herzindagi
image

Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை; சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களுக்கு அனுமதி

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சிறப்பு வழிபாடு மேற்கொள்வதற்காக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-11-17, 14:04 IST

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிறந்ததும், கேரள மாநில சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதனடிப்படையில், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

சபரிமலை ஐயப்பன் கோயில் பூஜை நேரம்:

 

மேலும், டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி மண்டல பூஜை நிகழ்வு நடத்தப்படும். அன்றைய தினம் வரை நாள்தோறும் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதில் சாமி வழிபாடு மேற்கொள்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவது வழக்கம்.

 

இதற்காக தினமும் அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்படும். அந்த நேரத்தில் இருந்து சாமி தரிசனத்திற்காக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தொடர்ச்சியாக, மதியம் 1 மணியளவில் உச்ச பூஜையுடன் கோயில் நடை அடைக்கப்படும். இதற்கடுத்து மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணியளவில் ஹரிவராசனம் பாடப்பட்ட பின்னர் நடை அடைக்கப்படும். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் 18 மணி நேரத்திற்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மண்டல பூஜை காலத்தின் போது குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

மேலும் படிக்க: கார்த்திகை மாதத்தில் திருச்செந்தூர் முருகனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

 

பக்தர்களுக்கான அனுமதி:

 

நடப்பு ஆண்டில் நாள்தோறும் 90,000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்திற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இணையம் வாயிலாக முன்பதிவு செய்வதற்காக 70 ஆயிரம் பேருக்கும், ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 20 ஆயிரம் பேருக்கும் தரிசனம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இணையம் மூலம் முன்பதிவு செய்துகொள்ள இயலாத பக்தர்கள், நிலக்கல், வண்டிப்பெரியார், பம்பா, செங்கனூர் மற்றும் சத்திரம் ஆகிய இடங்களுக்கு சென்று ஸ்பாட் புக்கிங் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சபரிமலை பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள்:

 

இந்த ஆண்டில் சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, சபரிமலை 18-ஆம் படிக்கு மேல் சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, சன்னிதானம் பகுதியில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவை எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Sabarimala temple

 

கேரள மாநில சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு:

 

இந்த சூழலில் கேரள மாநில சுகாதாரத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், நீர்நிலைகளில் குளிக்கும் தருணத்தில் மூக்கு வாயிலாக நீர் செல்லாமல் இருக்குமாறு கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், அமீபா நோய் பரவல் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு இருப்பவர்கள் தங்கள் மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இவை தவிர தங்கள் அடிப்படை சுகாதாரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பணமும் அதிர்ஷ்டமும் வீட்டில் நிலைத்திருக்க வேண்டுமா? ஏலக்காய் பரிகாரத்தை இப்படி மேற்கொள்ளுங்கள்!

 

ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்கும் நெறிமுறைகள்:

 

விரதம் இருந்து ஐயப்பனை வழிபடும் பக்தர்கள் 41 நாட்களுக்கு பல்வேறு நெறிமுறைகளை கடைபிடிப்பார்கள். இவ்வாறு விரதம் இருக்கும் காலத்தில் கோபம் கொள்வது உள்ளிட்ட அதிகப்படியான உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி சாந்தமாக நடந்து கொள்வார்கள். காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவும், மாலையில் சூரியன் மறையும் நேரத்தின் போதும் சுத்தமாக குளித்து ஐயப்பனை நினைத்து வழிபடுவார்கள்.

Sabarimala devotees

 

பெரும்பாலும், விரதம் இருக்கும் காலத்தில் கருப்பு, நீலம், காவி அல்லது பச்சை நிறத்தில் வேட்டி மற்றும் சட்டை அணிவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, விரத நாட்களில் பிரம்மச்சாரியத்தை தவறாமல் கடைபிடிப்பார்கள். மதுபானம் அருந்துவது, புகைப்பிடிப்பது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுவார்கள். இந்த சூழலில் அசைவம் சாப்பிடுவதையும் பக்தர்கள் தவிர்ப்பார்கள். குருசாமியின் அறிவுரைகளை முற்றிலும் பின்பற்றி நடப்பார்கள்.

 

இது போன்ற பல்வேறு விதமான வழிபாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து சபரிமலை ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com