herzindagi
image

கார்த்திகை மாதம் தொடங்கியாச்சு; ஐயப்ப பக்தர்கள் எப்படி விரதம் மேற்கொள்ள வேண்டும் தெரியுமா?

கார்த்திகை மாதம் மாலை அணிந்து பக்திமயமாக தங்களது விரதத்தை ஐயப்ப பக்தர்கள் தொடங்கியுள்ளனர். இந்தியா முழுவதும் ஐயப்பனை மனமுருகி வேண்டுபவர்கள் இந்த விரத நாட்களில் என்னென்ன கடைப்பிடிக்க வேண்டும் ? என இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
Editorial
Updated:- 2025-11-17, 22:28 IST


கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை. இங்கு ஐயப்பனைக் காண தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகைப் புரிவார்கள். அதிலும் கார்த்திகை மாதம் தொடங்கினாலே சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்கள் அனைத்து வீதிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கும். ஐயப்பனை மனமுருகி வேண்டும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் அதிகாலையிலேயே வீடுகள் மற்றும் நீர் நிலைகளில் புனித நீராடி விட்டு கோவில்களுக்குச் சென்று மாலை அணிந்துக் கொள்வார்கள். இன்றைக்கும் பல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களுடைய விரதத்தைத் தொடங்கிவிட்டனர். 41 நாட்கள் விரதம் இருந்து மண்டல பூஜை அல்லது மகர ஜோதி நாளில் இருமுட்டி கட்டி பம்பையிலிருந்து பாதயாத்திரை செல்வார்கள். கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை என ஐயப்ப பாடல்கள் பாடிக்கொண்டே மலையேற்றம் காண்பார்கள். இதற்கு முன்னதாக எப்படியெல்லாம் விரதம் இருக்க வேண்டும்? மாலை அணிந்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆன்மீக தகவல்கள் இங்கே..

 

ஐயப்ப பக்தர்கள் விரத முறை:

  • பொதுவாக கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மாலை அணிந்து 41 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். சிலர் 45 அல்லது 48 நாட்கள் தங்களது விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். துளசி மணி அல்லது ருத்ராட்ச மாலை 108 அல்லது 54 என்ற எண்ணிக்கையில் மாலை வாங்கி அணிந்துக் கொள்ள வேண்டும்.
  • நீலம், கருப்பு, காவி , மஞ்சள் என ஏதாவது ஒரு நிறத்தில் ஆடைகள் அணிந்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் குளித்துவிட்டு ஐயப்பனுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றாலும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
  • தினமும் தூங்கும் போது பாய், போர்வை, தலையணை உபயோகிக்கக் கூடாது. மாறாக ஒரு துண்டு மட்டும் விரித்து படுக்க வேண்டும்.
  • புகைப்பிடித்தல் , போதைப்பொருட்கள், உல்லாச சுற்றுலா பயணங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 41 நாட்கள் விரதம் இருப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

 

  • முதல் முறையாக மாலை அணியும் கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யவும்.
  • இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.
  • மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
  • இருமுடிக்கு பயன்படுத்தும் தேங்காய்களை ஐய்யப்பன் சந்நிதியில் கொடுத்து நெய் அபிஷேகத்திற்கு நெய் எடுத்தபிறகு, அந்த தேங்காய் மூடிகளை கற்பூர ஆழியில் போடுவதற்குப் பதிலாக அன்னதானம் செய்யும் இடங்களில் தரும் பட்சத்தில், ஐய்யப்ப பக்தர்களின் அன்னதானத்திற்கு பயன்படுத்த தருவது சிறப்பானதாக கூறப்படுகிறது.
  • ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ள வீட்டில் உள்ள பெண்களின் மாதவிடாய் காலத்தில் அவர்களை எந்த வேலையையும் செய்யச் சொல்லக்கூடாது. முடிந்தவரை ஆண்களே தங்களுக்குத் தேவையான விஷயங்களை நிறைவேற்றிக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க: "சுவாமியே சரணம்" ஐயப்ப பக்தர்களுக்கான விரத முறையும், கடைபிடிக்க வேண்டிய நெறிகளும்

  • கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. தினமும் மாலை அணிந்துள்ளவர்களின் வீடுகளில் நடைபெறும் பூஜைகள் மற்றும் பஜனைகளில் கலந்துக் கொள்ள வேண்டும்.
  • 48 நாட்கள் நடைபெறும் விரத முறைகளில் முடிந்தால் இருவேளைகளில் விரதம் இருக்கவும். இரவில் வாழை இலைப் போட்டு சாப்பிட வேண்டும். இயன்றவரை முடியாதவர்களுக்கு மாலை அணிந்திருந்த நாட்களில் அன்னதானம் செய்வது நல்லது.

இதுபோன்ற முறைகளைப் பின்பற்றி 41 அல்லது 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனின் முழு அருள் கிடைக்கட்டும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com