
"ழகரம் பேக்ஸ்" உரிமையாளரும் பல பெண் தொழில் முனைவோரை உருவாக்கிய சாதனை பெண்மணியுமான விஷ்ணு பிரியா செல்லசாமிக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!!
ஆரோக்கியமான பேக்கிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக திருச்சியில் வசிப்பவர்களுக்கு இவர் ஒரு பரீட்சியமான பிரபலம். மைதா சர்க்கரை இல்லாமல் சுவையான பேக்கிங் கிடையாது என்ற வரையறையை உடைத்தெறிந்து ஆரோக்கியமான உணவை சுவையாகவும் கொடுக்கலாம் என்பதை நிரூபித்துள்ளார் விஷ்ணு பிரியா. திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பின் தொழில் தொடங்கி, தன்னுடைய தனித்துவத்தால் வளர்ந்து நிற்கும் இவர், பெண்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.
சென்னை திருவொற்றியூரில் பிறந்து வளர்ந்த ஒரு பொறியியல் பட்டதாரி இவர், பேக்கிங் செய்வதற்கு முன்பு பல்வேறு விஷயங்களை முயற்சி செய்திருக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதில் தொடங்கி திருமண மெஹந்தி கலைஞராகப் பணியாற்றுவது வரை தான் செய்த ஒவ்வொரு வேலையையும் ரசித்து சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆனால் ஆத்மார்தமாக அவரைத் திருப்தி அடைய செய்த விஷயம் "பேக்கிங்" தான். இவரது வெற்றி பயணத்தை இன்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கடைகளில் பெரும்பாலும் விற்கப்படும் கேக், பிஸ்கட் போன்ற உணவு வகைகள் கண் கவரும் வகையில் இருந்தாலும் அவை வயிற்றுக்கு உகந்ததல்ல. ஒவ்வொரு தாய்க்கும் தன்னுடைய குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த எண்ணத்துடன் தனது 8 மாத குழந்தைக்காக கோதுமை மாவில் செய்யப்பட்ட ஓம பிஸ்கட் தேடி இவர் அழைந்து இருக்கிறார். எந்த பேக்கரியும் கோதுமை மாவை பயன்படுத்தி சிறிய அளவில் பிஸ்கட் தயாரிக்க முன் வரவில்லை.
தன்னுடைய குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு தானே பிஸ்கட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விஷ்ணு பிரியா. ஆரம்பத்தில் அவை கடினமாக இருந்தாலும் பலமுறை முயற்சி செய்து தானே இதற்கான சரியான பக்குவத்தை கற்று அறிந்திருக்கிறார். தன்னுடைய குழந்தைகளின் வயிற்றுக்கு உகந்த பொருளைத் தயாரித்த பெருமிதம் இவரின் பேக்கிங் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ஆரோக்கியமான உணவிற்கான தேடல் இவரை ஒரு உணவு தயாரிப்பாளராக மாற்றியுள்ளது.

ஒருமுறை தான் தயாரித்த ராகி ப்ரௌனிகளை அருகில் நடைபெற்ற கண்காட்சியகத்தில் விற்பனை செய்துள்ளார். ஆச்சரியப்படும் விதமாக அவை அனைத்தும் அரை மணி நேரத்திலேயே விற்று தீர்ந்து விட்டன. ராகி, நாட்டு சர்க்கரை பயன்படுத்தி இவ்வளவு சுவையான பிரௌனி செய்ய முடியுமா? என்று பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு மாணவி தனக்கு இது மிகவும் பிடித்திருப்பதாகவும், இதைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த மாணவியின் கேள்வி இவரை ஒரு பயிற்சியாளராக மாற்றி உள்ளது. பல வருடங்களாகத் தான் கற்று கொண்ட விஷயத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் விஷ்ணு பிரியாவிற்கு பெரிய பாராட்டுக்கள் நிச்சயம் கொடுத்தாக வேண்டும்.
ஆரம்பத்தில் இவரின் பேக்கிங் வகுப்புகள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லாததால், ஒரு சிலர் மட்டுமே ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர். இருப்பினும் ஆரோக்கியமான பேக்கிங் குறித்த விழிப்புணர்வை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். இதற்குப் பிறகு இவருக்கு நிறைய ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. மேலும் பலரும் இதை கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை சூரியன் உதிக்கும் நேரத்திற்கு முன்னரே தனது பேக்கிங் வகுப்புகளைத் தொடங்கி விடுகிறார்.
பலரும் சொல்லிக் கொடுக்கத் தயங்கும் பேக்கிங் நுட்பங்களைத் தன்னிடம் பயிலும் அனைவருக்கும் வெளிப்படையாக சொல்லிக் கொடுக்கிறார். இவரிடம் பேக்கிங் பயின்ற அனைவரும் தங்களது வீட்டில் ஆரோக்கியமான முறையில் பேக்கிங் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இவரிடம் பயின்ற 50க்கும் மேற்பட்ட பெண்மணிகள் வீட்டிலேயே பேக்கிங் செய்து தொழில் முனைவோராக மாறி உள்ளனர்.
சுய தொழில் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு பல கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார் விஷ்ணு பிரியா.

திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் ஆரோக்கியமான முறையில் கேக், பிஸ்கட், பிரட், பீட்சா போன்ற பேக்கரி உணவுகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார் விஷ்ணு பிரியா.
வீட்டில் பதமாகத் தயாரிக்கப்பட்ட கோதுமை மாவு, முளைகட்டிய சிறுதானிய மாவு, நாட்டு சர்க்கரை, நாட்டுக்கோழி முட்டை, பசு நெய் செக்கில் ஆட்டிய எண்ணெயென ஆரோக்கியமான பொருட்களை மட்டுமே தன்னுடைய பேக்கிங்கிற்கு பயன்படுத்துகிறார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் சாப்பிடக்கூடிய வகையில் ஆரோக்கியமாகத் தயாரித்து வருகிறார். குழந்தைகளின் பாராட்டும் பெரியவர்களின் ஆசிர்வாதமும் பெற்று ழகரம் பேக்ஸை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். பேக்கிங் தனக்கு ஒரு தெரபி என்றும், வருங்காலத்தில் நம்பகமான ஒரு பேக்கரி தொடங்க வேண்டும் என்பதே தனது லட்சியம் எனவும் தெரிவுத்துள்ளார்.

நீங்கள் வேறு யாரையும் போட்டியாகக் கருத வேண்டாம். உங்கள் வாழ்க்கை பயணத்தில் சில தோல்விகளை சந்திக்கக்கலாம், சில மோசமான நாட்களைக் கடந்து வந்திருக்கலாம். ஆனால் அவை உங்களை வெற்றி பாதையில் கொண்டு செல்லும். முடியாதது என்று எதுவும் இல்லை. முயற்சி செய்யுங்கள், விரும்பியதை செய்யுங்கள். உங்கள் இலக்கை அடையும் வரை தடைகள் ஆயிரம் வந்தாலும் துவண்டு விடாதீர்கள். சரியான திட்டமிடல் மற்றும் உறுதியுடன் எல்லாம் சாத்தியமாகும்!
இந்தப் பதிவைப் படித்து, தானும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணும் ஒவ்வொரு பெண்மணியின் வெற்றி பயணத்தையும் எழுத ஆசைப்படுகிறேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள். என்னுடைய கனவும் நினைவாகட்டும்! வாழ்த்துக்கள்!
இந்த பதிவு கண்டிப்பாக உங்கள் மனதில் நிறைய நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்குத் தெரிந்த சாதனை பெண்மணிகளின் பெயர்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் உங்களுடைய உற்றார் உறவினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற சுவாரசியமான வெற்றிக் பயணங்களுக்கு ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
