நாம் பிறந்த நேரத்தின் அடிப்படையில் ஜாதகம் எழுதப்படுகிறது. வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஜாதகம் பார்க்க வேண்டுமா எனக் கேட்டால் தேவையில்லை என்பது பதிலாகும். மிகுந்த துன்பம், தொடர் சிக்கல்கள், நிதி நெருக்கடி ஏற்படும் போது நிம்மதியான வாழ்வதற்கு ஜாதகம் பார்க்கலாம் என நினைப்போம். நல்ல ஆரோக்கியமான செழிப்பான வாழ்க்கை வாழ ஜாதகம் பார்க்கலாம். கர்ம வினை, ஜாதகத்தில் தோஷம் இருந்தால் அதை கண்டுபிடித்து சில எளிய வழிபாடு செய்தால் நம் வாழ்க்கை நற்திசையை நோக்கி பயணிக்கும். ஆனால் திருமணம் என்று வரும் போது ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியமா எனக் கேள்வி எழுகிறது.
அந்தக் காலத்தில் எல்லோருக்கும் ஜாதகம் எழுதும் வழக்கம் இருந்ததில்லை. இதன் காரணமாக திருமணத்திற்கு பெயர் பொருத்தம் பார்க்கலாம் என்ற யோசனை வருகிறது. சில சமயங்களில் ஆணுக்கு ஜாதகம் இருக்கும், பெண்ணுக்கு ஜாதகம் இருக்காது. அதே போல ஆணிடம் ஜாதகம் இல்லாததால் பெயர் பொருத்தமும் பெண்ணுக்கு ஜாதகம் இருந்து அதை வைத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது சரியா என்ற சந்தேகங்கள் திருமண வரன் தேடும் போது எழுகின்றன. இது அறிவுசார்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்
ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வதற்கு ஆண்-பெண் இடையே ஐந்து விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். கதி, மதி, உடல், மனம், குணம் ஆகியவற்றை நன்றாக புரிந்துகொண்டால் ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டிய தேவையில்லை.
கதி பொருத்தம் : ஆண்-பெண்ணின் குடும்ப சூழல், பின்னணி, வழி வழியாக குடும்பத்தில் வாக்குப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உள்ளது, நல்லது கெட்டதை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே கதி பொருத்தம்.
மதி பொருத்தம் : அறிவு சார்ந்த விஷயங்களில் செயல்பாடு, பொருள் மற்றும் செல்வம் ஈட்டக்கூடிய அறிவு உள்ளதா, பொருள் ஈட்ட முடியவில்லை என்றாலும் திறமையான நபரா என்பதை கண்டறிவது மதி பொருத்தம்.
மன பொருத்தம் : இன்றைய காலக்கட்டத்தில் நிறைய பேர் 25 வயது கூட ஆகாமல் அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். குழந்தை பிறந்து திருமண வாழ்வில் மூன்று வருடம் கூட நிறைவடைந்து இருக்காது அதற்குள் பிரிவை பற்றி சிந்திப்பார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் விவாகரத்தை நோக்கி நகர்வார்கள். இதில் தவறு எங்கு நடக்கிறது என பார்க்க வேண்டும். ஒருவர் மற்றொருவரின் மனதை சரியாக புரிந்துகொள்ளவில்லை என அர்த்தம்.
குணப் பொருத்தம் : சிலர் கோபமாக இருப்பார்கள். எனினும் குணம் இருக்கும். சிலர் சாந்தமாக இருப்பார்கள். எனினும் குணம் இருக்காது. கோபம் கொண்டு உடனடியாக சாந்தமடையும் நபர்களும் உண்டு. கொஞ்சமாவது பழக்கம் இருந்தால் மட்டுமே குணத்தை புரிந்துகொள்ள முடியும்.
உடல் : திருமணத்திற்கு முன்பு ஆசைப்படும் நபர் நோய் பாதிப்பு இல்லாத உடல் கொண்டவரா ? நல்ல பழக்கங்களுடன் ஆரோக்கியமாக வாழ்கிறாரா ? என்பதை அறிய வேண்டும்.
இந்த ஐந்து பொருத்தங்களும் இருந்துவிட்டால் தீர்க்கமான முடிவெடுத்து திருமணம் செய்யலாம். ஜாதகம் பார்க்க தேவையில்லை. 90 விழுக்காடு திருமணங்களுக்கு இது பொருந்தும்.
சிலரது திருமண வாழ்வில் மனைவி பிரிந்து செல்வது அல்லது கணவன் பிரிந்து செல்வது, யாராவது ஒருவர் சீக்கிரமாக இறந்துவிடும் நிலை இருக்கும். இதை தவிர்க்கவே ஜாதக குறிப்பு பார்க்க வேண்டிய நிலை இன்றும் உள்ளது.
ஆதி காலத்தில் ஜாதகம் என்ற விஷயம் கிடையாது. மேற்கண்ட ஐந்து பொருத்தங்களை புரிந்து கொண்டு திருமணம் செய்துவைத்தனர். நவீன உலகில் யாரை நம்புவது என்றே தெரியவில்லை. இதனால் ஒரு முறை ஜாதகம் பார்த்துவிடலாம் என்ற எண்ணம் பெற்றோருக்கு ஏற்படுகிறது.
மேலும் படிங்க பூப்பெய்திய நேரம்! ருது ஜாதகம் எழுதி திருமண பொருத்தம் பார்க்கலாமா ? அவசியமா ?
ரஜ்ஜு பொருத்தம் என்பது திருமண வாழ்வின் நீடிப்பு ( காலம் ) பற்றியது. சிலர் ரஜ்ஜு பொருத்தம் பார்த்துவிட்டு இவர்கள் இணைந்தால் உறவு நீடிக்காது என்று கூறிவிடுவார்கள். ரஜ்ஜு பொருத்தத்தை சரி செய்ய சில வழிபாடுகள் உண்டு. சில சமயங்களில் ரஜ்ஜு பொருத்தம் இல்லாமலே போகலாம். காதலித்த நபராக இருந்தாலும் மற்றொருவரின் நலன் கருதி சிரந்த முடிவை எடுப்பது நல்லது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com