herzindagi
image

அஜித்தின் விடாமுயற்சி பிப்.6ஆம் தேதி ரிலீஸ்; ட்ரெய்லரில் தெறிக்கவிட்ட அனிருத்

அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் காணப் போகும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.
Editorial
Updated:- 2025-01-16, 19:02 IST

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. விநோத்துடன் துணிவு படத்தை நிறைவு செய்த பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருந்தார். படத்தின் ஒன் லைன் அஜித்திற்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிடித்திருந்த நிலையில் கதை விரிவாக்கத்தில் விக்னேஷ் சிவன் சொதப்பியதால் அஜித்தை இயக்குவதற்கு தயாரிப்பு நிறுவனம் மற்றொரு இயக்குநரை தேடியது. இதையடுத்து மகிழ் திருமேனி அஜித்திடம் கதை கூறி அஜர்பைஜானில் சூட்டிங் சென்றனர். பல்வேறு காரணங்களுக்காக விடாமுயற்சி படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போன நிலையில் தற்போது பிப்ரவரி 6ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 2 நிமிடம் 21 விநாடி நீள ட்ரெய்லரை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

விடாமுயற்சி பிப்.6 ரிலீஸ்

விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். அர்ஜுன், ஆரவ், ரெஜினா, சில மலையாள நடிகர்கள் விடாமுயற்சி படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசைமையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக பொங்கலுக்கு விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் டிசம்பர் 31ஆம் தேதி 11 மணிக்கு தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியீடு தள்ளிப்போவதாக கூறி அஜித் ரசிகர்களின் மனதில் இடியை இறக்கியது.

மேலும் படிங்க  மத கத ராஜா விமர்சனம் : சுந்தர்.சி ஆக்‌ஷன், கவர்ச்சி, காமெடி ஃபார்முலா இனித்ததா ?

விடாமுயற்சி ரீமேக் படமா ?

படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. படம் ஆரம்பித்த நாளில் இருந்தே விடாமுயற்சி பிரேக்டவுன் படத்தின் ரீமேக் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. எனினும் மகிழ் திருமேனி மீது நம்பிக்கை வைத்து அஜித் இந்த படத்தை நடித்து கொடுத்துள்ளார். நிதி நெருக்கடி காரணமாக விடாமுயற்சி படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனதாகவும் மற்றொரு தகவல் உண்டு. இந்த நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். இரண்டு மாத இடைவெளியில் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

2023ல் பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தில் ஆரம்பித்த அஜித் ரசிகர்களின் அடுத்த படத்திற்கான காத்திருப்பு பிப்ரவரி 6ல் நிறைவு பெறப்போகிறது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com