பிணத்தை எடுக்க செய்யும் காரியும் என்று அசுரத்தனமான நடிப்பு.
  • குபேரா படத்தின் மற்றொரு தூணாக நாகர்ஜூனாவை குறிப்பிடலாம். நேர்மை தன்னை உதறி விட்டது என உணரும் இடத்திலும், தவறு செய்துவிட்டோம் என தடுமாறும் இடத்திலும் அனுபவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
  • ராஷ்மிகா மந்தானா கவர்ச்சியில் மட்டுமல்ல இயல்பான நடிப்பிலும் தன்னால் முத்திரை பதிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.
  • 2 மணி நேரம் 57 நிமிடம் ஓடும் படத்தில் 2.30 மணி நேரம் விறுவிறுப்பான கதைக்களத்தில் நகர்கிறது. கார்ப்ரேட் வில்லனை சரியாக காமித்திருக்கும் படங்களில் குபேராவும் ஒன்று. 
  • தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மற்றும் ஒரு சில பாடல்களை நம்மை கவர்கின்றன. படத்திற்கு பலமாகவும் அமைகிறது. 
  • படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா திரைக்கதையில் கடினமாக உழைத்ததற்கு பாராட்டுகள்.

குபேரா படத்தின் நெகட்டிவ்ஸ்

  • கடைசி 20 நிமிடங்களை இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கலாம். உலகில் எல்லோரும் சமம் என்று சொல்வதற்கு எங்கேயோ சுற்றி சுற்றி கிளைமேக்ஸில் கோட்டைவிட்டுள்ளனர்.
  • பிச்சைக்காரனை கண்டுபிடிப்பது மிகக் கடினம் என்ற லாஜிக் ஓட்டை அணையில்  விழுந்த பொத்தல்.
  • படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருக்கலாம் என தோன்றியது.

குபேரா ரேட்டிங் - 3.5 / 5

நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை கண்டும் காணாத நபராக நீங்கள் இருந்தால் இந்த படம் பார்த்த பிறகு உங்களுக்கு ஒருவிதமான குற்ற உணர்வு ஏற்படும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com