பெரும்பாலானவர்கள் ஒரே இடத்தில் 8 முதல் 9 மணி நேரம் வரை உட்கார்ந்து வேலை பார்க்ககூடிய அமைப்பிலேயே பணிபுரிகிறார்கள். உடலை வருத்திக் கொள்ளும் கடுமையான வேலையை ஒப்பிடுகையில் உட்கார்ந்து வேலை பார்ப்பது சுலபமாக இருக்கலாம், ஆனால் நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் ஏராளம். உட்கார்ந்து வேலை பார்ப்பது தவறல்ல, ஆனால் நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது ஆபத்தானது.
அலுவலக வேலை மட்டுமின்றி காய்கறி நறுக்குவது, மாவு பிசைவது போன்ற சிறு சிறு வீட்டு வேலைகளையும் உட்கார்ந்து செய்யவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இது குறித்து முக்கியமான சில தகவல்களை இப்பதிவில் படித்தறியலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பூண்டு டீயின் அருமையான ஆரோக்கிய நன்மைகள்
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் மற்றும் ஆரோக்கியத்திற்கு குறுகிய மற்றும் நீண்ட கால பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக அமைகிறது. இந்த பழக்கத்தால் வளர்சிதை மாற்றம் சீர்குலையலாம், இத்தகைய சூழலில் உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை, உடல் பருமன், கெட்ட கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உங்கள் உடல் பலவீனமாகலாம். இதனால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது லிப்போபுரோட்டீன் லிபேஸ் போன்ற மூலக்கூறுகளை உங்கள் தசைகள் வெளியிடுகின்றன. இது கொழுப்பு மற்றும் சர்க்கரையை செயலாக்க உதவுகிறது. இந்நிலையில் உங்கள் நாளின் பெரும் பகுதியை நீங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து செலவிடும்பொழுது குறைவான மூலக்கூறுகளே வெளியிடப்படும். இது கீழ் முதுகு பகுதியில் அதிக கொழுப்பு சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்தாலும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படும் அபாயம் உள்ளது.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது முதுகு தசைகள், கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சாய்ந்த தோரணையில் நீங்கள் உட்காரும் பொழுது உங்கள் தசை நார்கள் மற்றும் முதுகு தண்டின் டிஸ்க்குகளில் அழுத்தம் ஏற்படலாம். காலப்போக்கில் இது முதுகெலும்பின் கட்டமைப்புகளை சேதப்படுத்துகின்றன. இதனால் அடிக்கடி முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படலாம்.
நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதால் உங்கள் கீழ் உடலில் உள்ள சக்தி வாய்ந்த தசைகள் பலவீனமடையலாம். வலுவற்ற கால் மற்றும் ப்ளூட் தசைகளால் உங்களுடைய நிலைத்தன்மை குறையலாம்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் கால்களில் இரத்தம் தேங்கிவிடும். இது வீங்கி வெரிகோஸ் வெயின் போன்ற பிரச்சனைக்கு வழி வகுக்கிறது. இவை கடுமையானால் இரத்தம் உறைவு போன்ற மோசமான நிலைகளும் உருவாகலாம்.
நீங்களும் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் திரையின் முன் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறீர்களா ? இவை உங்கள் கவலையை அதிகரித்து, தூக்கத்தில் இடையூறுகளை ஏற்படுத்தலாம். பெரும்பாலான நேரத்தை தனியாக செலவிடுவதாலும், உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து விலகி இருப்பதாலும் இது போன்ற கவலைகள் ஏற்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: சிறுநீரகம் பலம் பெற என்ன உணவு சாப்பிடலாம்?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com