herzindagi
image

Hibiscus for Hair Growth: குளிர்காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வு பிரச்சனை? கூந்தலை வலுப்படுத்த உதவும் செம்பருத்தியை இப்படி பயன்படுத்தவும்

Winter Hair Care Tips: குளிர்காலத்தின் போது சிலருக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்த செம்பருத்தி பூக்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-12-15, 14:56 IST

குளிர்காலத்தின் போது சருமம் வறண்டு போவது மட்டுமல்லாமல், தலைமுடியும் தனது இயற்கையான ஈரப்பதத்தை இழந்து வறண்டு போகும். இதனால் பொடுகு தொல்லை மற்றும் அதீத முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். சந்தையில் கிடைக்கும் இரசாயன பொருட்களை பயன்படுத்துவதை விட, நம் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் செம்பருத்தி இந்த பிரச்சனைகளுக்கு ஒரு மிகச்சிறந்த தீர்வாக அமையும்.

குளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் செம்பருத்தி:

 

காலங்காலமாக நமது முன்னோர்கள் கூந்தல் பராமரிப்பிற்கு செம்பருத்தியை பயன்படுத்தி வந்துள்ளனர். இது முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து, வேரிலிருந்து முடியை வலுவாக்குகிறது. குளிர்காலத்தில் செம்பருத்தியை பயன்படுத்தி எப்படி ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெறுவது என இதில் விரிவாக காண்போம்.

 

செம்பருத்தி மூலம் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்:

 

செம்பருத்தி பூ மற்றும் அதன் இலைகளில் முடி வளர்ச்சிக்கு தேவையான எண்ணற்ற சத்துகள் நிறைந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

 

கொலஜன் உற்பத்தி:

 

செம்பருத்தியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் கொலஜன் உற்பத்தியை தூண்டுகிறது. கொலஜன் சருமத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கும் மிக அவசியமானது. இதில் உள்ள அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை தூண்டி, கூந்தல் வேர்களை வலுப்படுத்துகின்றன.

 

முடியின் வேர்களை வலுப்படுத்துதல்:

 

தலைமுடியில் உள்ள துளைகள் அடைபடும் போது, முடி வேரிலிருந்து பலவீனமடைகிறது. செம்பருத்தியில் உள்ள சத்துகள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஆக்சிஜன் விநியோகத்தை சீராக்குகிறது. இதனால் முடி வேரிலிருந்து வலுப்பெற்று அடர்த்தியாக வளர்கிறது.

மேலும் படிக்க: Winter Hair Care Tips: குளிர்காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த குறிப்புகளை அவசியம் பின்பற்றவும்

 

முடி உதிர்வை குறைக்கும்:

 

செம்பருத்தி இலைகள், முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது செயல்படாத முடியின் வேர்க்கால்களை தூண்டி, புதிய மற்றும் ஆரோக்கியமான முடி வளர உதவுகிறது.

Winter Hair Care

 

வறட்சி மற்றும் பொடுகு நீக்கம்:

 

குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி, பொடுகுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. செம்பருத்தி ஹேர் பேக்கை பயன்படுத்தும் போது அது, உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது அரிப்பை குறைத்து, முடி வறண்டு போவதை தடுக்கிறது.

 

செம்பருத்தி ஹேர் பேக் பயன்படுத்தும் முறை:

 

கூந்தல் வளர்ச்சிக்கு செம்பருத்தியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இதில் காண்போம். இதனை தொடர்ந்து மேற்கொள்ளும் போது கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் குறையத் தொடங்கும்.

 

வலிமையான கூந்தலுக்கு உதவும் செம்பருத்தி மற்றும் தயிர் ஹேர் பேக்:

 

சிலருக்கு கூந்தல் மிகவும் பலவீனமாகி உதிரும் தன்மையில் இருக்கும். இதனை கட்டுப்படுத்த இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம். தயிருடன் செம்பருத்தி சேரும் போது அது முடிக்கு தேவையான சத்துகளை அளிக்கிறது.

 

தேவையான பொருட்கள்:

 

  • செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்கள் - 3 அல்லது 4
  • தயிர் - 4 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

  • செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போல அரைத்துக் கொள்ளவும்.
  • இவ்வாறு அரைத்த விழுதுடன் 4 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து, கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கலக்கவும்.
  • இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடியின் வேர் முதல் நுனி வரை தடவவும்.
  • ஒரு மணி நேரம் அப்படியே ஊறவிடவும்.
  • பின்னர், மிதமான ஷாம்பூ கொண்டு தலைக்கு குளித்து விடலாம்.

மேலும் படிக்க: Winter Hair Care Routine: குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைக்க இந்த 5 டிப்ஸை அவசியம் பின்பற்றவும்

 

வறண்ட கூந்தலுக்கு செம்பருத்தி மற்றும் தேங்காய் பால் ஹேர் பேக்:

 

குளிர்கால வறட்சியால் முடி சிக்குப்பிடித்து, கடினமாக இருந்தால் செம்பருத்தி மற்றும் தேங்காய் பால் ஹேர் பேக் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Hair Growth Tips

 

தேவையான பொருட்கள்:

 

  • அரைத்த செம்பருத்தி இதழ்கள் - 2 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 2 டேபிள் ஸ்பூன்
  • கற்றாழை ஜெல் - 4 டேபிள் ஸ்பூன்
  • தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

  • ஒரு கிண்ணத்தில் செம்பருத்தி இதழ்கள், தேங்காய் பால் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்க்கவும்.
  • அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இது ஒரு கெட்டியான பசை போல வர வேண்டும்.
  • இதை உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • பிறகு வெதுவெதுப்பான நீரில் மிதமான ஷாம்பு கொண்டு முடியை அலசவும். இது முடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

 

முடி வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி மற்றும் முட்டை ஹேர் பேக்:

 

வேகமாக முடி வளரவும், புதிய முடிகள் முளைக்கவும் முட்டையின் வெள்ளைக்கரு உதவும். கடும் முடி உதிர்வால் அவதிப்படுபவர்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

  • அரைத்த செம்பருத்தி பூ விழுது - 3 டேபிள் ஸ்பூன்
  • முட்டையின் வெள்ளைக்கரு - 2

 

செய்முறை:

 

  • இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் பிரித்து எடுக்கவும்.
  • அதனுடன் அரைத்த செம்பருத்தி பூ விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இந்த கலவையை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் சீராக தடவவும்.
  • 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலசவும். முட்டை வாசனை போகும் வரை நன்கு அலசுவது அவசியம்.

 

இது போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்தும் போது பொறுமை மிக அவசியம் ஆகும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இந்த செயல்முறைகளில் உங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்து பின்பற்றலாம். இதன் மூலம் குளிர்காலத்தில் முடி உதிர்வதை தடுத்து, அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தலை பெறலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com